Friday, 26 September 2014

88- இந்திரஜித் மாண்டான்



"நான் உயிருடன் இருக்கையில் நீங்கள் கவலைப்பட வேண்டாம் ' என தந்தையைத் தேற்றிவிட்டு, தானே போருக்குக் கிளம்பினான் இந்திரஜித்.

வானர சேனையைத் தாக்கி லட்சக்கணக்கான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தினான்.வானரங்கள் செயலிழந்து நின்றன.ராம லட்சுமணன் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுண்டு நினைவிழந்துக் கிடந்தனர்.இந்த வெற்றியை ராவணனிடம் சொல்லச் சென்றான் இந்திரஜித்.

இதனிடையே விபீஷணன் வானரத் தலைவர்களை தேற்றிக் கொண்டே வந்தான்.

அரை ஜீவனாக இருந்த ஜாம்பவான், மாருதியை அருகே அழைத்தான்.:"ஹனுமானே! வடக்கே கடலைத் தாண்டி இமயமலைக்குச் செல்.ரிஷப பர்வதத்திற்கும்,கயிலாய பருவதத்திற்கும் இடையே ஔஷத பருவதத்தின் உச்சியில் நான்கு மருந்து செடிகள் உள்ளன.அதைக் கொண்டு வா.வந்தால் ராம லட்சுமணனும் வானர சேனையும் நினைவு பெற்று ஆரோக்கியத்தை அடைவார்கள்.இச்செயலை நீ மட்டுமே செய்ய முடியும்" என்றான்.

ஹனுமான் ஆகாய மார்க்கமாகக் கிளம்பினான்.ஆனால் மலையில் அந்தச் செடிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை.அதனால் அந்த சஞ்சீவி மலையையேத் தூக்கிக் கொண்டு லங்கைக்குத் திரும்பினான்.

ஹனுமான் தூக்கி வந்த சஞ்சீவி மலை ஆகாயத்தில் லங்கையை நெருங்கியதும் ராம லட்சுமணனும், வானர வீரர்களும் உடலில் ஏறியிருந்த சரங்கள் நழுவிக் காயங்கள் ஆறி சுக நிலை அடைந்து எழுந்து நின்றனர்.

பின், சுக்ரீவன் ராமனுடன் ஆலோசித்தப் பின் சில வானரங்களை லங்கைக்குள் அனுப்பி நகருக்கு தீ வைக்கும்படி உத்தரவிட்டான்.அப்படியே அவர்களும், இரவு, கோபுரங்கள், மாளிகைகள் இவற்றுக்கு தீ இட்டனர்.லங்கா நகரமே நாசமானது.

வானரங்களால் லங்கா நகரம் எரிக்கப்படுவதைக் கண்ட ராவணன் பெரும் கோபம் கொண்டு கும்பகர்ணனின் புத்திரர்களான கும்பன், நிகும்பன் இவர்களை யூபாக்ஷன் முதலிய அரக்க வீரர்களுடன் போர்க்களத்திற்கு அனுப்பினான்.

கும்பன் சுக்ரீவனாலும், நிகும்பன் ஹனுமானாலும் கொல்லப்பட்டார்கள்.

கரனுடைய மகன் மகாராக்ஷன் என்னும் அரக்கன் ராமனை எதிர்த்து அவனது வில்லுக்கு பலியானான்.

பின், ராவணன் மறுபடியும் இந்திரஜித்தை அனுப்பினான்.அவன் அசுர வேள்வி செய்து அதன் பலனாக ஆகாயம் ஏறி கண்ணுக்குத் தெரியாமல் போரிட்டான். ,

அவன் தனது மாயவித்தையால் ஒரு பொய்யான சீதையை உருவாக்கினான்.அதைத் தேரில் ஏற்றிச் சென்று வானர சேனைகளுக்கு எதிரில் அவர்கள் முன்னிலையில் கொன்றான்.

இதனைப் பார்த்த வானர சேனை அதிர்ச்சி அடைந்தது. சீதை இறந்தபின் போர் புரிந்து என்ன பயன் என ராமனிடம் யோசிக்கச் சென்றனர்.இவ்வேளையில் இந்திரஜித் வேறு ஒரு அசுரயாகம் செல்லச் சமயம் ஏற்படுத்திக் கொண்டான்.இது ராம லட்சுமணனுக்கும் தெரியாது.

அப்போது விபீஷணன் வந்தான்.நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு, "நீங்கள் மோசம் போனீர்கள்.ராவணன் சீதையை ஒருபோதும் கொல்லவிட மாட்டான்.இது ஒரு மாயாஜாலம்.மற்ற எந்த விதத்திலும் காரியம் சாதிக்கமுடியாது என இப்போது அசுரயாகம் செய்யப் போயிருக்கிறான்.அது முடிந்து விட்டால் நம்மால் அவனை ஜெயிக்க முடியாது.அந்த யாகம் செய்ய முடியாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றவன், லட்சுமணனிடம் சென்று இந்திரஜித்தின் வேள்வியை கலைத்து விட வேண்டும் என்றான்.

ராமனும் சரி என ஒப்புக் கொண்டு தம்பியை அனுப்பினான்.லட்சுமணனுடன் ஹனுமானும், விபீஷணனும் மற்றும் பல வானரங்களும் சென்றனர்.அவர்கள் இந்திரஜித் செய்ய இருந்த யாக பூமிக்குச் சென்றனர்.வேள்வி தடைப்பட்டு அங்கு வெகு நேரம் போர் நடந்தது.தேரின் மீது நின்று இந்திரஜித் அம்புகளை செலுத்தினான்.லட்சுமணனும் ஹனுமான் மீது நின்று அம்புகளைச் செலுத்தினான்.இருவரும் விற்போரில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை.தவிர,விபீஷணன், லட்சுமணனுக்கு உற்சாகமூட்டி வந்தான்.

இந்திரஜித்தின் தேர் அழிந்தது.தரையில் நின்று இருவரும் போரிட்டனர்.கடைசியில் லட்சுமணன் இந்திராஸ்திரத்தை மந்திரத்தைச் சொல்லி ராமன் மீது ஆணையிட்டு செலுத்த, இந்திரஜித்தின் தலை அறுபட்டது.

இந்திரஜித்தை அழித்து விட்டு லட்சுமணன் ராமனிடம் சென்றான்.ரத்தம் பெருகிய நிலையில் அவனை ஜாம்பவானும், ஹனுமானும் பிடித்து அழைத்துச் சென்றனர்.

ராமன் லட்சுமணனைத் தழுவி, 'இனி அரக்கர் குலம் அழிந்தது' என அவனை மடியில் அமர்த்தி உச்சி முகர்ந்தான்..பின், "ஒரு வீரனும் செய்ய முடியாத வீரச் செயலை செய்தாய்.ராவணனின் வலக்கை போன்றவனை வீழ்த்திவிட்டாய்.இனி, சீதையை அடைந்ததாகவே நினைக்கிறேன்' என்றான்.

இந்திரஜித், லட்சுமணனால் கொல்லப்பட்ட செய்தி அறிந்த ராவணன், "ஐயோ! என் அருமை மகனே!! மகேந்திரனை வென்ற சூரனே! யமன் வெற்றியைந்து விட்டானா?நீ வீர சுவர்க்கம் அடைந்து விட்டாய். நான் துக்கப்படக் கூடாது' என்றான்.

"உலகே எனக்கு சூனியமாகிவிட்டதே" என்றான்.

"உன் தாயார் மண்டோதரியையும்,உன் பிரிய மனைவியையும். என்னையும் விட்டு பிரிந்தாயே!" என அரற்றினான்.

"இதற்கெல்லாம் காரணமான சீதையைக் கொல்வதே சரி.என் மகன் மாயாஜாலத்தால் சீதையைக் கொன்றது போலச் செய்தான்.நான் உண்மையிலேயே அவளைக் கொல்லப் போகிறேன்' எனக் கிளம்பினான்.

ஆனால், சுபார்சவன் என்பவன், அவனை தடுத்து நிறுத்தி, "அரசே! ஒரு பெண்ணைக் கொன்று, அந்த அவமானத்தையும், தோஷத்தையும் ஏன் சம்பாதித்துக் கொள்கிறீர்! வேதங்களை ஓதிச் சகல வித்தையும் கற்ற நீர் இப்படிச் செய்யலாமா?உமக்கு நிகர் யாருமில்லை.யுத்தத்தில் ராமனை வென்று சீதையை அடைவீராக.இன்று சதுர்த்தசி.நாளை அமாவாசை.நாளை கிளம்பி , ராம லட்சுமணனை அழித்து வெற்றி பெறுவீராக" என்றான்.

சுபார்சவன் கூறியதை ராவணன் ஒப்புக் கொண்டான்.பின், சிறிது நேரம் யோசனையில் இருந்தவன், தன் சேனைத்தலைவர்களைக் கூப்பிட்டு, கை கூப்பி "நீங்கள் சென்று ராமனை வெல்லுங்கள்.உங்களால் இயலாவிடின் நான் வருகிறேண்' என்றான்.

அரக்கர் சேனையும் முழு பலத்துடன் போர்க்களத்திற்கு புறப்பட்டது.

வானரப்படை, அரக்கர்கள் இடையே பலமான் தாக்குதல் நடந்தது.இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஆயிரக்கணக்கில் இருந்தன.

ராவன் தனது வில்லை வளைத்து அம்புமாரி பொழிந்தான்.போர்க்களத்தில் எங்கு நோக்கினும் ராமன் ஒருவனே தெரிந்தான்.அரக்கர்கள் கொல்லப்பட்டனர்., யானைகள் மடிந்தன.தேர்கள் ஒடிந்தன.எஞ்சிய சில அரக்கர்கள் ஓடினர்

"ராவணனின் அறிவீனத்தால் இப்படி ஆயிற்றே" என எஞ்சியவர்கள் அழுதனர். 

No comments: