Tuesday, 30 September 2014

91- அக்கினிப் பிரவேசம்



சீதை வருகிறாள் என்றதும் ராமனின் மனதில் துயரம், சந்தோஷம் கலந்த நிலை.

சீதையை பல்லக்கில் எடுத்து வருகையில், அவளைப் பார்க்க வானரங்கள்  கூட்டமாய்ச் சேர்ந்தன. வானரத் தலைவர்கள் அவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள்.ஆனால் ராமனோ, "இவர்கள் என் நண்பர்கள்.ஆகவே யாரையும் விலக்கவேண்டாம்" என்றான்.

பல்லக்கில் இருந்து இறங்கிய சீதை ராமனருகே வந்து விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.

"எதிரிகளை வதம் செய்தேன்.உன்னை மீட்டேன்.அத்துடன் எனது கடமை, எனது சபதம் முடிந்தது" என்றான் ராமன்.இப்படிச் சொன்னதும் அவன் முகம் கருத்தது.மீண்டும் ராமன் சொல்லலானான்.

"இந்த கோர யுத்தம் உனக்காக அல்ல.என் கடமையைத் தீர்க்கவே.உன்னை அடைந்தது குறித்து மகிழ்ச்சியல்ல.அபவாதம் என்னும் புகை உன்னை மூடி மறைத்துள்ளது.நீ என்னை விட்டு தனியாக இருக்க வேண்டும்.அயலான் இல்லத்தில் வெகுகாலம் இருந்த தன் மனைவியை எப்படித் திரும்ப அழைத்துக் கொள்வது.இது விஷயமாக உன் யோசனை என்ன"

சீதை ராமனைப் பார்த்தாள்."இதயத்தைப் பிளக்கும் தகாத மொழிகளைக் கூறினீர்கள்.பாமரர்கள் சொல்லக்கூடிய சொற்கள் உங்கள் வாயிலிருந்து வரலாமா?நான் எந்தக் குலத்தில் பிறந்தேன் என்பதை மறந்து விட்டீர்.லட்சுமணா..கட்டைகளைப் போட்டு தீயை வளர்ப்பாயாக" என்றாள்.

.
ராமன் வேண்டாம் எனச் சொல்லவில்லை.

சீதை சொன்னவாறே லட்சுமணன் தீயை மூட்டினான்.சீதை தலையை குனிந்தபடியே..ராமனை வலம் வந்தாள்.பின்"தெய்வங்களே! உங்களை வணங்குகிறேன்.மகரிஷிகளே உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.அக்கினித் தேவனே! எனது பரிசுத்தத்தை நீ அறிவாய்" என்று சொல்லியபடியே  தீயில் விழுந்தாள்.

தேவர்கள் அனைவரும் அங்கு வந்துவிட்டனர்.பிரம்மன் சொன்னான்.."நாராயணா! ராவணனை வதம் செய்யவே அவதரித்துள்ளீர்.உமது மனைவி லட்சுமி அல்லவா?"

அப்போது ஒரு அதிசயம் நடந்தது.அக்கினித் தேவன் எரியும் நெருப்பிலிருந்து கிளம்பிச் சீதையை அவள் அணிந்த உடைகள் அப்படியே இருக்க ராமனிடம் தந்தான்.

பிரம்மனைப் பார்த்து ராமன் சொன்னான், "நான் தசரதன் மகன் .அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.நான் யார்.எங்கிருந்து வந்தேன் என நீங்கள்தான் சொல்ல வேண்டும்".இப்படிக் கூறிவிட்டு சீதையை அழைத்துக் கொண்டான்.'"சீதா உன் புனிதம் நான் அறியாததா? நான் செய்த பரீட்சை மக்களுக்காக.அவர்கள் திருப்திக்காக.ராமன் காமத்தால் மதியிழந்தான்.உலக வழக்கிற்கு மாறுபட்டு நடந்தான்'என்றிருக்கக் கூடாதல்லவா" என்றபடியே அவளை இருகைகளையும் நீட்டி அழைத்துக் கொண்டான்.

அப்போது தசரதனும் இறங்கி வந்து அவர்களை ஆசிர்வதித்தான்.பின் சிதையிடம் "என் மகனை மன்னிப்பாயாக! உலக தர்மத்தைக் காக்கவே அவன் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்வாயாக" என்றான்.

இந்திரன், யுத்தத்தில் உயிரிழந்த வானரங்களை மீண்டும் உயிர் பெறச் செய்தான்".

No comments: