Friday, 6 June 2014

44- விளையாட்டு வினையானது



ராமன், லட்சுமணன், சீதையுடன் பஞ்சவடிக்குப் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.போகும் வழியில் ஒரு பெரிய கழுகைக் கண்டனர். ராமன், கழுகைப் பார்த்து, "நீ யார்?' என்றான்.

அதற்கு அந்தக் கழுகு, "நான் ஜடாயு.உனது தந்தையின் நண்பன்' என்றது.பின், 'நீங்கள் வனவாசத்தில் இருக்கையில், சீதையை தனியாய் விட்டுப் போக நேர்ந்தால், நான் அவளுக்குத் துணையாய் இருப்பேன்' என்றது.

அதைக் கேட்ட ராமன், "காட்டில் ஒரு பெரு துணை நமக்குக் கிடைத்தது' எனக்கூறி மகிழ்ந்தான்.

பஞ்சவடியை அடைந்ததும், அந்த அழகான இடத்தை அனுபவித்தான் ராமன்."லட்சுமணா, நானும் , நீயும், சீதையும் இப்படிப்பட்ட மனோகரமான இடத்தில் எவ்வளவு காலமாயினும் சந்தோஷத்துடன் இருக்கலாம். மலைகள், மான் கூட்டங்கள்,பறவைகள், அவற்றின் இனிய கூக்குரல்கள், பூக்கள், தடாகங்கள், நீர்ப்பறவைகள்...அனைத்தும் ரம்மியமாய் உள்ளது.இங்கு சரியான இடத்தில் ஆசிரமம் அமைப்பாயாக' என்றான்.

லட்சுமணன், ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அழகாய் மண் சுவரை எழுப்பினான்.மேலே கூரையை வேய்ந்தான்.அழகாய் ஒரு ஆசிரமத்தை லட்சுமணன் உருவாக்கியதைக் கண்ட ராமன். அவனை கட்டி அணைத்து, 'லட்சுமணா..நீ என் தம்பி மட்டுமல்ல, நீயே எனக்கு தகப்பன் ஆனாய்' என ஆனந்தக்கண்ணீர் விட்டான்.

(அந்தக் காலத்தில் இவற்றையெல்லாம் கச்சிதமாய் கட்ட வேண்டிய அறிவும் பயிற்சியும் அரசகுமாரர்கள் கல்வியில் அடங்கியிருந்தன)

.பஞ்சவடி ஆசிரமத்தில் அவர்கள் சந்தோசமாகக் காலம் கழிக்கலாயினர்.

லட்சுமணன், ஒரு சமயம் ராமனிடம் பரதன் பற்றி கூறினான். "பாவம்..பரதன்..விரதங்களை அனுசரிக்கிறான்.நாம் வனம் வந்து விட்டதால், அவனும் சுக போகங்களை விட்டு விட்டான்.குளிர்காலத்திலும் தரையிலேயே படுக்கிறான்.சரயூ நதியில் குளிக்கிறான்.நம் தந்தையை ஒத்திருக்கிறான்.தாயைப்போல மகன் இருப்பான் என்பார்கள்.ஆனால், பரதனோ, தந்தையின் சுபாவத்தைக் கொண்டவன்"

ராமனும், 'லட்சுமணா! பரதன் பற்றி நீ கூறியதெல்லாம் உண்மை.எனக்கும் பரதன் ஞாபகமாகவே உள்ளது; என்றான்.

கோதாவரியில் குளித்துவிட்டு, இருவரும் ஆசிரமம் திரும்பினர்.அப்போது, அரக்கி ஒருத்தி அங்கு வந்தாள்.அவள் ராவணனின் சகோதரி சூர்ப்பணகை ஆவாள்.

அவள் ராமனைப் பார்த்ததும் காமவயப்பட்டு, :நீ யார்? எதற்கு வந்திருக்கிறாய்?.தவம் செய்பவர்கள் போல முடி தரித்து, மனைவியுடன் உள்ளாயே!" என்றாள்.

ராமனும், "நான் தசரத மகாராஜனின் மகன் ராமன். இவன் என் தம்பி லட்சுமணன்..இவள் சீதை, என் மனைவி. என் தாய், தந்தை ஆணைப்படி வனவாசம் செய்ய வந்துள்ளோம்.பெண்ணே! உன்னைப் பற்றிச் சொல்," என்றான்.

"விச்ரவசினுடைய வீர புத்திரன் ராவணன்.அவனது சகோதரி நான்.என் பெயர் சூர்ப்பணகை.ராவணனின் மற்ற சகோதரர்கள், கும்பகர்ணனும், விபீஷணனும் ஆவார்கள். அவர்கள் பலவான்கள். இவர்களைத் தவிர்த்து இக்காட்டில் அரசு புரியும் கரனும், தூஷணனும் என் சகோதரர்களே.என்னிஷ்டப்படி நான் எதையும் செய்வேன்.உன்னைக் கண்டது முதல் உன் மீது தீராக் காதல் கொண்டேன்.நீதான் இனி என் கணவன்.உன் மனைவியையும், தம்பியையும் நான் தின்று விடுகிறேன்.நீ என்னுடன் சந்தோஷமாய் இருக்கலாம் வா" என்றாள் சூர்ப்பணகை.

ராமனுக்கு அவளது நடவடிக்கைகளும், பேச்சும் விநோதமாய் இருந்தது.அவன் கூறினான்,"அரக்கியே! நீ என் மீது ஆசைப்படுவது உனக்குத் துன்பத்தையே விளைவிக்கும்.இவள் என் மனைவி.இவன் என் தம்பி.இவன் தனியாய் இருக்கிறான்.அழகிலும், வீரத்திலும் எனக்குச் சமமானவன்.அவனைக் கேட்டுப் பார்.அவன் உனக்குத் தகுந்த புருஷனாய் இருப்பான்'

மேலே நடக்க வேண்டியதை லட்சுமணன் பார்த்து கொள்வான் என ராமன் இவ்வாறு சொன்னான்.

சூர்ப்பணகையும், ராமனை விட்டு விட்டு லட்சுமணனிடம் வந்தாள்.அவனிடம் தன்னை மணக்கும்படிக் கூறினாள்.

லட்சுமணன், ராமனின் பரிகாசத்தைப் புரிந்து கொண்டான்.

':நீ யார்? நான் யார்?நான் என் அண்ணனின் அடிமை.ஒரு அடிமைக்கு நீ வாழ்க்கைப் படுவதை விட..ராமனுக்கு இரண்டாவது மனைவியாய் வாழ்க்கைப் படுவது மேல் அல்லவா?" என்றான்.

லட்சுமணன் சொன்னதை உண்மை என எண்ணீய சூர்ப்பணகை. "சீதையை இப்போதே ஒழித்து விடுகிறேன்.நீ என்னுடன் சந்தோசமாய் சேர்வயாக' என்று ராமனிடம் சொல்லியபடியே சீதையின் மீது பாய்ந்தாள்.

உடனே, லட்சுமணன் கத்தியை எடுத்து, அரக்கியை அங்கஹீனம் செய்துவிட்டு, :சீ..போ" என்றான்.

அவமானப்பட்டு, ரத்த காயத்துடன் சூர்ப்பணகை ஓலமிட்டபடியே காட்டிற்குள் மறைந்தாள்.

ஓடிப்போன சூர்ப்பணகை..கரன் இருந்த இடம் சென்று விழுந்தாள்.ராட்சச தலைவனான கரன், "என்னவாயிற்று?' என்றான்.

"என்னைப்பார்...எனக்கு இந்த அநியாயத்தைச் செய்த ராமனும், லட்சுமணனும் இங்குதான் இருக்கிறார்கள்.அவர்களை நீ தண்டிப்பாயாக' என்றாள்.

அதற்கு கரன், "விவரமாகச் சொல்.யார் உன்னை இப்படி செய்தார்கள்.அவனை நான் கொல்லப் போவது நிச்சயம்.முழு விவரங்களையும் சொல்" என்றான்.

சூர்ப்பணகை சொன்னாள், "இரு அழகிய மனிதர்கள், தசரதனின் மகன்களாம்..தவ வேடம் பூண்டு, ஒரு பெண்ணுடன் உள்ளனர்.அந்தப் பெண்ணை காரணமாக்கி என்னைத் தாக்கினர்.அவர்களை நீ வதம் செய்' என்றாள்.

தன் சேனாதிபதிகளை அழைத்த கரன், 'இவள் சொல்லும் அந்த துஷ்டர்களைக் கொன்று பிரேதங்களை இங்கு கொண்டு வாருங்கள்.அப்பெண்ணையும் இழுத்து வருங்கள்' என்றான்.

(வால்மீகி ராமாயணத்தில் ராம லட்சுமணன் சூர்ப்பணகை பாகம் சுருக்கமாகவே சொல்லப்பட்டுள்ளது) 

No comments: