கடற்கரையைச் சேர்ந்ததும் அங்கதன் "சீதையைக் காணாமல் நாம் திரும்பினால் அரசன் எனக்கு மரணதண்டனை விதிப்பான்.என் மீது சுக்ரீவனுக்கு அன்பு கிடையாது.அங்கு போய் உயிரைவிடுவதைவிட இறப்பதே மேல்' என்றான்.
ஆனால், ஹனுமானோ,"நாம் திரும்பப் போய் சுக்ரீவனிடம் விஷயத்தைச் சொல்லி அவன் தயவைக் கேட்டு அங்கேயே இருக்கலாம்' என்றான்.
அதற்கு அங்கதன், 'சுக்ரீவனுக்கு என் மீது பிரியமில்லை.இரக்கம் கிடையாது.அவன் மகாகுரூர சுபாவம் கொண்டவன்.வாலியை எப்படிக் கொன்றான் என யோசியுங்கள்.நான் உயிருடன் இருப்பதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.என் தாயும், சுக்ரீவனைக் கண்டு பயந்து அடங்கிப் போயிருக்கிறாள்.என் மீது என் தாய்க்கு உயிர்.நான் இறந்தேன் எனில் அவளும் உயிர் நீப்பாள்.நான் கிஷ்கிந்தைச் சென்றால் இப்போது இறப்பது நிச்சயம்.ஆகவே இங்கேயே உயிர் நீப்பது மேல்.என உயிர் நீக்கும் சங்கற்பம் செய்து கிழக்கு நோக்கி அமர்ந்தான்.
இதையெல்லாம் சம்பாதி என்ற கழுகரசன் மலைமீது அமர்ந்து பார்த்து கொண்டிருந்தான்.இறகுகளை இழந்து பறக்க முடியாத சம்பாதி..வானரங்கள் இறந்தால் தனக்கு உணவு சுலபமாய் கிடைக்கும் என எண்ணினான்.
வானரங்கள், "கைகேயியால் தசரதன் இறந்தான்..ராமன் காட்டுக்கு வந்தான்.காட்டில் சீதையை ராவணன் தூக்கிப் போனான்.சீதைக்காக ஜடாயூ உயிர் நீத்தான்.எல்லாவற்றிற்கும் காரணம் விதி.நாமும் மரணம் அடையப் போகிறோம்" என்றெல்லாம் பேசிக் கொண்டன.
இதையெல்லாம் கேட்ட சம்பாதி,"என் தம்பி ஜடாயூ இறந்து விட்டானா?' என அதிர்ச்சி அடைந்தான்.
சம்பாதி ஒரு கிழப்பறவை.ஜடாயூவும், சம்பாதியும் அண்ணன் தம்பிகள்.சிறுவயதில் தங்கள் அபார சக்தியை அனுபவித்து ஆகாயத்தில் உயரப் பறந்தனர்.சூரியனை நெருங்க, நெருங்க வெப்பம் ஜடாயூவை கொளுத்திவிடும் போல இருந்தது.சம்பாதி தன் இறகுகளை விரித்து ஜடாயூவைக் காப்பாற்றினான்.இதனால் ஜடாயூ பிழைத்தான்.ஆனால் சம்பாதியின் இறகுகள் எரிந்து பறக்கமுடியாமல் மலைமீது வீழ்ந்தான்.
"என் ஜடாயூ இறந்துவிட்டானா?எப்படி இறந்தான்? ராமன் ஏன் காட்டுக்கு வந்தான்?ஜடாயூ ஏன் கொல்லப்பட்டான்?" என சம்பாதி மலைமீதிருந்து கூக்குரலிட்டான்.
வானரங்கள் சம்பாதியை மெதுவாகக் கீழே நடத்தி வந்தனர்.சம்பாதி தன் கதையைக் கூற, அங்கதனும், ராமனைப் பற்றியும்..அவனுக்கு எப்படி உதவலாம்? என்றும் கேட்டான்.
சம்பாதியின் கண்கள் சக்தி மிக்கவை.அவன், இலங்கையில் சீதை இருப்பதை இங்கிருந்தே பார்ப்பதாகக் கூறினான்.பின், இலங்கை பற்றியும், ராவணன் பற்றியும், சீதைக்கு இரு அரக்கியர் காவல் இருப்பதையும் சொன்னான்.
வானரங்கள் மகிழ்ந்தன.இனி ராம காரியம் நிச்சயம் என குதித்தன.சம்பாதிக்கு ஏற்பட்ட கஷ்டமும் நீங்கியது.ராம காரியத்தில் உதவியதால் உனக்கு மறுபடியும் சிறகு முளைக்கும் என்று அவன் பெற்ற வரம் பலித்தது.இப்போது சம்பாதி அழகுடன் பிரகாசித்தான்.
சிறகுகளை அடைந்த சம்பாதி ஜடாயூவிற்கு கடலில் ஜலக்கிரியை செய்தான்.
No comments:
Post a Comment