Friday, 12 September 2014

81 - சேதுக்கரை



இதனிடையே ஒரு தூதுவனை சுக்ரீவனிடம் அனுப்பினான் ராவணன்.

தூதுவன் சுக்ரீவனைப் பார்த்து, "லங்கை அரசன் ராவணன் தங்களைக் காண என்னை அனுப்பியுள்ளான்.ராவணனும் அரசன், நீங்களும் அரசன்.இப்படியிருக்க இதில் ராமனுடன் சேர்ந்து ராவணனின் தீராப் பகையை ஏன் சம்பாதித்துக் கொள்கிறாய்?திரும்பிப் படையுடன் கிஷ்கிந்தைக்கு செல்வது நல்லது' என்றான்.

சுக்ரீவன்,'உன் அரசனிடம் சொல்.அவன் எனக்கு அண்ணனுமில்லை.நான் அவனுக்கு தம்பியுமில்லை.ராமன் எனது நண்பன்.ராமனுக்கு ராவணன் எதிரி.என் நண்பனுக்கு எதிரி எனக்கும் எதிரி.ராமனை பகைத்து கொண்டு நீ பிழைத்திருக்க முடியாது."என்றான் தூதுவனிடம்.

விபீஷணன் சரணடைந்ததும் ராமன் உத்தரவின் படி, லட்சுமணனும், சுக்ரீவனும் லங்கா ராஜ்ஜிய பட்டம் தந்தனர்.கடல் நீரை வைத்து பட்டாபிஷேகம் நடந்தது.விபீஷணன் ராமனுடன் ஆன நட்பு குறித்து உறுதி செய்தான்.

பின் அனைவரும், கடலைத் தாண்டுவது குறித்து யோசனை செய்தனர்.முதலில் கடல் அரசனை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்றான் ராமன்.பின், கடற்கரையில் தர்ப்பைப்புல்லை பரப்பி சாஸ்திர முறைப்படி கடலை உபதேசித்து உபவாசம் துவங்கினான்.

மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் கடல் அரசனை பூஜை செய்தான்,பின் எழுந்து தன் காரியத்தை நல்ல படியாக முடித்துத் தர வேண்டும் என தீர்மானித்து வில்லும், மந்திர பூர்வமாக எறிய வேண்டிய பாணங்களும் கொண்டு வருமாறு லட்சுமணனிடம் கூறினான். கடலின் மீது பாணங்களை செலுத்தினான்.பூமியே அதிர்ந்தது.கடலில் கலக்கம் ஏற்பட்டது.கடலரசன் நேரில் வந்தான்.

"ராமசந்திரனே! இயற்கை விதிப்படி நான் நடக்க வேண்டும்.தண்ணீரில் தாண்ட முடியாத ஆழமும், நீர் வடிவமும் கொண்டு பெரிய. சிறிய பிராணிகள் வசிக்கும்.அவற்றை நான் விடமுடியாது.பாணங்களைக் கொண்டும் கற்பாறைகளும், காட்டு மரங்களும் போட்டும் அணை கட்டச் சொல்லுங்கள்.அதற்கு இடம் தருகிறேன்.வானரர்களில் நளன் இருக்கிறான்.விசுவகர்மாவின் புத்திரனான அவன் இந்த அணையை திறமையாக நிர்ணயிப்பான்" என்றான் கடலரசன்.

பின் ராமன் உத்தரவிட்டதும் சேது பந்தன காரியம் துவங்கியது.லட்சக்கணக்கான வீரர்கள் வேலை செய்து ஐந்து நாட்களில் அணையை கட்டி முடித்தனர்.வானரங்கள், காடுகள், மலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான மரங்களைக் கடலில் இழுத்துப் போட்டார்கள்.பாறைகளை பெயர்த்துத் தூக்கி வந்து போட்டனர்.அணை வேலையின் சப்தம் கடலின் ஓசையை சிறிதாக்கி விட்டது.

அணை முடிந்ததும் கடலின் மத்தியில் சேதுக்கரை பிரகாசித்தது.

ஹனுமான் ராமனை தன் தோள்களில் தூக்கிச் சென்றான்.அங்கதன் லட்சுமணனைத் தூக்கிச் சென்றான்.வானரப்படை கடலைத் தாண்டியது.

No comments: