சுக்ரீவன் ஒரு பெரிய கர்ஜனை செய்து வாலியை போருக்கு மீண்டும் அழைத்தான்.வாலி திடுக்கிட்டான்.தன்னிடம் பயந்து ஓடியவன், மீண்டும் வந்து போருக்கு அழைக்கிறானே என எழுந்தான்.
'இப்பொழுது வேண்டாம்.நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்றாள் வாலியின் பட்ட மகிஷி தாரை."தம்பியுடன் இப்போது யுத்தம் செய்வது சரியில்லை.ஏற்கனவே பயந்து ஓடி..ஒளிந்தவன் திரும்ப தைரியம் கொண்டு அட்டகாசம் செய்கிறான் எனில், ஏதோ மோசமும், அபாயமும் உள்ளதாக நான் எண்ணுகிறேன்,நம் குமரன் அங்கதன் என்னிடம் ஒரு விஷயம் சொன்னான்''யாரோ அயோத்தியிலிருந்து ஒரு ராஜகுமாரன் வந்திருக்கிறானாம்.பலவானாம்.அவனது நட்பு சுக்ரீவனுக்குக் கிடைத்திருக்கிறதாம்.அதனால்தான் சுக்ரீவனுக்கு இந்தத் தைரியம்.உன் தம்பி நல்லவன்.மறுபடி அவனை அழைத்து, விரோதம் மறந்து ஒன்றாக இருப்போம்...அதுவே நலம்" என்றாள்.
மனைவி சொன்ன புத்திமதியை வாலி மதிக்கவில்லை.
'என் தம்பி இப்போது எனக்கு எதிரி.அவன் யுத்தத்திற்கு அழைக்கையில் சும்மாயிருக்க முடியுமா? நீ ராமனைப் பற்றி கவலைப்படாதே.அவன் தர்மம் அறிந்தவன்.பாபத்துக்கு பயந்தவன்.அநியாய காரியத்தில் இறங்க மாட்டான்.சுக்ரீவனை நான் கண்டிப்பாக கொல்ல மாட்டேன்.ஆனால் அவன் கர்வத்தை அடக்குவேன்' என்றான் வாலி.
தாரையும், கண்களில் கண்ணீருடன் வாலிக்கு விடை கொடுத்தாள்.
வாலி சுக்ரீவனிடம் சென்றான்"உயிரின் மீது ஆசை இருந்தால் ஓடிப்போ" என்றான்.சுக்ரீவனும் கோபமாக மறுமொழி கூற...யுத்தம் ஆரம்பமானது.சுக்ரீவன் ஒரு ஆச்சா மரத்தைப் பிடுங்கி வாலியைத் தாக்கினான்.வாலியும், கோபத்துடன் மரங்களைப் பிடுங்கி சுக்ரீவனைத் தாக்கினான்.சிறிது நேரத்தில் சுக்ரீவன் பலம் குறைந்தது.
இனி சுக்ரீவன் தாங்க மாட்டான் என மறைந்திருந்த ராமன் உணர்ந்தான்.தன் வில்லை வளைத்து அம்பை விட்டான்.அது வாலியின் மார்பை துளைத்தது.வாலியின் ஆயுள் முடிந்தது.வாலியும் ரத்தம் பெருக தரையில் விழுந்தான்.உயிர் நீங்கும் முன் வீரர்கள் அதிகமாக ஜொலிப்பார்களாம்.வாலியும் அப்படி ஜொலித்தான்.
வாலி, அம்பு வந்த திசையை நோக்கினான்.அப்போது ராமலட்சுமணர்கள் அங்கு வந்தனர்.ராமனின் குற்றத்தை எடுத்துக் காட்டி , கண்டித்து வாலி பேசலானான்.
"ராமா! உத்தம குலத்தில் பிறந்த நீ ஏன் இப்படி செய்தாய்? உன் நற்குணங்களை உலகு அறியும்.அப்படியிருக்க...நான் வெறொருவருடன் யுத்தம் செய்கையில் நீ மறந்திருந்து ஏன் கொன்றாய்? உனது புகழுக்கு இது இழுக்கல்லவா? தர்மம், சத்தியம்,பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களைப் பெற்றவன் நீ.அவை அனைத்தும் என்னவாயின?என் மனைவி உன்னைப் பற்றிச் சொல்லி என்னை எச்சரித்தாள்.அவள் பேச்சைக் கேட்காது வந்தேன்.நான் உன்னுடன் யுத்தம் செய்யவா வந்தேன்? மறைந்திருந்து என்னைக் கொன்ற நீ பெரும்பாவம் செய்தாய்.நான் உன்னுடன் யுத்தம் செய்திருந்தால் நீ இறந்திருப்பது நிச்சயம்.நீ என்னிடம் சொல்லியிருந்தால் ..ஒரே நாளில் சீதையைக் கொண்டு வந்திருப்பேன்.நீ முறை தவறி என்னைக் கொன்றது குற்றமே" என்றான்.
உடலில் பட்ட காயங்கள் பெரும் வலி ஏற்படுத்தினாலும், அதையும் பொறுத்து கொண்டு வாலி மேலும் கூறினான்.
"சரி போகட்டும்..நடந்தது நடந்து விட்டது.என் மகன் அங்கதன் என்னை இழந்து மிகவும் துக்கப்படுவான்.சுக்ரீவனும், நீயும் அவனை பார்த்து கொள்ள வேண்டும்.அவனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.நான் சுக்ரீவனுக்கு செய்த கொடுமை தாரையால் என எண்ணாது அங்கதனை நடத்த வேண்டும்' என சொல்லியபடியே நினைவிழந்தான்.
No comments:
Post a Comment