Sunday, 20 July 2014

63- எங்கும் தேடினான் சீதையை



லங்கையில் ஹனுமான் இறங்கிய பின் யோசிக்கலானான்.

"கடலைத் தாண்டிவிட்டேன்.திரிகூட மலை மீது ராவணனின் பெரிய நகரம் எவ்வளவு அழகு! எவ்வளவு செல்வம்! இந்த ராவணனை எவ்வாறு எதிர்த்து ஜெயிப்பது? நான் தாண்டிய கடலை நம் சேனை எவ்வாறு தாண்டும்? தாண்டி வந்தாலும் இந்தக் கோட்டையை எப்படித் தாக்கி வெற்றி காண முடியும்? முதலில் சீதை உயிருடன் இருக்கிறாளா? எனப் பார்க்க வேண்டும்.மீதி யோசனையை பிறகு வைத்துக் கொள்ளலாம்.சீதை இருக்குமிடத்தை எப்படி தேடுவது" இப்படி பலவாறு யோசித்த ஹனுமான், பகலில் ஊருக்குள் பிரவேசித்தால் அரக்கர்கள் என்னை எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள்.அரக்கர்கள் என்னைக் கண்டு சந்தேகப்படாமல் இருக்க மிகச் சிறிய உருவம் எடுத்து செல்ல வேண்டும். என எண்ணி, ஒரு பூனை அளவு சிறு உருவம் எடுத்து கொண்டான்.

சூரியன் அஸ்தமித்து விட்டான்.அப்போது நிலவு தோன்றி , எங்கும் பகல் போல நிலவு ஒளி.ராவணனின் நகரின் வீதிகள், மாளிகைகள், தோரணங்கள்,அலங்காரங்கள்,கொடிகள் என அனைத்தும், பொன், ரத்தினமயமாக ஜொலித்தன.கடல் காற்று வீசிக் கொண்டு இருந்தது.இந்திரனின், அமராவதியும்,குபேரனின் அளகாபுரியும் போல ராவணனின் நகரம் ஐஸ்வரியத்துடன் காணப்பட்டது.

இவ்வாறு, இதையெல்லாம் ஹனுமான் பார்த்து சென்ற போது, அந்நகரத்து அதிதேவதை பயங்கர வடிவத்துடன் எதிரில் வந்து, " குரங்கே! நீ யார்? இங்கு ஏன் வந்தாய்? " எனக் கேட்டது.

"நான் குரங்குதான்.இந்நகரத்தை சுற்றிப் பார்த்து, திரும்பிப் போவேன்' என்றான் ஹனுமான்.

உடனே தேவதை ஹனுமானை ஒரு அறை அறைந்தாள்.

ஹனுமானும் தனது இடக்கையால் அத் தேவதையை ஒரு குத்துக் குத்த , கோர வடிவம் கொண்ட அத்தேவதை சுருண்டு விழுந்தாள்.விழுந்தவள், "ஒரு வானரத்தால் அடிபட்டு என்று வீழ்வேனோ அன்று உன் நகரத்திற்கு அழிவு என்ற வாக்கு உண்மையாகும் போல இருக்கிறது என எண்ணிய தேவதை, 'இனி லங்கைக்கு அழிவு காலம்' என தீர்மானித்து, ஒதுங்கி நின்றாள்.அந்நகரத்தின் விதிதான் அந்தத் தேவதை உருவம்.பின்னர் ஹனுமான் நகரத்திற்குள் பிரவேசித்தான்.

நகரத் தெருக்கள் பிரகாசித்தன.அழகான பெண்களின் கால்களில் அணிந்த ஆபரணங்கள் சப்தம் நிறைந்த மாளிகைகளைக் கண்டான்.சில வீடுகளில் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டிருந்தனர்.சில வீடுகளில்,வேதம் ஓதிக் கொண்டு இருப்பதுக் கேட்டது.யுத்த வீரர்கள் நின்றிருந்த வீதியையும் ஹனுமான் கண்டான்.

கோரமான வடிவங்களை கண்டான்.வில்லும், வாளும், சூலாயுதமும் இன்னும் பல யுத்தப்படைகளும் வைத்துக் கொண்டு
நிற்பவர்களைக் கண்டான்.

மிக அழகிய பெண்கள், தங்கள் நாயகர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு ,உல்லாசமாக இருப்பதைக் கண்டான்.சிலர் உப்பரிகையில் அமர்ந்திருந்தனர்.சிலர் விளையாடிக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தனர்/

சீதையைக் காணவில்லை.

பல அரக்க வீரர்களின் மாளிகைகள் ஒவ்வொன்றிலும் பிரவேசித்து பார்த்தான்.கடைசியில், மலைபோல உயர்ந்து நின்ற மிகப் பெரிய அரண்மனையைக் கண்டான்.அதற்குள், யானை,குதிரை, காலாட்படைகளையும், அதைச் சுற்றி மதிலும், பூவுலகில் ஒரு சுவர்க்கம் போல இருந்தது.ராவணனின் பிரத்தியேக அரண்மனைக்குள் சென்று எல்லா இடங்களையும் பார்த்தான்.அங்கே புஷ்பீக விமானத்தைப் பார்த்தான்.

அது, பிரம்மாவிடம், குபேரன் அடைந்த அற்புத விமானம்.குபேரனை வென்று அதை லங்கைக்குக் கொண்டுவந்திருந்தான் ராவணன்.

கடைசியாக, ஹனுமான், ராவணனின் அந்தபுரத்திற்குள் நுழைந்தான்.அழகிய பெண்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அவர்களில் சீதை இருக்கிறாளா? எனத் தேடினான்.

பின், இதில் சீதை கண்டிப்பாக இருக்க மாட்டாள்.அவளால் ராமனை விட்டு எப்படி ஆழ்ந்து உறங்க முடியும் என எண்ணினான்.

அடுத்த அறையில், மேரு மலையே படுத்து உறங்குவது போல ராவணன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.அந்த பொலிவும்,அழகும் ஹனுமானை நடுங்கச் செய்தன.அப்பால், ஒரு மஞ்சத்தில் ஒரு பெண் படுத்திருந்தாள்.அவளது உடல் அழகும், முக அழகும் ..அவள்தான் அந்தபுரத்து தலைவி என்பதைச் சொன்னன.

சீதையைத் தெடுவதில், நுழையக்கூடாத பெண்கள் பிரத்தியாக அறைகளில் எல்லாம், ஆபத்துக்கு பாவமில்லை என நுழைந்து தேடினான்.பின், 'லங்கா நகரம் முழுதும் தேடியாகி விட்டது.சீதையைக் காணவில்லையே ' என வருந்தினான்.

இனி, காரியம் கைகூடவில்லை என கிஷ்கிந்தைக்குத் திரும்பினால், கேட்பவர்களுக்கு என்ன பதில் கூறுவது?ராமன் கதி என்னாவது? என் முயற்சி வீணாயிற்று என சுக்ரீவனிடம் எப்படிச் சொல்வது? இப்படி பலவாறு சிந்தித்தபடியே  வந்த ஹனுமான் ஒரு இடத்தில் மதிலால் சூழப்பட்ட வனத்தைக் கண்டான்.

"இந்த இடத்தில் நான் தேடவில்லை.சீதை கண்டிப்பாக இங்குதான் இருப்பாள்.என தீர்மானித்தான்.அவனது உள்ளத்தில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

தேவர்களை எல்லாம் வணங்கிவிட்டு அந்த அசோகவனத்துச் சுவர் மீது ஏறி நின்றான்.

No comments: