மறுநாள் காலை எழுந்ததுமே விபீஷணன் அரசனிடம் போனான்.ராவணனின் நன்மையைக் கருதி அவனை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் எனப் போனான்.
முக்கிய மந்திரிகளைத் தவிர மற்றவர்களை வெளியே போகச் சொல்லிவிட்டு ராவணன், தனது தம்பி விபீஷணனை பேசச் சொன்னான்.
"அண்ணா! நான் சொல்வதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்க வேண்டும்.எனது லாபத்திற்காக நான் எதுவும் பேசவில்லை.நான் சொல்வதைக் கேட்டு, ஆலோசனை செய்து, பின்னர் காரியங்களைச் செய்ய வேண்டுகிறேன்.
சீதையைக் கொண்டு வந்தது முதல் இங்கு அபசகுனங்களையேக் காணுகின்றேன்.
ஹோமம் வளர்க்கையில் அக்னி எரிய வேண்டிய முறையில் எரியவில்லை.
பூஜை நடக்கும் இடங்களில் பாம்புகள் தென்படுகின்றன.
நைவேத்ய சாமான்களில் எறும்புகள் மொய்க்கின்றன.
யானைகள், குதிரைகள்,ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் இவை அனைத்தும் ஆரோக்கியம் இழந்துள்ளன.
காக்கைகள் நகர விமானங்களில் கூட்டம் கூட்டமாய் அமர்ந்து அவலட்சணமாய் கத்துகின்றன.
கழுகள் வானில் வட்டமிடுகின்றன.
நரிகள் ஊருக்குள் வந்து ஊளையிடுகின்றன.
இவற்றையெல்லாம் கண்டு நாம் அலட்சியமாய் இருக்கக்கூடாது.
வீணாக ராம லட்சுமணனிடம் விரோதம் சம்பாதிப்பதால் என்ன பயன்?சீதையை திருப்பித் தந்துவிட்டு சுகமாய் வாழலாம்' என்றான் பணிவுடன்.
@@@@@@@@@@@@@@@@@@@
ராவணன் பிடிவாதமாக இருந்தான்.சீதையைப் பற்றி தன் ஆசை நிறைவேறவில்லையே !என வருந்தினான்.மறுபடியும் சபையைக் கூட்டினான்.
அவனது உத்தரவின்படி ஆயிரக்கணக்கான ராக்ஷச வீரர்கள் கூடியிருந்தனர்.அவரவர் பதவிகளுக்கு ஏற்ப ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
காமத்தால் மதியை இழந்திருந்த ராவணன் தன் நன்மை விரும்பும் ராக்ஷசக் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னான்.
"சிக்கலான சமயத்திலும் சரியான யோசனை சொல்பவர்கள் நீங்கள்.ஆதலால் இப்போது உங்களைக் கேட்கிறேன்.வனத்திலிருந்து சீதையைக் கொண்டு வந்து விட்டேன்.அவள் மீது எனக்கு ஏற்பட்டிருக்கும் ஆசையை அடக்க முடியவில்லை.இதை நான் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்.
என் விருப்பத்திற்கு அவள் சம்மதிக்கவில்லை.ராமன் வந்து தன்னை மீட்பான் என எண்ணுகிறாள்.என்னை ஏற்றுக் கொண்டு சுகமாய் இரு என்றேன்.அவள் அதற்கு ஒரு வருஷ கெடு கேட்டாள்.அதற்கு ஒப்புக் கொண்டேன்.நானும், நீங்களும் எந்த யுத்தத்திலும் தோல்வியைக் கண்டதில்லை.ஆனால் ஒரு வானரம் எப்படியோ நகரத்திற்குள் வந்து இந் நகரத்தை சேதப்படுத்தி விட்டான்.ராமனும், வானரப் படையும் கடலைத் தாண்டி வருவது இயலாத காரியம்.கடலின் எதிர்க்கரையில் சுக்ரீவனும், ராம லட்சுமணனும் படைகளுடன் வந்துள்ளனர்.அவர்களைஅழிக்க உபாயம் சொல்லுங்கள்' என்றான்.
மேலும் ராவணன், " நான் சபையை முன்னரே கூட்டியிருப்பேன்.கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்த்தால் காத்திருந்தேன்' என்றான்.
(காமத்தால் மதியிழந்து சற்று பொய்யும் கலந்து பேசினான் ராவணன்.சீதை ஒரு வருஷம் கெடு கேட்கவில்லை.தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள இப்படி மாற்றிச் சொன்னான்)
No comments:
Post a Comment