Thursday, 17 July 2014

62- ஹனுமான் கடலைத் தாண்டினான்



தனது சக்தியை ஜாம்பவான் சொல்ல அறிந்துகொண்ட ஹனுமான், "நான் இப்பவே ஆகாய மார்க்கமாகச் சென்று சீதையைக் காண்பேன்.நான் திரும்பும் வரையில் இங்கேயே அனைவரும் இருங்கள்.கடலைத் தாண்ட பூமியை அழித்து மிதித்துக் கிளம்ப வேண்டும்.அதற்குத் தகுந்த இடம் மகேந்திர மலையே.." என்று கூறிவிட்டு மலைமீது ஏறினான்.

மலை உச்சியிலிருந்து கடலைப் பார்த்தான்.மனதை ஒருநிலைப் படுத்தி லங்கைக்குச் செலுத்தினான்.

சுரியனையும், இந்திரனையும்,வாயுவையும்,பிரம்மாவையும் மற்றும் பூதகணங்களையும் தியானித்து, அவற்றை வணங்கினான்.பிறகு கிழக்கு முகமாக நின்று கொண்டு மீண்டும் தனது பிதாவான வாயு பகவானை தியானித்து அஞ்சலி செலுத்தி தனது உடலை மேலும் பெருக்குக் கொண்டு தெற்கு முகம் நோக்கினான்.

மலையைத் தன் கால்களால் மிதித்துக் கைகளால் அடித்தான்.அப்படி செய்ததால் மலையிலிருந்த மரங்களிலிருந்த புஷ்பங்கள் உதிர்ந்து, மலையெல்லாம் மலர்கள் ஆனது.அவன், மலை மீது நடந்ததால் அந்த அழுத்தம் தாங்காமல் மலையிலிருந்து நீர் ஊற்றெடுத்துப் பெருகியது.

ஹனுமான் பெரும் கர்ஜனை செய்தான்.உடலின் பின்பாகத்தைச் சுருக்கி, மூச்சையடக்கிக் கால்களை நன்றாக ஊன்றி தன் பலத்தை விருத்திசெய்து கிளம்பி ஆகாயமார்க்கமாக வேகமாக செல்ல ஆரம்பித்தான்.

ஆகாயத்தில் வேகமாகச் சென்ற ஹனுமானின் கைகள் ஐந்து தலை நாகம் போல விளங்கின.சிவந்த மூக்கு மாலைமறையும் சூரியனைப் போல பிரகாசித்தது.செல்லும் வேகத்தால் காற்று கர்ஜித்தது.கந்தர்வர்கள் பூமாரி பொழிந்தனர். தேவ ரிஷிகள் ஆசிர்வதித்தனர்.

ஹனுமானுக்கு ஆகாயத்தில் சில சோதனைகள் ஏற்பட்டன.ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த சமயம் ஒரு பெரிய மலை திடீரென கிளம்பிற்று.நடுவே வழியை அடைக்கச் செய்த அதைத் தன் மார்பில் தாங்கினான் ஹனுமான்.அந்த மலை அசைந்தது.

பின் "அப்பனே! நான் மைனாக பர்வதம்.கடலரசன் ராமனுக்கு உதவ வேண்டுமென்று என்னை ஏவியுள்ளான்.சகர குலத்தில் உதித்தவன் ராமன்.சாகர குலத்தில் தான் கடல் விரிவடைந்தது.நீ சிறிது நேரம் என்மீது தங்கிப் போ! ராமகாரியம் நன்கு முடிப்பாய்.இந்திரன் மலைகளை எல்லாம் வஜ்ஜிராயுதத்தால் அடித்துத் துன்புறுத்திய காலத்தில் நான் கடலில் முழுகி மறைந்து உயிரோடு உள்ளேன்.எனக்கு அடைக்கலம் தந்த கடல் உனக்கு உதவக் கோரியது.' என்றது.

அதற்கு ஹனுமான் :நான் நிற்க முடியாது.காலவிரயம் ஆகும்' என்று அன்புடன் கூறி விடைபெற்றது.

பிறகு வழியில் ஒரு அரக்கி வடிவம், "நீ என் வாய்க்குள் பிரவேசிப்பாய்.ஆகாரமின்றி காத்திருக்கிறேன்' என்று தன் பெரும் வாயைத் திறந்தது.

உடன், ஹனுமான்..தன் தேகத்தை வளரச் செய்தான்.அந்த அரக்கியின் வாயும் அதுபோல பெரிதானது.உடனே ஹனுமான் தன் உடலை அணுவாகச் சிறிதாக்கிக் கொண்டு பெரும் வாய்க்குள் புகுந்து, காதினின்று வெளிப்பட்டு மறுபடியும் தன் பெரிய உருவத்தை தரித்துக் கொண்டான்

"உன் வாய்க்குள் நான் பிரவேசித்து விட்டேன்' என்றான் ஹனுமான்.அதைக் கேட்டவள்,"உன் காரியம் வெற்றியுடன் முடியும்.தேவர்கள் உன்னை சோதிக்கச் சொல்லவே இவ்வடிவம் எடுத்து, அவர்கள் செய்யச் சொல்லி செய்தேன்' என ஆசிர்வதித்து அனுப்பினாள்.

மீண்டும் சோதனை.திடீரென பறக்கமுடியாமல் ஏதோ சக்தி தன்னை பிடித்து இழுப்பது போல உணர்ந்தான் ஹனுமான்.

கீழே பார்த்தான்..ஒரு பெரும் பூதம், ஹனுமானின் நிழலைப் பிடித்து அதன் மூலம் வேகத்தைத் தடுத்தது.

"எனக்கு பசி..வா" என தன் வாயை பெருங்குகைப் போல திறந்தது.உடன் ஹனுமான் பூதத்தின் வாய்க்குள் புகுந்து..உள்ளே நகங்களால் கிழித்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.பூதம் உயிரிழந்து கடலில் மூழ்கியது.

இப்படி பல சோதனைகளைத் தாண்டி பறந்து..வாழையும் ,தென்னையும் நிறைந்த லங்கைக் கரைக்கு வந்து விட்டான்.லங்கைத் தீவின் கடற்கரை சோலைகளையும், மலைகளையும்,ஆறுகளையும், ஆறுகள் கடலில் சேரும் இடங்களையும், வனங்களையும் கண்டான்.ராவணனின் தேசத்தின் வளத்தையும், அழகையும் ஹனுமான் கண்டான்.

"வரவேண்டிய இடம் வந்து விட்டோம்.இனி, இங்குள்ள அரக்கர்களுக்கு, நான் யார்? எத்தகையவன் என்பது தெரியாமல் சீதையைத் தேட வேண்டும்' என விசுவரூபத்தை சுருக்கிக் கொண்டு சாதாரண வடிவத்துடன் ஒரு மலைமேல் இறங்கினான்.

No comments: