Monday, 11 August 2014

70- ராமதூதன்



நந்தவனத்துத் தோரண வாயிலில் ஹனுமான் அமர்ந்திருந்தான்.வானர வீரர்கள் வருவதைக் கண்டதும், கீழே குதித்து பூமியில் தன் வாலால் ஒரு அடி அடித்தான்.வாயிற் கதவில் வைத்திருந்த தாழ்ப்பாள் கட்டையை பிடுங்கி, அதனால் அவர்களைத் தாக்கி அவர்களை எதிர்த்தான்.அத்தனை பேர்களையும் ஒருவர் ஒருவராகத் தாக்கி வதம் செய்துவிட்டு..அசோகவன கல்கம்பத்தில் அமர்ந்து கர்ஜித்தான்.

"ராமன் வாழ்க, லட்சுமணன் வாழ்க..சுக்ரீவ ராஜா வாழ்க என்று கோஷமிட்டபடி அரக்கர்களைப் பார்த்து," அரக்கர்களே! உங்களுக்கு அழிவு காலம் வந்துவிட்டது.ராம, லட்சுமண, சுக்ரீவன் அனுப்பி நான் இங்கு வந்துள்ளேன்.சீதையை வணங்கி ஆசி பெற்றேன்.இப்போது உங்கள் நகரை அழிக்கப்போகிறேன்' என்றான்.

ராவணனுக்கு செய்தி எட்டியதும், அவன்..உடனே, நிகரற்ற வீரனான பிரகஸ்தனின் மகனான ஜம்புமாலியைக் கூப்பிட்டு..வானரத்தின் கொட்டத்தை அடக்கிவிட்டு வா" என்றான்.

அவன் கவசம் பூண்டு, ஆயுதங்களை எடுத்துவர தாமதமாயிற்று.அதுவரை ஹனுமான் சும்மா இருக்கவில்லை.பக்கத்தில் ஒரு பெரிய மண்டபத்தைக் கண்டு அதன் மீது ஏறி நின்றான்.ஆகாயத்தில் ஒரு பொன்மயமான மலைத்தொடரைப் போல விளங்கினான்.அந்த மண்டபக் காவலாளிகள் ஹனுமானை எதிர்த்தனர்.'நான் ஹனுமான்.சீதையின் ஆசி பெற்று, லங்கையை அழிக்கக் காத்திருக்கிறேன்.ராமனின் தூதன் நான்.ராவணனை வெல்லும் அளவு பலம் பெற்றவன்' என்றான் அவர்களிடம்.பின், அங்கிருந்து குதித்து..ஒரு பெரும் கம்பம் ஒன்றைப் பிடுங்கி அவர்களை வதம் செய்தான்.கம்பம் பிடுங்கப் பட்டதால் மண்டபம் கீழே சரிந்தது.அதற்குள் ஜம்புமாலி வந்து சேர்ந்தான்.தேரில் இருந்தபடியே வில்லை வளைத்து மாருதி மீது அம்புகளை எய்தான்.அவை மாருதியின் முகத்தில் தைத்து ரத்தம் வழிந்தது.அது ஹனுமானின் முகத்தை இரு மடங்கு அழகுறச் செய்தது.அடிபட்ட மாருதி ஒரு பெரிய பாறாங்கல்லை ஜம்புமாலி மீது எறிந்தான்.தேர் பொடி பொடியானது.ஜம்புமாலி தேகம் நசுக்கப்பட்டு..கைகள், தலை ஏதும் உருப்படியின்றி பிண்டமாய்ப் போனது.

யுத்தத்தின் முடிவு ராவணனுக்கு தெரியப்படுத்தப்பட்டது,"இது மிருகமும் இல்லை.வானரமும் இல்லை.இது என் பகைவர்களான தேவர்களின் வேலை.அதைப்பிடித்து என் முன் கொண்டுவாருங்கள்' என பெரும் சேனையை ராவணன் அனுப்பினான்.

ஹனுமானும், வந்த வீரர்களை வதம் செய்துவிட்டு மீண்டும் மதில் வாயிலின் கூண்டின் மீது அமர்ந்தான்.

தன் படைகளின் தோல்வியையும், தனது ஐந்து சேனாதிபதிகள் வதம் செய்யப்பட்டதையும் அறிந்து ராவணன் இப்போது பயந்தான்.

இது சாதாரண நிகழ்வு அல்ல என்றபடியே தன் சபையில் இருந்தோரைப் பார்த்தான்.தன் மகன் அக்ஷன் னைப்பார்த்து, ஹனுமானிடம் போகச் சொன்னான்.

தங்கமயத் தேரில் ஏறி எல்லா ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு அக்ஷன் கிளம்பினான்.

No comments: