கரனுடைய பதினான்கு சேனைத்தலைவர்களுடன் சூர்ப்பணகை ராமன் ஆசிரமம் வந்தாள்.ராம, லட்சுமணனைக் காட்டி இவர்கள் தான் என்னை அங்கஹீனம் செய்தவர்கள். அவர்களை உடன் கொல்லுங்கள் என்றாள்.
ராமன், லட்சுமணனிடம் சீதையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு' வில்லை கையில் எடுத்து நின்றான். பின், எதிர்க்க வந்தவர்களைப் பார்த்து, தான் யார் என்பதைக் கூறினான்."ரிஷிகளின் கட்டளைப் படியே அரக்கர்களைத் தொலைக்கவே நாங்கள் வனம் வந்துள்ளோம்.நீங்கள் உயிர் தப்பிக்க விரும்பினால் திரும்பிச் செல்லுங்கள்' என்றான்.
இதற்கு அரக்கர்கள் சம்மதிக்காததால், யுத்தம் ஆரம்பமானது.ராமனுக்கு, அவர்களைக் கொல்ல அதிக நேரம் ஆகவில்லை.அனைவரும் மாண்டனர்.
சூர்ப்பணகை மீண்டும் கரனிடம் வந்து புலம்பினாள்.நடந்தைக் கூறினாள்.ராமனின் வீரத்தால், உன் சேனாதிபதிகள் அனைவரும் மாண்டனர்,நீ புறப்படு, ராமனிடம் போரிட்டு அவனை அழி" என்றாள்.
சகலவித ஆயுதங்களுடன் பெரிய சேனை, தூஷணன் தலைமையில் செல்ல, கரனும் பின்னால் தேரில் சென்றான்.
பெரும் சேனை வரும் ஓசையைக் கேட்ட ராமன் லட்சுமணனிடம் , சீதை அழைத்துக் கொண்டு பாதுகாப்பாக மலைக்குகையில் இருக்கச் சொன்னான்.நான் வருபவர்களைப் பார்த்து கொள்வேன் என்றான்.
ஒருவனாக, பெரும் சேனையை எதிர் கொண்ட ராமன் முகத்தில் ஓளி வீசியது.முகம், தேஜசுடன் பளபளத்தது.ராமன் வில்லைப் பிடித்து நாணேற்றி நின்றான்.ஆகாயத்தில் மேகங்கள் சூழ்வது போல படை ராமனை சுற்றி வளைத்தது.
கோரமான யுத்தம்.
ராமனின் பாணங்களுக்கு ராட்சச வீரர்கள் மாண்டு வீழ்ந்தனர்.தூஷணன் நேரில் ராமன் எதிரில் நின்றான்.கொஞ்சநேரம் அவன் அட்டகாசமாய் யுத்தம் செய்தான்.கடைசியில் அவனது இரு கரங்களும் துண்டிக்கப்பட்டு தரையில் வீழ்ந்து மாண்டான்.கரனின் சேனை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்தது.கடைசியில் திரிசிரஸும், கரனும் மட்டுமே எஞ்சி நின்றனர்.
திரிசிரஸ், "நான் ராமனை வெல்வேன்.இல்லையெனில், நான் மாண்டபின் நீ ராமனை எதிர்ப்பாயாக' என்றான்.திரிசிரஸ் என்னும் மூன்று தலை அரக்கன் தேரில் ஏறி ராமனைத் தாக்கினான்.பின், ராமனால் தாக்கப்பட்டு ரத்தம் கக்கித் தரையில் விழுந்து மாண்டான்.
இதைப் பார்த்த கரன் பலத்த யுத்தம் செய்தான்.கரன் செலுத்திய அம்பு ராமனின் கவசத்தைக் கிழித்தது.கவசம் அறுந்து கீழே விழுந்தது.
ராமன், கரனின் ரதம், அம்பு என அனைவற்றையும் துவம்சமாக்கினான்.ரதத்தையும் வில்லையும் இழந்த கரன் கதாயுதம் எடுத்து ராமனை எதிர்த்தான்.
ராமன், கரனைப் பார்த்து, "ஏ! கரனே...உலகத்தார்க்கு துக்கம் விளைவிப்பவன் எவ்வளவு வீரனானாலும் மாள்வான்.நீ மக்களை இம்சித்து வந்தாய்.ரிஷிகளைத் துன்புறுத்தினாய்.அந்தப் பாவங்களுக்கான பயனை இப்போது அடையப் போகிறாய்.' என்றான்.
பதிலுக்குக் கரனும், "அரக்கர்கள் பலரை கொன்றுவிட்டாய் என்ற கர்வம் வேண்டாம்.காட்டுப் புல் எரிவது போல பிரகாசமாய் பேசுகிறாய்.இப்போது உன் உயிரைக் கொண்டு போகும் எமன் நான்' என்று கூறியவாறு, தனது கதாயுதத்தை ராமனை நோக்கி எறிந்தான்.
ராமன் விட்ட பாணங்களால் காதாயுதம் துண்டிக்கபட்டது.
கரன், ஒரு ஆச்சா மரத்தை வேருடன் பிடுங்கி ராமன் மீது வீசினான்.இதுவும் ராம பாணங்களால் வெட்டி தள்ளப்பட்டது.
பின் ராமன், தனது பாணங்களால் கரனை ரத்த வெள்ளத்தில் மிதக்கச் செய்தான்.பின், தன் இந்திர பாணத்தை கரன் மீது செலுத்த, கரன் மார்பு பிளந்து, மாண்டான்.
தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.ரிஷிகள் இனி கவலையின்றி வனத்தில் தவமிருக்கலாம் என மகிழ்ந்தனர்.
(ராமன், ஒருவனால் இது எப்படி சாத்தியம் ? என்ற கேள்வி எழும்பலாம்.இத்தருணத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.நாராயணன் தான்தான் ராமன் என அறிவான்.ஆனால் ராமனோ தான் நாராயணன் என அறியான்)
No comments:
Post a Comment