Wednesday, 30 July 2014

65- ராவணன் சீதையிடம் பேசியது.



மிகுந்த துக்கத்தில் இருந்த சீதையைப் பார்த்து ராவணன் சொன்னான்...

"உன் மீது எனக்கு உண்டாகி இருக்கும் அன்பை நீ அறிய மாட்டாய்.உன் அன்பை நான் பிச்சைக் கேட்கிறேன்.நீயே சொல்லும் வரை நான் உன்னை தொட மாட்டேன்.என் மீது உண்மையான அன்போடு என்னை ஒப்புக் கொள்ள வேண்டும்.உனக்கு சமமான அழகியை நான் பார்க்கவில்லை.அழகான நீ இப்படி துக்கப்படக் கூடாது.என்னை கணவனாக அடைந்து என் பட்டத்து அரசியாக இருப்பாய்.என் செல்வம் ராஜ்ஜியம் அனைத்தும் உன்னுடையது.காட்டில் அலைந்து திரியும் ராமனையே ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்.ஊரைவிட்டு,மரவுரி தரித்து அலையும் ஒருவனையே நினத்துக் கொண்டிருக்கிறாய்.அவனால் இனி என்ன செய்யமுடியும்? அவன் இப்போது பிழைத்திருப்பதே நிச்சயம் இல்லை.உன் ராமனைவிட தவத்திலும், பலத்திலும், புகழிலும்,செல்வத்திலும் நான் மேற்பட்டவன்"

ராவணன் பேசி முடித்ததும், ஒரு துரும்பைக் கிள்ளித் தனக்கும், அவனுக்கும் இடையில் போட்டுவிட்டு சீதை பேச ஆரம்பித்தாள்.

"என்னைப் பற்றின எண்ணத்தை விட்டு ஒழி. நீ விரும்பத்தகாத காரியத்தை செய்கிறாய்.நான் பிறந்த குலத்தையும், நான் புகுந்த குலத்தையும் தெரிந்து கொள்.தர்மத்தை புறக்கணிக்காதே! உன் மனைவியை நீ எவ்வாறு காத்து வருகிறாய்? அப்படியல்லவா, மற்றவர்களும் தங்கள் மனைவியரை காப்பார்கள்.அதை நினைவில் வை.உனக்கு உரிமையான பெண்களிடம் திருப்தி அடையாது மற்ற பெண்களுடன் மனத்தைச் செலுத்தினால் அவமானமும், துக்கமும் அடைவாய்.உனக்கு நல்ல புத்தி சொல்வார் யாருமில்லையா?ஒரு அரசன் தன் மனதைக் கட்டுப் படுத்த வேண்டும். இல்லையேல் அவன் நாடும்,நகரமும் அழியும்.உன் பொறுப்பை தெரிந்து கொண்டு உன் நாட்டையும், மக்களையும் காப்பாற்று.ராமனைத் தவிர வேறு எவரையும் நான் தீண்ட மாட்டேன்.வேதம் படித்து விரதம் தீர்த்த பிரம்மச்சாரிக்கு வேதம் எப்படி உரிமையோ, அப்படி நான் ராமனுக்கு உரியவள்.

ராமனிடம் மன்னிப்புக் கேட்டு அவன் கோபத்திலிருந்து தப்பித்து கொள்.சரணடைந்தால் ராமன் கண்டிப்பாக உன்னை மன்னிப்பான். உன் முடிவிற்கு நீயே வழி தேடிக் கொள்ளாதே! ஜனஸ்தானத்தில் இருந்த அரக்கர்களை, கூண்டோடு ஒழித்த ராமனைக் கண்டு பயந்து, திருடனைப் போல , ராம லட்சுமணர்கள் இல்லாதபோது என்னைக் கொண்டு வந்தாய். அவர்கள் எதிரில் உன்னால் நிற்க முடியுமா? புலியிருக்கும் இடத்தில் சிறு நாய் போகமுடியுமா? நீ அவர்களால் கண்டிப்பாக கொல்லப்படப் போகிறாய்.!"

சீதை பேசி முடித்ததும், ராவணன் தனது கோபத்தை அடக்கிக் கொண்டு, 'உன்னிடம் உள்ள பிரியத்தால் உன் பேச்சுகளைக் கேட்டு எனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன்.உன் மீது எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரியமே உன்னைக் காத்தது.உனக்கு நான் கொடுத்த தவணை இரண்டு மாதக்காலம் இருக்கிறது.அதற்குள் மனம் மாறி என்னை ஏற்றுக் கொள்'என்றான்.

சீதையும் மிகத் தைரியமாக, "உன்னை நல்வழிப் படுத்தும் நல்ல நண்பர்கள் யாருமில்லையா? உன் அழிவு நிச்சயம்.விதியே உன்னை இவ்வாறு செய்யச் சொல்லியிருக்கிறது.'என்றாள்.

ராவணனின் கோபம் அதிகரிப்பதைப் பார்த்த, அருகில் இருந்த அவனது இளைய மனைவி தான்யமாலி என்பவள் ராவணனைத் தழுவி,'உன்னை விரும்பாத இந்த மானிடப் பெண்ணுக்காக ஏன் துன்பப்படுகிறாய்? இவளிடம் அப்படி என்ன அழகு இருக்கிறது?' என்றவாறே அவனை இழுத்துச் சென்றாள்.

ராவணன், சீதையைக் காவல் காத்த அரக்கிகளுக்கு 'இவளை எப்படியாவது நீங்கள் வழிக்குக் கொண்டு வாருங்கள்.' என உத்தரவிட்டுவிட்டு அசோகவனத்திலிருந்து சென்றான்.

ஒரு அரக்கி சீதையிடம், " மூடப் பெண்ணே! ராவணன் பிரம்மாவின் வம்சத்தில் நேராக பிறந்தவன்.பிரம்மாவின் புத்திரன் புலஸ்த்திய பிராஜபதியின் சொந்தப் பேரன் ஆவான்' என்றாள்.

மற்றவளோ, " கர்வத்தால் அழியாதே! அவனை விரும்பி, அவனுடன் சந்தோசமாய் இரு.அவனுக்கு இணங்கி விடு.இல்லையேல் நீ பிழைக்கமாட்டாய்' என்றாள்.

இப்படி அரக்கிகள் ஒவ்வொருவரும் ராவணனின் பெருமையைச் சொல்லிவிட்டு, கடைசியில், "நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். இனி உன் இஷ்டம்..நீ சம்மதிக்காவிடின் சாக வேண்டியதுதான்' என்றனர்.

No comments: