மாரீசன் ராவணனைப் பார்த்துச் சொன்னான், "நீ சொன்னதையெல்லாம் கேட்டேன்.உனக்கு நன்மையைச் சொல்ல விரும்புகிறேன்.ராமனைப் பற்றி உனக்குச் சொன்னவர்கள் உண்மையைச் சொல்லவில்லை.ராமன் மகாவீரன், உத்தம குணங்கள் வாய்ந்தவன்.அவனை விரோதித்துக் கொண்டு, அழிந்துபோக வழியைத் தேடாதே!
ராமன் தன் தந்தை தன் மனைவி கைகேயிக்குக் கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற வனம் வந்துள்ளான்.ராமன் தருமமே உருவெடுத்தவன்.அறவழியில் நடப்பவன்.அவன் மனைவி மீது நீ ஆசைப்படலாமா? ஜனகனின் புத்திரி சீதையை நீ தீண்டினால் எரிந்து போவாய்!
ராமனுடன் யுத்தம் புரிவதில் நீ வெற்றி பெற மாட்டாய்.முன்னால் நான் தேகபலத்தால் ரிஷிகளைக் கொன்று, அவர்களின் விரதங்களையும், வேள்விகளையும் அழித்து வந்தேன்.அந்தக் காலத்தில் ஒருசமயம் விசுவாமித்திரனின் வேள்வியை கெடுக்கப் போனேன்,.விசுவாமித்திரர், தசரதனைக் கேட்டு சிறுவனாய் இருந்த ராமனை வேள்வியைக் காக்க அழைத்து வந்தார்.அந்தச் சிறுவன். தன் வில்லை வளைத்துச் செலுத்திய பாணமானது என்னை கடற்கரையில் கொண்டுபோய்த் தள்ள நான் நினைவிழந்தேன்.
சீதையின் மீது ஆசைப்பட்டு. அழகும்,செல்வமும் நிறைந்த உன் நகரை பாழாக்கி நீ மரணம் அடையாதே!உனக்கு ராமனின் மீது உள்ள கோபம் பொறுத்துக் கொள்ள முடியாவிடின், நேராக ராமனுடன் யுத்தம் செய்! " இவ்வாறெல்லாம் நீண்ட நேரம் மாரீசன் அறிவுரைக் கூறியும் ராவணன் பிடிவாதமாய் இருந்தான்.
"நான் முற்றிலும் யோசித்து முடிவுக்கு வந்து விட்டேன்.ஒரு மானிடப் பதருடன் நான் யுத்தம் செய்ய மாட்டேன்.ஊரிலிருந்து துரத்தப்பட்டவன் அதமன்.ஒரு பெண்ணின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு ராஜ்ஜிய பதவியை இழந்த முட்டாள்.அவன் மனைவியைத் தூக்கிப் போய் அவனை அவமானப்படுத்துவதே அவனுக்கு சரியான தண்டனை ஆகும். நீ மாய மான் வடிவம் எடுத்து சீதையைக் கவர்ந்து இழுக்க வேண்டும்.மனைவிக்குப் பிடித்த மானைப் பிடிக்க ராமன் செல்வான்.நீ அவனை வெகு தூரம் அழைத்துச் சென்று, "சீதா! லட்சுமணா" என ராமன் குரலில் உரக்கக் கத்த வேண்டும்.ராமனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என எண்ணி, சீதை லட்சுமணனை உதவிக்குச் செல்லுமாறு கூறுவாள்.நான் அச்சமயத்தை பயன் படுத்திக் கொண்டு சீதையைக் கவர்ந்து கொண்டு லங்கைக்குப் போவேன்.இதற்கு நீ உதவ வேண்டும்" என்றான் ராவணன்.
காமத்தால் தூண்டப்பட்டு இவன் மரணிப்பது விதி.இவனால் கொல்லப்பட்டு என் உயிர் போவதை விட, ராமன் என்னைக் கொல்வதே நல்லது என்று எண்ணிய மாரீசன் ராவணன் சொன்னதற்கு சம்மதித்தான்.பின் ராவணனிடம், "ராவணா! நீ சொல்வதுபோல நான் செய்தால், நான் மடியப் போவது நிச்சயம்.உன் உயிரும் அதனால் சீக்கிரம் போகும்.லங்கை அழிவதும் நிச்சயம்.சரி, வா தண்டகாரண்யம் போகலாம்" என்றான்.
தண்டகாரண்யத்தில், ஒரு வாழைத்தோட்டத்தின் நடுவே ராமனின் ஆசிரமத்தைக் கண்டனர்.ராவணன், மாரீசனிடம்,"அதோ ராவணன் ஆசிரமம்.நான் சொன்னதை நீ செய்வாயாக" என்றான்.மான் உருவம் எடுத்தான் மாரீசன்.
அழகான மான்.ஒவ்வொரு அங்கமும் அழகு.இதுவரையில் உலகில் காணப்படாத மான்.தங்கமானாக, ரத்தினமணிகள் இழைத்த மானாக, அது ஆசிரமத்திற்கு முன் மேய்ந்து, துள்ளிக் குதித்தது'
வனத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த் சீதை, அந்த மானைப் பார்த்ததும், அதைப் பார்க்க ராம, லட்சுமணனைக் கூவி அழைத்தாள்.அவர்களும் வந்துப் பார்த்தனர்.
லட்சுமணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இது மானல்ல....மாரீசன்.என அறிந்துகொண்டான்.இதற்கு முன்னர் கூட அவன் மான் உருவம் தரித்து, பலரை ஏமாற்றியுள்ளதை ராமனும் அறிவான்.லட்சுமணனும் அறிவான்.
லட்சுமணன்.'இயற்கையில் இப்படி ஒரு உருவம் கிடையாது.இது ராட்சஷனின் மோசம் என்றான்.
ஆனால் சீதையோ....'அந்த மானை பிடித்துத் தாருங்கள்.இவ்வளவு அழகு மானை நான் பார்த்ததே இல்லை' என்றாள்.
ஒருவருக்கு ஒன்றின் மீது ஆசை ஏற்பட்டுவிட்டால், யார் அதைப் பற்றி தவறாக சொன்னாலும், அவர் மீது கோபமே ஏற்படும்.சீதைக்கும் அதுவே நடந்தது.
"அதன் கொம்பைப் பாருங்கள்.எனக்கு அது கண்டிப்பக வேண்டும்; என்றாள்
"லட்சுமணன் சொன்னதில் உண்மை இருப்பினும்.அந்த மான் ராட்சஷனாய் இருந்தால் கொன்றுவிடலாம்.அந்த மானின் தோலை சீதைக்குத் தரலாம்.'என ராமன் தீர்மானித்துக் கொண்டு, "லட்சுமணா! வில்லும், அம்பும் கொண்டு வா!" என்றான்.
"லட்சுமணா! நீ சீதையை பத்திரமாகப் பார்த்துக்கொள்'என சொல்லிப் போனான்.
லட்சுமணன் ராமனுக்கு எச்சரிக்கை செய்தான்.எப்போதும் மிக ஜாக்கிரதையாய் இருக்கும் ராமன். சீதையின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மானைத் தொடர்ந்தான்.
ராவணனுக்கு, சீதையைக் கவர்ந்து செல்ல போதிய நேரம் தர வேண்டும் என எண்ணிய மான் ராமனை வெகு தூரம் இழுத்துச் சென்றது.
சிறிது நேரம் கழித்து, இனி தொடர்ந்தது போதும் என ராமன், வில்லை வளைத்து அம்பை செலுத்தினான்.மாரீசனும், "ஐயோ! சீதா...ஐயோ! லட்சுமணா " என உரக்கக் கூவி மாண்டான்.மாளும் நேரம், உண்மை உருவம் தாங்கி...பூமியில் ரத்தம் பெருக இறந்தான்.
லட்சுமணன் சொன்னது எவ்வளவு உண்மை என எண்ணி ராமன், லட்சுமணனை எண்ணி பெருமைப் பட்டான்.
ஆனால்...அதே நேரம்.......
No comments:
Post a Comment