ராவணன் தம்பி கும்பகர்ணன் எழுந்து சபையில் பேசினான்.
"மன்னா! நீர் நீதி சாஸ்திரம் அறியாதபடி நடந்து கொண்டதால் பெரிய ஆபத்தை தருவித்து கொண்டீர்.ராம லட்சுமணனை தோற்கடித்து அல்லவா சீதையைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.யாரையும் கேட்காமல் ஒரு காரியம் செய்து விட்டு, இப்போது காலம் தாழ்ந்து ஆலோசனைக் கேட்பது அரசர்க்கு அழகல்ல" என்றவன், தன் சொற்களால் ராவணன் முகம் வாடுவதைக் கண்டான்.ராவணன் மீது அதிகப் பற்றுக் கொண்டவன் அவன்.உடனே, நடந்தது நடந்து விட்டது, இனி அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினான்.ராமனைப் பற்றி கும்பகர்ணனுக்குத் தெரியும்.ராவணன் பெற்றுள்ள வரங்களின் வரம்பும், அதிலுள்ள குறையும் கூட அவன் அறிவான்.இச்சமயம், அவனை அதைச் சொல்லி அதைரியப் படுத்துவதில் பயனில்லை என மீண்டும் பேசலானான்.
"நீர் செய்தது தவறு.கையாளும் முறையும் தவறு.முன்னால் செய்ய வேண்டியதை பின்னால் செய்தீர்கள்.பின்னால் செய்ய வேண்டியதை முன்னால் செய்தீர்கள்.ஆயினும், ராமனை நான் வதம் செய்வேன்.அவனை வென்று, கொன்று அவன் ரத்தத்தைக் குடித்து நமக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன்'என்றான்.
கும்பகர்ணன், முதலில் உண்மையை அச்சமின்றிக் கூறினான்.அதே சமயம், ராவணனை விட்டும் தரவில்லை.
பின் ராவணனின் பிரதான ஆலோசகன் பிரஹஸ்தன். ராவணனின் பலத்தை எடுத்துச் சொல்லி, கவலைப்பட வேண்டாம் என்றான்.அது கேட்டு ராவணன் மனம் மகிழ்ந்தான்.
இப்போது ராவணன் பேசலானான்..
"குபேரனையே வென்றவன் நான்.என்னை யார் இங்கு வந்து எதிர்ப்பார்கள் பார்க்கலாம்' என்றான்.
ஆனால் விபீஷணன் , ராவணன் எவ்வளவு கோபமாய் இருந்தாலும், அபாயத்தை எடுத்துச் சொல்லி, அவனையும், ராக்ஷச குலத்தையும் காப்பாற்ற வேண்டியது தன் கடமை என்றான்."சீதையை ஏன் எடுத்து வந்தீர்கள்?அவளை திரும்ப ராமனிடம் ஒப்படைத்து விடவேண்டியது உம் கடமை.இதைச் செய்யாவிடின் நாம் நாசமாய்ப் போவோம்.ராமனின் சாமர்த்தியம்,பலம், ஆயுதப் பயிற்சி என எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான்.
"ராமனை எதிர்த்தால் தோல்வி நிச்சயம்.சீதையைத் திருப்பிக் கொடுத்து, ராமனிடம் சரணடைந்து ராஜ்ஜியம், மானம் காப்போம்' வீபீஷணன் இப்படிக் கேட்டுக் கொண்டதும், கோபத்தோடு இந்திரஜித் எழுந்தான்.
"சிற்றப்பா பேசுவதைக் கேட்க வெட்கமாய் உள்ளது.நம் குலம் என்ன? சக்தி என்ன? சிற்றப்பாவின் பேச்சை அங்கீகரிக்க முடியாது.இரண்டு மானிடர்களைக் கண்டு யாரேனும் பயப்படுவார்களா?இந்திரனை அடித்துத் தள்ளி நாம் வெற்றி பெறவில்லையா? ன் இப்போதும் அதை எண்ணி உலகம் நடுங்கிக் கொண்டிருக்க வில்லையா?" என்றான்.
உடன் விபீஷணன், 'உனக்கு உலக அனுபவம் போதாது.நீ அரசனுக்கு மகனாய் இருந்தாலும் அவனை அழிக்க வந்த விரோதி ஆவாய்.நான் சொன்னதை புறக்கணித்தால் நாம் அனைவரும் அழிவது நிச்சயம்" என்றான்.
ராவணன் கோபமாக விபீஷணனைப் பார்த்து, "தம்பி என இதுவரை பொறுத்து கொண்டேன்.இது போல வேறு எவரேனும் சொல்லியிருந்தால் உயிர் போயிருக்கும்.குலத்தை அவமானப் படுத்தவே பிறந்தவன் நீ' என பலவாறு ஏசினான்.
விபீஷணன் மீண்டும், : அண்ணா! நீ என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்..பரவாயில்லை.ஆனால் நீர் தர்மத்திலிருந்து தவறினீர்.சபையில் என்னை அவமானப் படுத்தினீர்.காதுக்கு இனிமையாகப் பேசுவது சுலபம்.உமது மந்திரிகளும் அதைத்தான் செய்தனர்.ஆனால்..நான் உமது நலத்துக்காக சொன்னேன்.அது பிடிக்கவில்லை.என்னைப் பகைவன் என்றீர்,பரவாயில்லை.ஆபத்துக்கு உதவ வேண்டும் என நினைத்தேன்.அழிந்து போக வேண்டிய நேரத்தில், நல்ல யோசனைகள் விஷமாகத்தான் தெரியும்.'
இவ்வாறு கூறிவிட்டு...விபீஷணன், இனி லங்கையில் எனக்கு வேலையில்லை என கிளம்பி ஆகாய மார்க்கமாக ராம லட்சுமணன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான்.அவனுடன் மேலும் நான்கு ராக்ஷச நண்பர்களும் சென்றனர்.
No comments:
Post a Comment