Sunday, 11 May 2014

40- ராமன் வர மறுத்தல்



ராஜகுமாரர்களும், அவர்களது அன்னையரும் ஒரு இடத்தில் கூடினர்...என்ற செய்தி அறிந்ததும் அனைவரும் ராமன் திரும்ப அயோத்தி வந்து விடுவான் என மகிழ்ந்தனர்.

வசிஷ்டர், கோசலை, சுமத்திரை, கைகேயி ஆகியோரை பர்ணசாலைக்கு அழைத்துச் சென்றார்.வழியில், மந்தாகினி நதியைப் பார்த்து, 'இங்கிருந்துதான் தங்களுக்கு வேண்டிய தண்ணீரை ராம, லட்சுமணன் எடுத்துப் போவார்கள்' என்பதை அறிந்த கௌசல்யை அழுதாள்.

"சுமத்திரை, என் மகனுக்காக உன் மகன் இங்கிருந்து தண்ணீரை ஆசிரமத்திற்கு எடுத்துப் போகிறான்.அண்ணனுக்காக, தம்பி எந்த வேலையும் சந்தோஷமாக செய்வான்' என்றாள்.
நதிக்கரையில், ராமனும் லட்சுமணனும் தந்தைக்காக கிரியை செய்த இடத்தைப் பார்த்தனர்.தர்ப்பைப் புல் நுனி தெற்கு நோக்கி வைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்தனர்.பித்ருக்களுக்காக வைக்கப் பட்டிருந்த பிண்ணாக்கைப் பார்த்தனர்.

"இறந்தபின், உலகாண்ட மன்னனின் உணவு பிண்ணாக்கா? என அழுதாள் கௌசல்யை.

பர்ணசாலையில் ராம லட்சுமணரைப் பார்த்தனர்.வசிஷ்டரை, ராமன் வணங்கி அருகில் அமர்ந்தான்.அருகே பரதன்.

பரதன் என்ன பேசப் போகிறானோ என அனைவரும் காத்திருந்தனர்.

ராமன், பரதனை நோக்கி, 'பரதா...ஏன் இந்த உடை தரித்து வனம் வந்தாய்? அரசாள்வதை விட்டுவிட்டு மான்தோலும்,சடையுமாய் ஏன் இங்கு வந்தாய்?' என்றான்.

பரதன் மெல்ல பேச ஆரம்பித்தான்.

'உன்னை வனம் அனுப்பிவிட்டு, 'யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்டேனே' என மன்னன் வருந்தி மேலுலகம் சென்று விட்டார்.என்னப் பெற்றவளும் மகாபாவம் செய்தவளாகி உலகத்தால் பழிக்கப்பட்டு நரக வேதனை அடைந்துள்ளாள்.எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும்.நீ பட்டாபிஷேகத்திற்கு சம்மதித்து அயோத்தி திரும்ப வேண்டும்.,மறுக்கக்கூடாது.உரிய அரசன் இல்லா நகரம் இருளானது.பூரண சந்திரனாய் நீ இருளை அகற்ற வேண்டும்' என்று ராமன் கால்களைப் பிடித்து கொண்டான்.

பரதனை தழுவியபடியே ராமன், 'பரதா! நாம் நற்குலத்தில் பிறந்தோம்.நன்கு வளர்ந்தோம்.நீயும், நானும் , நம் சகோதரர்களும் ஒரு நாளும் தவறிழைக்க மாட்டோம்.உன்னிடம் தவறில்லை,நீயும் பெற்ற தாயை குறை சொல்லாதே.நம் தந்தை நமக்கு எந்த ஆணையும் இடலாம். அது அவர் உரிமை.தாயையும், தந்தையையும் கௌரவிப்பது மகன்கள் கடமை.ஆகவே..'வனம் செல்' என்பதை மகன் மறுக்கலாமா? நீயும் அரசாண்டு தந்தையின் ஆணையை நிறைவேற்றுவது தப்பு இல்லை.நானும் பதினான்கு  ஆண்டுகள் வனத்தில் தந்தையின் அந்திமக் கட்டளையை நிறைவேற்றுவேன்.அதுவே தருமம்' என்றான்.

இதைக் கேட்டும். பரதன் ராமனை மீண்டும், மீண்டும் வேண்டினான்.

'பரதா! உன்னால்தான் இப்படி நடந்தது என வருந்தாதே!அனைத்திற்கும் விதியே காரணம்.அயோத்திக்குச் செல்.தந்தையின் விருப்பப்படி நாம் இருவரும் நடக்க வேண்டும்' என்றான்.

பரதனுடன் வந்த அனைவருக்கும், ஒரு புறம் ராமனின் உறுதி கண்டு மகிழ்ச்சியும், ராமன் அயோத்தி வரமாட்டான் என்ற துக்கமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது.பரதனின் சகோதரப் பாசம் கண்டும் மகிழ்ந்தனர்.

No comments: