Sunday, 28 September 2014

90 - மண்டோதரி





விபீஷணன் உயிரற்றுக் கிடந்த அண்ணன் ராவணனிடம் வந்தான்."அண்ணா..அற்புத செயல்களைச் செய்தவனே!ஆணவத்தால் மதியிழந்து, தவறான ஆலோசனை சொல்பவர்களால் சூழப்பட்டு..நான் சொன்னதையும் புறக்கணித்தாயே! அந்த பெரும் தவறின் பயனை அடைந்துவிட்டாய்.யானை வீழ்த்தப்பட்டது போல மண்ணில் கிடக்கிறாயே!" எனக் கதறினான்.

அவனைப் பார்த்து ராமன் சொன்னான்..

"ராவணன் மகாவீரனைப் போல யுத்தம் செய்தாய்.இது மேலான மரணம்.இதற்கு வருந்தாதே! புறங்காணாமல், வெற்றியோ, மரணமோ எதுவாயினும் ஒன்றுதானே! வீரர்கள் போரில் இறக்கிறார்கள்.உயிர் நீத்த பின் பகை தீர்ந்து விட்டது.இனி இவனின் இறுதிச் சடங்குகளை நானே செய்யலாம்.உனது சகோதரன் எனக்கும் சகோதரன் தானே!" என்றெல்லாம் கூறி விபீஷணனைத் தேற்றி ராவணனின் கிரியைகளை நடத்துமாறுக் கூறினான்.

ராவணனின் அந்தப்புர பெண்கள் வந்தனர்.அவர்களுடன் ராவணனின் பட்டமகிஷி மண்டோதரி வந்தாள்.அவள் தரையில் கிடந்த ராவணனைக் கண்டதும் "ஓ" எனக் கதறினாள்.

"உனக்குக் கோபம் வந்தால் இந்திரனும் அருகில் நிற்கமாட்டானே! ஒரு மானிடனால் தோற்கடிக்கப்பட்டு உயிர் நீத்தாயே! மூன்று உலகங்களிலும் பிரபலமான உன் வீரம் இதை எப்படி பொறுத்தது? நான் அப்போதே சொன்னேனே!இந்த ராமன் மானிடன் அல்ல.இந்திரனும், அக்கினித் தேவனும்,யமனும் கூட உம்மை வெல்லமுடியாது இவன் ஆதி..அந்தம் அற்ற விஷ்ணுவே மனித உடல் எடுத்து அவதரித்துள்ளான்.இவன் கரனை வதம் செய்த போதே இதை நான் சொன்னேனே! யாரும் புகமுடியா இந்த லங்கையில் ஹனுமான் நுழைந்து நகரை நாசம் செய்யும் போதே தெரிந்து விட்டது.பதிவிரதையான சீதை மீது ஏன் மையல் கொண்டாய்? என்னைவிட அவள் எந்தவிதத்தில் அழகி என மதியிழந்தீர்? இப்போது விபீஷணன் அல்லவா நல்லபேறு பெற்றுவிட்டான்.இப்போது, என்னையும், நம் குலத்தையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டீர்களே! ஒருமுறை..ஒருமுறை பேசமாட்டீர்களா?என்னை விதவை ஆக்கிவிட்டீர்களே' என்று அவனது உடல் மீது விழுந்து மயக்கமானாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ராமனின் உத்தரவின்படி விபீஷணனுக்கு லங்கை அரசனாக பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது.பின் விபீஷணன் நகரத்திற்கு வெளியே பாசறையில் இருந்த ராமனை வந்து பார்த்து வணங்கினான்.

"அரசனின் உத்தரவு பெற்று நீ சென்று சீதைக்குத் தகவல் தெரிவிப்பாயாக" என்றான் ராமன் ஹனுமானைப் பார்த்து.பின், ஹனுமானும், விபீஷணனின் ஆணையைப் பெற்று சீதையைச் சந்தித்தான்.

ஹனுமானைப் பார்த்ததும் சீதைக்கு பேச்சே வரவில்லை."தாயே! ஏன் பேசவில்லை?+ என்றான் ஹனுமான்.

மகிழ்ச்சியால் என்னால் ஏதும் பேச முடியவில்லை.உனக்கு நான் பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?உனது விவேஹம், உன் வீரம்,உன் மனோபலம், உன் பொறுமை,வினயம் இதெல்லாம் வேறு யாருக்கு இருக்கிறது?" என்றாள்.

அப்போது ஹனுமான், சீதையை சிறை காத்த அரக்கிகளைப் பார்த்தான்.'உம்மை வேதனைப் படுத்திய இந்த அரக்கிகளை அழிப்பேன்" என்றபடியே எழுந்தான்.

"வேண்டாம்.உலகில் தவறு இழைக்காதவர் யார்?.இவர்கள் அவர்களது அரசனின் உத்தரவை நிறைவேற்றினார்கள்.அதில் என்ன குற்றம்" என சீதை ஹனுமானைத் தடுத்தாள்.

"ராமனுக்கு என்ன சேதி சொல்ல?" என்றான் ஹனுமான்.

"அவரைக் காண ஆசைப்படுகிறேன்" என்றாள் சீதை.

ஹனுமான் ராமனிடம் சென்று விஷயத்தைச் சொன்னான்.என்ன காரணத்தாலோ, ராமனின் கண்களில் கண்ணீர் வந்தது.சிறிது நேரம் யோசித்த ராமன், விபீஷணனைக் கூப்பிட்டு,"சீதையை நீராட்டி சகல பூஷணங்களும் தரிக்க வைத்து அழைத்து வரவும்" என்றான்.

ஆனால் விபீஷணனிடம் சீதை, தான் அப்படியே வர விரும்புவதாகக் கூறினாள்.

ஆனால் ராமனின் உத்தரவு படி செல்ல வேண்டும் என விபீஷணன் சொன்னதால் சீதை ஒப்புக் கொண்டாள். 

No comments: