Wednesday, 7 May 2014

36- பரதனும், குகனும்



கங்கையின் எதிர்க்கரையில், பெரும்படை தங்கியிருப்பதை நிஷாத மன்னன் குகன் பார்த்தான்.கைகேயியின் மகன் பரதன் பெரும்படையைத் திரட்டி வந்தது போலத் தெரிகிறது.இப்போது பரதன் ராமனின் பகைவன் அல்லவா? ராஜ்ஜியத்தையும் அபகரித்துக் கொண்டு, இப்போது ராமனைக் கொல்லவும் வந்து இருக்கிறான் போலும்...என எண்ணினான்.அவர்கள் ராமனைக் காண நல்ல எண்ணத்துடன் வந்து இருந்தால் ..நதியைக் கடக்க உதவுவோம்..இல்லையேல் நதியைக் கடக்க விடக்கூடாது என்றான்

பின் அவன் ஒரு படகில் ஏறி பரதனைக் காணச் சென்றான்.எதிர்க்கரையில் சுமந்திரன்,' அதோ நம் நண்பன் குகன் வருகிறான்.அவன் ராமனிடம் அன்பு கொண்டவன்.நம்மை வரவேற்க வருகிறான்.இவன் இந்த தேசத்துத் தலைவன்.இவனுக்கு இங்கு உள்ள அனைத்து இடங்களும் தெரியும்' என்றான்.

இதற்குள், குகன் நதியைக் கடந்து பரதனிடம் வந்து வரவேற்றான்.பரதன் குகனிடம், 'நாங்கள் ராமன் இருக்குமிடம் செல்ல வேண்டும் பரத்துவாஜ ஆசிரமம்' எங்குள்ளது என வினவினான்.

உடன் குகன், 'நானும், என் ஆட்களும் உங்கள் அனைவரையும் ராமன் இருக்குமிடம் கூட்டிச் செல்வோம்.ஆனால், ஒரு சந்தேகம்...இவ்வளவு சேனைகளுடன் ஏன் வந்து இருக்கிறீர்கள்? என எனக்கு சந்தேகமாய் இருக்கிறது' என்றான்.

அதற்கு பரதன், 'ஐயோ..என்னைக் கண்டு, ராமன் விஷயமாக பயப்படும் காலம் வந்து விட்டதே!' என வருந்தி, பின், 'குகனே..சந்தேகம் வேண்டாம்.தந்தையை இழந்த எனக்கு ராமன் தந்தை ஆவான்.அவனை எப்படியாவது அயோத்திக்கு அழைத்து போகவே வந்துள்ளேன்.சந்தேகம் வேண்டாம்' என்றான்.

பரதனுக்கு ,ராமனிடம் இருந்த அன்பு கண்டு , குகன் மகிழ்ந்து, அன்றிரவு, அவர்கள் அங்கு தங்க ஏற்பாடு செய்தான்.

ராமன் அங்கு தங்கியிருந்த போது, 'என்ன சாப்பிட்டான், எங்கு உறங்கினான்..லட்சுமணன் என்ன செய்தான்' என்றெல்லாம் பரதன், குகனிடம் வினவினான்.இரவு முழுதும் கண் உறங்காது, லட்சுமணன் வில்லும், கையுமாய் ராமன், சீதையைக் காத்தான் என அறிந்து மனம் வருந்தினான்.பின், அவர்கள் இரவு என்ன உண்டனர் என்றதற்கு குகன், அவர்கள் இரவு விரதம் இருந்தனர்.மறுநாள் காலை தலை முடியை சடையாக்கிக் கொண்டு நடந்து சென்றனர் என்றான்.

எப்படியாவது ராமனை திருப்பி அழைத்துச் சென்று, அவனை அரசனாக ஆக்குவேன்,பதினான்கு வருடங்கள் அவனுக்குப் பதிலாக நான் வனத்தில் இருப்பேன் என்று பரதன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்

மறுநாள் காலை குகன் வந்து சேர்ந்தான்.பெரியதொரு படகைத் தயார் செய்தான்.அதில் ஏறி கங்கைக் கரையைக் கடந்து பரத்துவாஜ முனிவரின் ஆசிரம் சென்றனர்.  

No comments: