Wednesday, 24 September 2014

87-ராவணன் அவதாரமா? ராவணன் சந்தேகம்..



அங்கதனால் வானரங்கள் தைரியத்துடன் கும்பகர்ணனைத் தாக்கினார்கள்.பெரிய மரங்களையும், பாறைகளையும் அவன் மீது எறிந்தும் அவன் எதையும் லட்சியம் செய்யாமல் வானரங்களைத் தாக்கினான்.

துவிவிதன்,ஹனுமான்,நீலன்,விருஷபன், சரூபன் முதலிய வீரர்கள் கும்பகர்ணனை பலமாகத் தாக்கினார்கள்.ஆனால் வானர வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக காயம் அடைந்தனர்.அங்கதனே அடிபட்டு நினைவிழந்தான்.சுக்ரீவனும் அடிபட்டு மயங்கினான்,நினைவற்று கிடந்த சுக்ரீவனைத் தூக்கிக் கொண்டு கும்பகர்ணன் லங்கையை நோக்கி ஓடினான்.ராமனிடம் வானர  அரசனைக் கொண்டு போய்த் தான் தந்த பரிசாகக் கொடுக்க கும்பகர்ணன் சென்றான்.

சிறிது நேரம் கழிந்தது.

சுக்ரீவன் நினைவடைந்தான்."நான் எங்கு இருக்கிறேன்" என்ற படியே நாற்புறமும் பார்த்தான்.என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டான்.உடனே, கும்பகர்ணனின் காதுகளையும், மூக்கையும் பல்லால் கடித்தும், நகங்களால் கிழித்தும் காயப்படுத்தினான் வலி பொறுக்கமுடியாது அவனைக் கீழே போட்டான் கும்பகர்ணன். உடனே சுக்
ரீவன் குதித்தெழுந்து ஆகாய மார்க்கமாக ராமன் இருந்த இடம் வந்து சேர்ந்தான்.

சுக்ரீவன் இப்படிச் செய்வான் என எதிர்ப்பார்த்த ஹனுமான் வானர சேனையை மறுபடியும் யுத்தத்திற்கு தயாராக்கினான்.காதுகளும், மூக்கும் அறுபட்டு ரத்த வெள்ளத்துடன் இரும்பு உலக்கையைத் தூக்கிக் கொண்டு கும்பகர்ணன் அங்கு வந்து சேர்ந்தான்.

கும்பகர்ணனை யாராலும் தாக்க முடியவில்லை.வானரத் தலைவர்களாலும் அவனை அழிக்க முடியவில்லை.லட்சுமணனும் அம்புகள் எய்தான்.ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை.கும்பகர்ணன் ராமன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான்.ராமன் அவனுடன் நீண்ட நேரம் போர் செய்தான்.ஆனால் கும்பகர்ணனை ஒன்றும் செய்ய இயலவில்லை.ராமனின் கூரிய அம்புகள் அவனது கைகளை வெட்டித் தீர்த்தன.கால்கள் வெட்டப்பட்டன.நொண்டிக்கொண்டே போரிட்டான் அவன்.

கடைசியில் ராமன் தன் வில்லை வளைத்து விட்ட அம்பு ஒன்று அவனது தலையை அறுத்துத் தள்ளியது.வெட்டப்பட்ட தலை லங்கா நகரத்திற்குள் ஒரு மலையைப் போல விழுந்தது.

"கும்பகர்ணன் இறந்துவிட்டான்.அநேக ஆயிரம் வானரங்களைக் கொன்றுத் தின்று.கடைசியில் ராமனின் அம்புக்கு இரையானான்.கால்கள் அறுபட்டு விகாரமடைந்து காட்டுத்தீயில் எரிபட்ட ஒரு மரத்தைப்போலக் கிடக்கிறது.வெட்டுண்ட அவன் தேகத்தின் துண்டுகள் பாதி கடலில் விழுந்தும், பாதி கோட்டை வாசலை மலைபோல அடைத்துக் கொண்டும் இருக்கின்றன.தலை அறுபட்டு ஆகாயமார்க்கமாக லங்கையில் விழுந்தது' என ராவணனிடம் சொன்னபோது ராவணன் நினைவிழந்தான்.

பின்னர்,'தம்பி...என்னை தனியே விட்டு விட்டுப் போனாயே..இனி இந்த ராஜ்ஜியம் எனக்கு எதற்கு?என் அருமைத் தம்பியே போன பின்னர்,,எனக்கெதற்கு உயிர்.ஐயோ! அன்றே விபீஷணன் சொன்னதைக் கேட்காமல் போனேனே" என்று அரற்றினான்.

திரிசரன் ராவணனைத் தேற்றினான்.திரிசரனே, யுத்தத்திற்கு புறப்பட்டான்.அவனுடன் பல வீரர்களும் தொடர்ந்து சென்றனர்.நராந்தகன் ஒரு குதிரையின் மீதேறி வானர சேனையைத் தாக்கினான்.சுக்ரீவனை இலக்கு வைத்துச் சென்றவனை அங்கதன் கொன்று வீழ்த்தினான்.

இவ்வாறே தேவாந்தகனும்,திரிசரஸும் மாருதியாலும், மகோதரன் நீலனாலும் கொல்லப்பட்டனர்.லட்சுமணன் அதிகாயனை வில்லெய்திக் கொன்றான்.

அதிகாயனும் மாண்டான் என்றதும் ராவணன் மனம் கலங்கிப் போனான்."என் வீரர்கள் இப்படி ஒருவர் பின் ஒருவராக மடிகிறார்களே!என் மகன் இந்திரஜித் கட்டிய நாகபாணத்தையும் கூட தகர்த்துவிட்டு நிற்கும் ராமன் ஒருவேளை விஷ்ணுவின் அவதாரமாய் இருக்கக்கூடுமோ? 'என் ஆச்சரியப்பட்டும்,கவலைப்பட்டும் மனமுடைந்தான் ராவணன்.

கோட்டைக்குள்ளும், அசோகவனத்திற்குள்ளும் விரோதிகள் நுழையாதிருக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு அரண்மனைக்கு சென்றான் ராவணன்

No comments: