Friday, 13 June 2014

46 - ராவணன்



பஞ்சவடி யுத்தத்தில் அரக்கர்கள் கூட்டத்தில் பிழைத்து ஓடிய அகம்பனன் இலங்கைக்குச் சென்று ராவணன் முன் நின்றான்.'ஜனஸ்தானத்தில் அனைவரும் மாண்டுவிட்டனர்.நான் எப்படியோ தப்பித்து வந்தேன்' என்றான்.

இதைக் கேட்டதும் ராவணன் மிகவும் கோபம் அடைந்தான்."யார் ஜனஸ்தானத்தை அழித்தவன்?யார் என் ஆட்களைக் கொன்றவன்?' என்றான்.

ராவணன் கோபத்தைப் பார்த்து பயந்த அகம்பனன், 'எனக்கு அபயம் தந்தால் சொல்கிறேன்" என்றான்.பின், ராமனைப் பற்றியும்,, அவன் கரணையும், தூஷணனையும் அழித்ததைக் கூறினான்.

தசரதனின் மகன் ராமன், யார் உதவியும் இன்றி இதைச் செய்தான் என்று கேள்விப்பட்டதும், "நான் அவனை அழிக்கிறேன்" என எழுந்தான்.

அதற்கு, அகம்பனன், "வேண்டாம்..நாம் ராமனை யுத்தம் செய்து வெல்ல முடியாது.நீங்கள் அபயம் தந்தால் தைரியமாக இதைச் சொல்கிறேன்.அவனைக் கொல்ல ஒரே வழி... அவன் மனைவி...அவனது மனைவி அவனுடனேயே இருக்கிறாள்.பேரழகி. அவள் மீது அவனுக்கு அபாரமான பிரியம்.அவளை அவன் இழந்தால் உயிரை நீப்பான்.இது நிச்சயம்.அதற்கான வழியைச் செய்யுங்கள்.'என்றான்.
சீதையின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டதும், ராவணனுக்கு ஆசை ஏற்பட்டது.'நாளைக் காலையே புறப்படுவேன்' என்றான்.

அடுத்தநாள் காலை கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தனது ரதத்தில் ஏறி ஆகாய மார்க்கமாக மாரீசன் இருக்கும் ஆசிரமம் சென்றான்.

"இவ்வளவு அவசரமாக வந்ததேன்?" என மாரீசன் வினவினான்.

"மாரீசா! என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்.ஜனஸ்தானம் அழிந்துவிட்டது. நமது சேனை நிர்மூலமாகப்பட்டுவிட்டது.அனைத்தும் ராமனால். அவனை பழி வாங்க அவன் மனைவியை தூக்கிப்போக நிச்சயித்துள்ளேன்.அதற்
கு உன் யோசனை வேண்டும்.' என்றான் ராவணன்.

"ராவணா...எவனோ உனக்கு வேண்டாத பகைவன் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளான்.அரக்க சமூகத்தின் அழிவை விரும்பி, இந்த யோசனையை சொன்னது யார்?பைத்தியக்காரனைப் போல ராமனின் மனைவியை விரும்பாதே!" என்றான் அறிவாளியான மாரீசன்.

அவனது அறிவுரை ராவணன் மூளையில் சரியாகப் பதிந்தது.

ஆனால்...விதி..இத்துடன் முடியவில்லை...

ராவணன் திரும்ப வந்து, தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.

யாராலும் ஜெயிக்க முடியாத வீரன்.தேவாசுரர்களுடனும்,மற்றவர்களோடும் செய்த யுத்தத்தில் உண்டான காயங்களின் வடுக்கள் அவனது கம்பீரத் தோற்றத்தை பிரகாசிக்கச் செய்தன.அவன் பராக்கிரமத்திற்கு எல்லையில்லை.அதர்மத்திற்கும் எல்லையில்லை.தேவர்களைத் துன்புறுத்துவது, யாகங்களைக் கெடுப்பது,பரஸ்திரிகளை பலவந்தம் செய்வது என அவனுக்கு சமாமான துஷ்டன் யாருமில்லை.

அவன் அசகாயசூரனாக, மரணபயனின்றி இலங்கையை ஆண்டு வந்தான்.பத்துத்தலைகள்,விசாலமான கண்கள் அவற்றுக்கு ஈடான மற்ற அவயங்கள் என கொண்டு பயங்கர சொரூபத்துடன் எல்லா ராஜலட்சணங்களும் கொண்டு திகழ்ந்தான்.

சிம்மாசனத்தில், மந்திரிகள் சூழ அவன் அமர்ந்திருந்தப் போது, மூக்கறுப்பட்டு அவலட்சண சொரூபத்துடன் சூர்ப்பணகை சபைக்குள் பிரவேசித்தாள்.

"மூடனே! ஜனஸ்தானத்தில் என்ன ஆயிற்று? உன்னுடைய பந்துகள், சேனைகள் அழிந்தன.ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளாய்.உன் மந்திரிகள் பாமரராகவே உள்ளனர்.ராமன் என்னும் மனிதப் பூச்சி தரைமீது நின்று உன்னுடைய அவ்வளவு பேரையும் கொன்றுவிட்டான்.உன் தங்கையான எனக்கு என்னவாயிற்று? உனக்கும், உன் ஆட்களுக்கும் பயந்து வாழ்ந்த ரிஷிகளுக்கு ,இந்த ராமன் அபயம் அளித்துவிட்டான்.தண்டகாரண்யத்தில் அனைவருக்கும் உன் மீது இருந்த பயம் போய்விட்டது.உனக்குத் துன்பம் நெருங்கிவிட்டது.உன் குடிமக்களும் இனி உன்னை மதிக்கமாட்டார்கள்.கரனையும்,திரிசிரஸையும், தூஷணனையும் கொன்று நிர்மூலமாக்கிவிட்ட ராமனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள்.சீதை என்று பெயர்.அவளைப் போன்ற அழகியை இதுவரை நான் கண்டதில்லை.அவள் உன்னுடையவளாக இருக்க வேண்டும்  என எண்ணுகிறேன்.உனக்காக அவளை தூக்கிவர நான் நினைத்தேன் ராமனின் தம்பி லட்சுமணன் இதைப் பார்த்துவிட்டான்.அதனால் என்னை அங்கஹீனப்படுத்திவிட்டான்.உன்னால்தான் எனக்கு இந்த நிலை.இப்பழியைத் தீர்த்து..உன் மானம் காக்க ஆசையிருந்தால் புறப்படு' என்றாள்.(ராவணனுக்கு இருந்த பெண்ணாசையை சூர்ப்பணகை தன் எண்ணம் நிறைவேற தூண்டிவிட்டாள் எனலாம்)

அவள் மேலும், :சீதையைப் போன்ற அழகியை நான் பார்த்ததில்லை.உன்னையன்றி வேறு யாரும் அவளை அனுபவிக்கக் கூடாது.நமது குலத்தில் நீ இழந்த கௌரவத்தை அவளை அடைவதன் மூலம் நீ காப்பாற்றுவாயாக" என்றாள்.    

தன் தங்கை சூர்ப்பணகை இடித்துச் சொன்ன பேச்சும், சீதையின் அழகைப் பற்றிச் சொன்னதும் ராவணனை யோசிக்கவைத்தது.

யாருக்கும் சொல்லாமல், தன் தேரில் ஏறி மீண்டும் மாரீசன் ஆசிரமம் வந்தான்.மாரீசனும் மறுபடியும் வந்ததேன்? என வினவினான்.

நான் பெரும் துயரத்தில் உள்ளேன்.என் உடன் பிறந்தவர்கள் ஜஸ்தானத்தில் அரசு புரிந்து வந்தார்கள்.இப்போது ராமன் அங்கு அனைவரையும் கொன்று விட்டான்.தண்டகாரண்யத்தில் ராட்சக்ஷசர்கள் பயமின்றி ரிஷிகள் கொண்டாட்டமாய் உள்ளனர்.ராமன், எந்தக் காரணமும் இன்றி தன் மிருகபலத்தின் அகங்காரத்தால் சூர்ப்பணகை மூக்கை அறுத்து நம் குலத்திற்கு அவமானம் இழைத்துள்ளான்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருப்பதா? நான் சொல்வதைக் கேள்! நீ ஒரு பொன் மானாக மாறவேண்டும்.கண்ணைக்கவரும் மானாக ஆகி சீதைக்கு எதிரில் உலவ வேண்டும்.அவள் நிச்சயம் மானைப் பிடித்துத் தரச் சொல்லுவாள்.அதற்காக அவளைவிட்டு அவர்கள் விலகும் சமயம் நான் அவளைப் பிடித்துத் தூக்கி வருவேன்.மனைவியை இழந்த அவன் மனம் உடைந்து பலவீனமடைவான்.அப்போது அவனைத் தாக்கி பழி வாங்குவேன்' என்றான்.

ராமனின் பராக்கிரமத்தை அறிந்த மாரீசன், ராவணனின் எண்ணத்தைக் கேட்டு பயந்தான்."இது விதி.இவனை இனித் தடுக்க முடியாது" என உணர்ந்தான்.

ராவணனின் அரசியல் நீதி, சூர்ப்பணகையின் அவமானம் இவற்றையும் மீறி சீதையை அபகரிக்கும் எண்ணம் ஒன்றே அவனுக்கு இருப்பதை அறிந்தான்.

No comments: