Wednesday, 16 July 2014

61- ஹனுமான் பற்றி ஜாம்பவான்



சீதை சிறையில் இருப்பதையும்,ராவணன் இருக்கும் நாட்டையும் சம்பாதி சொல்ல வானரங்கள் அறிந்து கொண்டன.

கடலைப் பார்த்த சில வானரங்கள், 'இந்தக் கடலைத் தாண்டி, லங்கைக்குள் பிரவேசித்துச் சீதையை  எப்படிக் கண்டு திரும்புவது ? என பயந்தன..கவலையில் ஆழ்ந்தன.

"எந்தக் காரியம் செய்வதாய் இருந்தாலும், தைரியத்தை இழக்கக் கூடாது' என அங்கதன் கூறினான்.பின், அங்குள்ள வானரங்களை அவரவர்கள் தாவும் சக்தியைப் பற்றிக் கேட்டான்.

ஒவ்வொருவரும், ஒவ்வொரு அளவு தன்னால் தாண்டமுடியும் என்றன.கடைசியாக முதிய வீரன் ஜாம்பவான் சொன்னான், 'ஒரு காலத்தில் எனக்கு பலம் இருந்தது.ஆமாலும், இப்போதும் என் கிழ வயதில் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.ஆனாலும் என்னால் லங்கைக்கு போய்ச்சேர இயலாது போல உள்ளது

அங்கதனும், "நானும் பல காதம் தாண்டக்கூடியவன்.அதனால் என்னால் கண்டிப்பாக லங்கைக்குத் தாண்டமுடியும்.ஆனால் திரும்ப அங்கிருந்து தாண்டும் சக்தி இருக்குமா? எனத் தெரியவில்லை' என்றான்.

அதற்கு ஜாம்பவான், "அங்கதா..வாலிக்கு இருந்தது போன்ற சக்தி உனக்கும் உண்டு.ஆனாலும், யுவராஜாவான நீ இவ்வேலை செய்ய வேண்டாம்.அது ராஜநீதியும் இல்லை.அதோ..அங்கே மௌனமாய் அமர்ந்துள்ளானே வாயுபுத்திரன் அவனே..இக்காரியத்தைச் செய்ய, தேவையான திறமையும், சக்தியும் வாய்ந்தவன்" என்றான்.

எல்லா வானரங்களும் ஹனுமானைப் பார்த்தன.

ஜாம்பவான், ஹனுமானைப் பார்த்து, 'அரசனான சுக்ரீவனுக்கு சமமானவன் நீ.உலகத்தில் உனக்கு சமமானவன் இல்லை.உன் தாயார் அஞ்சனா தேவலோகத்துக் கன்னி.ரிஷியின் சாபத்தால் வானரமாகப் பிறந்தாள்.மலைச்சாரலில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருந்த போது..ஒருநாள் வாயுத்தேவன் அவளது அழகைக் கண்டு அவளைத் தழுவினான்.அஞ்சனா கோபப்பட.."உன் தேகம் மாசுபடவில்லை.ஆசையால் தூண்டப்பட்டு இப்படி ஒரு காரியம் செய்துவிட்டேன்.உன் உடல் என்னால் தீண்டப்படவில்லை.ஆயினும் எனது ஸ்பரிசத்தால் உனக்கு மகன் பிறப்பான்.அவன் எனக்குண்டான வீரியமும், பலமும் பெற்றிருப்பான்.' என்று வாயுபகவான் அஞ்சனாவைத் தேற்றினான்.

ஹனுமான், நீ குழந்தையாய் இருந்த போது ஆகாயத்தில் கிளம்பிக் கிழக்கே உதித்த சூரியனை ஒரு பழம் என பிடிக்கச் சென்றாய்.
இதைப்பார்த்த தேவராஜன், "சூரியனையெப் பிடிக்கப் போகும் இவன் யார்?" என தனது வஜ்ராயுதத்தை உன் மீது வீசினான்.இதனால் அடிபட்டு நீ மலைமீது விழுந்தாய்.உனது வலது கன்னம் ஒடிந்தது.உன் தந்தை வாயு, பெருங்கோபம் அடைந்து, தனது சலனத்தை நிறுத்திவிட்டான்.தேவர்கள் வாயுபகவானின் கோபத்தைத் தணிக்க வேண்டினர்.பிரம்மனும், இந்திரனும் அச்சமயம் ஒரு வரம் தந்தனர்."உனக்கு எந்த ஆயுதத்தாலும் அழிவில்லை.நீ இஷ்டப்பட்டபோது தான் மரணம் வரும்.அதுவரையில் மரணம் உன்னை தீண்டாது' என்ற வரம் அது.அன்றுமுதல் சிரஞ்சீவியானாய் நீ. உன் கடலை எளிதாய் தாண்டமுடியும்.உன் வடிவம் பெருகட்டும்.உன் உண்மை பலத்தை அறிந்து கிளம்பு' என்றான்.

உடன் ஹனுமான் உடல் வளர ஆரம்பித்தது.வாயுபுத்திரன், வளர்ந்து, வளர்ந்து தேகமும், தேஜசும் பெருகி நின்றான்.அனைத்து வானரங்களும், அங்கதனும் ஆனத்தக் கூத்தாடினர்.

No comments: