:இந்த வானர சேனை உன்னுடையது.அபூர்வ பலம் வாய்ந்த வானரங்கள் உன் பணியைச் செய்ய வந்துள்ளனர்.நீ இடும் ஆணையைச் செய்து முடிப்பர்' என்றான் சுக்ரீவன் ராமனிடம்.
:முதலில் நாம் கண்டறிய வேண்டியது சீதையை. ராவணன் எங்கு உள்ளான். சீதை உயிருடன் உள்ளாளா..என் அறிந்துவர இவர்களுக்கு உத்தரவிட வேண்டியவன் நீதான்.தம்பி லட்சுமணன் எனக்குக் கிடைத்த பாக்கியம்.அதைப்போல நீயும் என் நண்பனாகக் கிடைத்தது என் பாக்கியம்' என்றான் ராமன்.
வானரத் தலைவர்களை பல திக்குகள் சென்று தேடச் சொன்ன சுக்ரீவன் ஹனுமானைக் கூப்பிட்டுச் சொன்னான்.
:"வாயுபுத்திரா! இந்த பெரிய காரியத்தில் உன்னையே நம்பியுள்ளேன்! பலம், புத்தி, பராக்கிரமம், உபாயம், அறிவு என இவை அனைத்தையும் கொண்டவன் நீ"என்றான்.
ராமனும், ஹனுமானின் பலத்தையும், புத்தியையும் உணர்ந்து, தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழட்டி அவனிடம் கொடுத்து, "இதை வைத்துக் கொள்.உன்னால் சீதை கண்டுபிடிக்கப்படுவாள். அவளுக்கு நீ இதைக்காட்டியதும்..நீ என் தூதன் என்பது உறுதியாகும்' என்றான்.ஹனுமானும் பக்தியுடன் மோதிரத்தைப் பெற்றுக்கொண்டான்.
பின், சதபலி என்னும் வீரன் தனது சேனையுடன் வடக்கேச் சென்றான்.வினதன் கிழக்கேச் சென்றான்.சுஷேணன் மேற்கேத் தேடச் சென்றான்.ஆஞ்சநேயன்,அங்கதன், தாரன் ஆகியோர் தெற்கு நோக்கிச் சென்றனர்.
"ஒவ்வொரு திக்கிற்கும் விளக்கிச் சொல்லி உன் வீரர்களை அனுப்பினாயே!இவ்வளவும் உனக்கு எப்படித் தெரியும்?" என ராமன் சுக்ரீவனை ஆச்சரியத்துடன் கேட்டான்.
"நான் வாலியால் திரும்பத் திரும்பத் துரத்தியடிக்கப்பட்டவன்.நான் எங்கு சென்றாலும் என்னை துரத்தி வருவான்.அதனால் எல்லா இடங்களிலும் நான் அலைந்து வந்துள்ளேன்.அதனால் ஒவ்வொரு பாகத்தையும் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது; என்றான் சுக்ரீவன்.
வானரப் படைகள் வடக்கு,கிழக்கு,மேற்கு ஆகிய திக்குகளில் தேடிவிட்டு , சீதையைக் காணாமல் திரும்பினர்.
ஹனுமானும், அங்கதனும் தெற்கே போனார்கள்.அங்கு ஒரு பெரும் பாலைவனத்தைக் கண்டனர்.அங்கு ஒரு ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார்.அவரது சாபத்தால் அப்பிரதேசமே யாருமின்றி, எதுவுமின்றி சூன்யமாகவே இருந்தது.அங்கேயும் தேடிப்பார்த்துவிட்டு தென் பிரதேசம் சென்றனர்.அங்கு ஒரு அசுரனைப் பார்த்தனர்.அவன்தான் ராவணன் என எண்ணி, அங்கதன் அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்றான்.பின், அங்கு சீதையைத் தேடினர். இப்படி பல நாட்கள் கடந்தன.
பசியாலும், தாகத்தாலும் வாடிய வானரப்படையினர்..ஒரு குகையைப் பார்த்தனர்.அதில் அநேக வகைப் பறவைகள், நல்ல காற்று ஆகியவற்றைக் கண்டு..இக்குகைக்குள் சென்றால் தண்ணீர் கிடைக்கும் என புகுந்தனர்.சிறிது தூரம் குகைக்குள் சென்றதும்..ஒரு அழகிய நகரத்தைக் கண்டனர்.அங்கு மரவுரி தரித்த வயோதிக தபஸ்வினியை கண்டனர்.
அந்த தபஸ்வினியைப் பார்த்த ஹனுமான், தங்களைப் பற்றிச் சொன்னான்.
அந்த தபஸ்வினி, "குகைக்குள் அழகிய அரண்மனையை மயன் என்னும் வானவர்களின் விசுவகர்மா நிர்மானித்தான்.அவன் இங்கு பலகாலம் வசித்து வந்தான்.ஒருசமயம் அவனுக்கு இந்திரனிடம் பகை ஏற்பட்டது.இந்திரன் மயனை வதம் செய்தான்.பின், இந்த அரண்மனையை ஹேமை என்னும் என் தோழி அப்சரஸிற்குக் கொடுத்தான்' என்றாள்.
பின் அவர்களுக்கு அருந்த நீரும், உணவும் அளித்தாள். அவர்கள் விடைபெறுகையில் தபஸ்வினி," நீங்கள் இங்கிருந்து வெளியே செல்ல முடியாது.இக்குகையின் சக்தி உங்களுக்குத் தெரியவில்லை.உள்ளே வந்த அந்நியர் யாரும் வெளியே செல்ல முடியாது.மாண்டுவிடுவர்.உங்கள் காரியமோ பெரிய காரியம்.அதனால் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.நான் என் தவ வலிமையால் உங்களை வெளியேற்றுகிறேன்" என்றாள்.
அவர்கள் கண்களை மூடிக் கொள்ள தபஸ்வினி தனது தவ பலத்தால் அவர்களை கடற்கரையில் கொண்டு சேர்த்தாள்.
No comments:
Post a Comment