Monday, 12 May 2014

41- ஜாபாலியின் நாத்திகவாதம்



'தந்தையின் செயலை புறக்கணிக்காதே! உனக்கு உதவியாக தம்பி சத்துருக்கனன் உள்ளான்.அதேபோல இங்கு எனக்கு லட்சுமணன் இருக்கிறான்.நான்கு புத்திரர்களான நாம், தந்தையின் ஆணையை நிறைவேற்றுவோமாக' என ராமன் தீர்மானமாகக் கூறினான்.

இச்சமயத்தில், புரோகிதர் கூட்ட்டத்தில் இருந்த மகாவித்வான் ஜாபாலர் ராமனுக்கு நாஸ்திகம் உபதேசித்தார்.

"ராமா! தந்தையின் ஆணை...தந்தையின் ஆணை என்கிறாயே...தசரதன் என்பது ஒரு உடல்.அது பஞ்சத்துவம் அடைந்துவிட்டது.ஐம்பெரும் பூதங்களுடன் கலந்துவிட்டது.முடிந்துபோன அந்த உருவத்துக்கும் உனக்கும் இப்போது சம்பந்தம் இருப்பது போல பேசுவது அறியாமை.எதிரே உள்ள சுகங்களை விட்டு விட்டு, தருமம் என்றும் பரலோகம் என்றும் பேசும் மூடர்கள் போல பேசுகிறாய்.அயோத்தி நகரம் துக்கத்தில் உள்ளது.போய் பட்டாபிஷேகம் செய்து கொண்டு சுகங்களை அனுபவி.சந்தோஷமாய் இரு.பரதன்  சொல்வதைக் கேள்' என்றார்.

ராமனுக்கு ஜாபாலியின் நாத்திகப் பேச்சு அதிருப்தியை அளித்தது.'சத்தியத்தைவிட மேலான பொருள் உலகில் இல்லை' என்றான் ராமன்.

வசிஷ்டர் ராமனை சமாதானப்படுத்திவிட்டு, 'ராமா! ஜாபலி நாத்திகர் அல்ல. உன்னை அயோத்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவர் எண்ணம்.ஆகவேதான் அப்படிப் பேசினார்' என்றார்.

மேலும் அவர், 'ஒன்றை நினைவில் கொள்.பரதன் பரிதாப நிலைய்ல், பழிக்கு அஞ்சி உன்னை தஞ்சம் அடைந்துள்ளான்.அதை நீ எவ்வாறு மறுக்கலாம்? அண்டியவரை கைவிடுவது உன் சுபாவம் இல்லையே!தஞ்சம் அடைந்தவர்களை கைவிட மாட்டேன் என்பது உன் விரதம் அல்லவா?' என்றார்.

இப்போது பரதன் சுமந்திரனைப் பார்த்து, 'அண்ணன் என் பேரில் இரக்கம் கொள்ள மறுக்கிறான்.நான் இங்கேயே உபவாசம் இருந்து உயிரை விடுவேன்' என்றான்.

"பரதா! நீ செய்வது சரியல்ல.உன் கடமையைச் செய்.க்ஷத்திரிய தருமத்திற்கு விரோதமான செயலைச் செய்யாதே"என்றான் ராமன்.

பரதன், உடன் தன்னுடன் வந்த அனைத்து மக்களையும் பார்த்து, 'ராமன் நமக்கு வேண்டாமா?" என்று கேட்டான்.

மக்கள் அனைவரும், 'ராமச்சந்திரன் சத்தியம் தவறமாட்டான்.அவனை வற்புறுத்துவதில் பயனில்லை' என்றனர்.

பரதன், 'நான் ஒரு பாவமும் அறியாதவன்.அரசனின் ஆணையை நடத்தியேத் தீர வேண்டுமெனில், ராமனுக்குப் பதில் நான் வனத்தில் இருப்பேன்.ராமன் அயோத்தியில் இருக்கட்டும்' என்றான்.

ராமன் சிரித்து, 'இதை கடை வியாபாரமில்லை.ஒருவர் கடமையைஒருவர் ஆபத்துக் காலங்களில் செய்வதுண்டு.ஆனால் இது எப்போது நடக்கும் தெரியுமா? அண்ணனுக்கு விரதத்தை நிறைவேற்றும் சக்தி இல்லாமல் இருந்தால்தான்.என் விஷயத்தில் அப்படி இல்லை' என்றான்.

அப்போது வசிஷ்டர் பரதனைப் பார்த்து, "ராமனின் அனுமதியைப் பெற்று நீ அவனுக்காக ராஜ்ஜிய பரிபாலனம் செய். அப்படி செய்தால் பழியுமில்லை...சத்தியமும் காக்கப்படும்' என்றார்.

பரதனை, தன் மடியில் இருத்திக் கொண்ட ராமன்,' தம்பி, நான் தந்த ராஜ்ஜியமாக எண்ணி, அதை நீ ஒப்புக் கொண்டு, தந்தை சொல்படி நட' என்றான்.

அச்சமயம் ராமன், பரதன் இருவர் மேனியும் இரு சூரிய பிம்பங்களாய் ஒளி வீசின.

"அண்ணா நீ என் தெய்வம்.நீ சொல்கிற படியே செய்கிறேன்.உன் மிதியடிகளைத் தா.நான் உனக்குப் பதிலாக அவற்றை வைத்துக் கொண்டு, நீ வன வாசத்திலிருந்து திரும்பும் வரை ராஜ்ஜிய பரிபாலன காரியங்களைச் செய்கிறேன்' என்றான் பரதன்.

ராமனும், தன் பாதுகைகளை பரதனிடம் தர அதை வணங்கிப் பெற்றுக் கொண்டான் பரதன்.

பின், பரதன், தன் பரிவாரங்களுடன் அயோத்தி நோக்கிச் சென்றான்.வழியில், பரத்துவாஜரைப் பார்த்து, நடந்த விஷயங்களைக் கூறினான்.அவரும், பரதனின் முயற்சியையும், குணத்தையும் பாராட்டினார்.

அங்கிருந்து குகனின் இருப்பிடம் சென்று கங்கையைத் தாண்டி அயோத்தியை அடைந்தனர் அனைவரும்.

தந்தை இல்லாமல் சூனியமான அரண்மனையில் அன்னையரை இறக்கிவிட்டு சபா மண்டபம் வந்து வசிஷ்டர் முதலானோர்க்கு கூறினான்.

'என் துக்கம் பெரியது.அதை நந்திக் கிராமத்திலிருந்து சகித்து கொண்டு, அண்ணனிடம் வாக்களித்தபடி, காரியங்களைச் செய்து வருவேன்' என்றான்.

'இந்த ராஜ்ஜியம் ராமனுடையது.தற்காலிகமாக என்னிடம் ஒப்படைத்துள்ளான்.அண்ணனுக்குப் பதிலாக அவரது மிதியடியை ஆசனத்தில் அமர்த்தி நான் அதன் அடைமையாய் ..அரசாங்கம் நத்தி வருவேன்' என்றான்.

ராமன் காட்டில் பதினான்கு ஆண்டுகள் தங்கியிருந்தான்.பரதன்  நந்திக் கிராமவாசியாய் நாட்டில் தவம் இருந்தான் எனலாம்.

No comments: