Thursday, 18 September 2014

83-ராமனின் மாயத்தலை


ராமனின் சேனை லங்கைக் கரையில் இறங்கிவிட்டது.சங்கப்பேரிகை, துந்துபி முதலிய யுத்த வாத்தியங்கள் முழங்க ராமன் சேனை, ராமன் சொன்னபடி அணி வகுக்கப் பட்டது,

சுகன் என்னும் தூதன் திரும்பி ராவணனிடம் வந்து, "நீங்கள் சொன்னவற்றைச் சொன்னேன்.ஆனால், என்னை துன்புறுத்தியனுப்பிவிட்டனர்.ராமன், சுக்ரீவனின் சேனையுடன் சீதை இருக்கும் இடம் அறிந்து லங்கை வந்து விட்டான்.சீதையைத் திருப்பித் தந்துவிட்டால் பிழைக்கலாம்" என்றான்.

ராவணன் கோபத்துடன், சீதையைத் திருப்பித் தரும் பேச்சே கிடையாது.அனைவரையும் நான் வதம் செய்வேன்' என்றான்.

பின் இரு அமைச்சர்களை அழைத்து, "லங்கைக்கு சேது கட்டிவிட்டு பெரும் சேனை வந்துள்ளதாக தூதுவன் கூறுகிறான்.நீங்கள் சென்று பார்த்து அவர்களது பலத்தைக் கூறுங்கள்' என்றான்.

அவர்களும் வானர வேஷம் தரித்து..ராமன் சேனைக்குள் பிரவேசித்தனர்.விபீஷணன் அவர்களைக் கண்டுபிடித்து ராமன் முன் கொண்டு நிறுத்தினான்.

ராமன் விபீஷணனைப் பார்த்து, "இவர்களுக்கு நம் சேனையைச் சுற்றிக் காட்டிவிட்டு விட்டு விடுங்கள்' என்றான்.பின் அந்த அமைச்சர்களைப் பார்த்து, "நீங்கள் சென்று ராவணனுக்குச் சொல்லுங்கள்.நாளையே கோட்டை அழியும்.ராமனின் பாணங்கள் அரசன் மீது பாயும் என' என்றான்.

அந்த இரு அமைச்சர்களும் திரும்பி ராவணனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்."அவர்களை எதிர்ப்பது நல்லதல்ல.சீதையை உடனே ராமனிடம் ஒப்படைப்பது நலம் பயக்கும்' என்றனர்.

"உலகெல்லாம் எனக்கு எதிராக வந்தாலும், எனக்கு பயம் இல்லை.சீதையைத் திருப்பித் தரமாட்டேன்.யாராலும் என்னை வெல்ல முடியாது" என்றான் ராவணன்.பின்னர் அரண்மனை மாளிகை மீதேறி, படை பலத்தை நேரில் பார்த்தான்.தன் தூதுவர்களிடம்..வீரர்கள் யார்..யார் என விசாரித்தான்.அவர்கள் ஒவ்வொரு வீரர்களைப் பற்றியும் ராவணனிடம் சொன்னார்கள்.

"அதோ அவன் தான் ராமன்..நீதி சாஸ்திரம், யுத்த சாஸ்திரம் அனைத்தும் அறிந்தவன்.பக்கத்தில் லட்சுமணன்.ராமனின் உயிரும், வலது கையுமானவன்.பக்கத்தில் வாலியின் மாலையை அணிந்து கொண்டிருப்பவன் சுக்ரீவன்.வாலிக்கு இணையான வீரன்.அவன் பக்கத்தில் உங்கள் தம்பி விபீஷணன்.இவர்களை வெல்வது கடினம்' என்றார்கள்.

உண்மையைச் சொல்லும் மந்திரிகள் மீதும், தூதுவர்கள் மீதும் புத்திசாலி அரசன் கோபிக்க மாட்டான்.ஆனால் ராவணன் மதிமயங்கிக் காணப்பட்டதால் அவர்கள் மீது கோபமே கொண்டான்.

சீதை எப்படியாவது தனக்கு உடன்பட்டுவிட்டால் ராமன் அவமானம் அடைந்து திரும்பி விடுவான் என எண்ணியவன்..மீண்டும் ஒருமுறை சீதையைப் பார்க்கத் தீர்மானித்தான்.இதற்காக மாயஜாலம் தெரிந்த அரக்கன் ஒருவன் உதவியை நாடினான்.அவனிடம், "உனக்கு மாய வித்தை தெரியும் அல்லவா? ராமன் தலையைப் போல ஒன்று செய்து அதை சீதை முன்னால் கொண்டு வந்து வைக்க வேண்டும்."என்றான்.மாய அரக்கனும் ஒப்புக் கொண்டான்.

ராவணன் அசோகவனம் சென்று, உன் கணவனையும், அவன் சேனையையும் வதம் செய்து விட்டேன்.அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரெனத் தாக்கி ராமன் உட்பட அனைவரையும் கொன்றுவிட்டோம்.ராமனின் தலையைக் கொணர்ந்து என் வீரன் என்னிடம் காட்ட  , அதை நீ காணக் கொண்டு வந்திருக்கிறேன்.அதைப் பார்த்த பின்னும், பிடிவாதம் செய்யாமல் எனக்கு இணங்கிவிடு" என்றான்.

அந்த மாய அரக்கனும் ராமனின் மாயத்தலையை சீதையிடம் காட்டினான்.அதைப் பார்த்த சீதை திகைத்தாள்.

இதனிடையே ராவணனுக்கு, ராமன் சேனை லங்கையை நெருங்கிவிட்டது என்ற செய்தி போக, சீதையை விட்டுச் சென்றான் ராவணன்.

மாயத்தில் இன்றியமையா அம்சம்..ராவணன் தலையை விட்டுச் சென்றதும். மாயத் தலையும் தானாகவே கரைந்து போயிற்று.

விபீஷணனின் மனைவி ஸரமை ராவணன் செய்த மாயத்தை சீதையிடம் விளக்கினாள்.மேலும், "ராமனை யாரும் கொல்லவில்லை.பெரும் படையுடன், கடலில் அற்புத சேது கட்டிவிட்டு வானர சேனை வந்து இறங்கிவிட்டது.ராவணனின் மந்திரிகள் பலரும் உன்னை ராமனிடம் ஒப்படக்கச் சொன்னார்கள்.ராவணன் அதற்கு செவி சாய்க்கவில்லை.கவலைப்படாதே! வெற்றி ராமனுக்கே!" என்றாள்.

சீதை மகிழ்ந்தாள்.

No comments: