Tuesday, 23 September 2014

86-கும்பகர்ணன் கிளம்பினான்



போர்க்களத்திலிருந்து அவமானப்பட்டு ராவணன் திரும்பியதும், நீண்ட நேரம் ஆலோசனை செய்தான்.பின், தூங்கிக் கொண்டிருக்கும் தம்பி கும்பகர்ணனை எழுப்பச் சொன்னான்.

கும்பகர்ணன், இதற்கு முன் கிடைத்த ஒரு சாபத்தால் மாதக்கணக்கில் தூங்கிப் போவான்.கும்பகர்ணன் தூங்கிப் போய் சில நாட்களே ஆகியிருந்ததால் அவனை உடனே எழுப்பச் சொன்னான்.அவன் யுத்ததிற்குச் சென்றால்..தனக்கு பயமில்லை என எண்ணினான்.

கும்பகர்ணனை எழுப்ப ஆட்கள் சென்றனர்.அவன் எழுந்ததும் மிகவும் பசியுடன் இருப்பான் என உணவை மலைபோல குவித்தனர்.பின், பேரிகைகள்,சங்குகள் முதலியவற்றால் பெரும் சப்தம் ஏற்படுத்தினர்.அவன் அப்போதும் எழவில்லை.அவன் மீது யானைகளை நடக்கவிட்டனர்.அப்போது அவன் கண்விழித்தான்.தன் தூக்கத்தைக் கலைத்ததற்காக பெரும் கோபம் கொண்டான்.அதற்குள் பசி ஏற்பட்டதால், குவிந்திருந்த உணவை உண்டான்.

அவனிடம் ராவணன் தம்பி யூபாக்ஷன்"யுத்தத்தில் அடிபட்டு நாம் அபாய நிலையில் இருக்கிறோம்.சீதை காரணமாக யுத்தம் வந்தது.நம் வீரர்கள் பலர் இறந்து விட்டனர்.ராவணனும் யுத்த களத்திலிருந்து அவமானப்பட்டு திரும்பியுள்ளான்' என்றான்.

இதைக் கேட்டதும் கும்பகர்ணன், 'இந்த நொடியே எதிரிகளை ஒழிப்பேன்.வானர் வீரர்களைக் கொன்று, ராம லட்சுமணனின் ரத்தத்தைக் குடித்து..பின்னர் ராவணனைப் பார்ப்பேன்' என்றான்.

இதைக் கேட்ட அமைச்சர்கள்"ராவனனைப் பார்த்த பின்னரே..அவன் அடுத்த முடிவை எடுக்க வேண்டும்' என்றனர்.

கும்பகர்ணனும் ஒப்புக் கொண்டு ராவணன் இருக்கும் மண்டபத்திற்கு  வந்தான்.தம்பியைத் தழுவி வரவேற்றான் ராவணன்.தன்னை ஏன் எழுப்பினார்கள் என கும்பகர்ணன் வினவினான்.

"தம்பி, கடலைப் போல வானர சேலை லங்கையைச் சூழ்ந்துள்ளது.நம் வீரர்கள் தோல்வியடைந்து மடிந்துவிட்டனர்..ராமன் கடலில் சேது ஒன்றைக் கட்டி வந்து, நம் குலத்தையே அழிக்க உள்ளான்.நீ, தேவர்களை எல்லாம் போரில் சிதற அடித்திருக்கிறாய்.இந்த எதிரிகளிடமிருந்தும் நாட்டைக் காப்பாயாக' என்றான்.

ராவணன் சொன்னதைக் கேட்டதும் கும்பகர்ணன் சிரித்தான்.அண்ணன் செய்த தவறுகளை எண்ணி சிரித்து விட்டு , "நீர் மந்திராலோசனை செய்த நேரம் நான் உம்மை எச்சரித்தது நடந்து விட்டது.சீதையை அபகரித்ததால் ஏற்பட்ட பயனை அனுபவிக்கிறீர்.யோசனை செய்து பிறகு காரியத்தில் இறங்குவதற்கு பதில்..காரியத்தில் இறங்கிவிட்டு எல்லாம் முடிந்தபின் யோசிப்பது அறிவீனம்.நன்மை தீமைகளை சொல்லும் அமைச்சர்கள், உறவினர், நண்பர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்காமல் தவறிழைத்து விட்டீர்.

கும்பகர்ணன் பேசியவை ராவணனுக்கு எரிச்சலையூட்டின.ஆனாலும் வேறு வழியில்லாததால். "தம்பி..இப்போது அதைப்பற்றியெல்லாம் பேசிப் பயனில்லை.காரியம் நடந்து முடிந்த பின் பேசுவதால் என்ன பயன்?நடந்த கெடுதியை உன் வீரத்தாலும், சாமர்த்தியத்தாலும் வெல்ல வேண்டியது உன் கடமை.என் மீது உனக்குப் பிரியமிருந்தால் நீ உதவுவாயாக" என்றான்.

"நீர் கவலைப்பட வேண்டாம்.எதிரிகளை இப்போதே வதம் செய்வேன்.உமது தம்பி எப்போதும் உம்மை கைவிடமாட்டேன்.ராம லட்சுமணன் மாண்டனர் என நிச்சயமாக இருங்கள்.ராமனின் தலையை இங்கு கொண்டு வந்து போடுகிறேன்.சுக்ரீவனின் ரத்தம் இங்கு ஆறாய் ஓடும்.என்னால் இயலாதது ஏதுமில்லை என உமக்குத் தெரியும்.என்னை முன்னமேயே அனுப்பியிருக்க வேண்டும்" என்றான்.

கும்பகர்ணன் அகம்பாவத்தால் இப்படி பேசினான்."யமனும்,சூரியனும், அக்கினியும் யார் வேண்டுமாயினும் வரட்டும்.அவர்களை வென்று கடித்துத் தின்றுவிடுவேன்' என போர்க்களத்திற்குக் கிளம்பத் தயாரானான்..

கும்பகர்ணன் முதலில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் இயற்கை வேகத்தில் பேசினான்.பிறகு பசி தீர்ந்ததும் நீதி உணர்ச்சியில் பேசினான்.பின், அண்ணனின் நிலை கண்டு அன்பு கொண்டு மற்றதை மறந்து பேசினான்.

ராவணன் , கண்டிப்பாக கும்பகர்ணன் வெல்வான் என்று மகிழ்ந்தான்.கும்பகர்ணன் ஒருவனாக சூலத்தை எடுத்து கொண்டு கிளம்பினான்.ஆனால் ராவணன் அவனிடம் அப்படிப் போகக் கூடாது எனக் கூறி. அவனை, ஆடை, அணிகலன்களால் அலங்கரித்து பெரும் சேனையுடன் "சென்று வா..வென்று வா" என அனுப்பினான்.

கும்பகர்ணன் தோற்றத்தைக் கண்ட வானர சேனைகள் பயந்து ஓட..அவற்றை வானரத் தலைவர்கள் தைரியம் கூறி சிதறாமல் காத்தனர்.

No comments: