Tuesday, 19 August 2014

73 - வானரங்களின் களியாட்டம்



ஹனுமானைப் பார்த்து மகிழ்ந்த வானரங்கள் மகேந்திர மலையில் கூடினார்கள்.

ஜாம்பவான் வாயுபுத்திரனை வரவேற்று, "நடந்ததையெல்லாம் எங்களுக்குச் சொல்வாயாக! சீதையை நீ பார்த்த போது அவளது மனநிலை எப்படியிருந்தது?ராவணன் எப்படி நடந்து கொண்டான்" என்றான்.

ஹனுமான் அவர்களுக்கு நடந்ததையெல்லாம் சொல்ல ஆரம்பித்தான்...

"மகேந்திரமலையில் இருந்து நான் கிளம்பி ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கடலில் இருந்து ஒரு மலை கிளம்பியது.அதை உதைத்து எறிய எண்ணிய நான், என் வாலால் அடித்தேன்.உடன் அந்த மலை,"நான் உன் பகைவன் அல்ல.உன் தந்தையால் காப்பாற்றப் பட்டவன்.நன்றி மறவாதவன்.என்னைக் கொல்ல வந்த இந்திரனின் வஜ்ஜிராயுதத்திலிருந்து தப்பி, உன் தந்தை வாயுவின் உதவியால் கடலில் மூழ்கி மறைந்துள்ளேன்.முன்னாட்களில், மலைகள் அனைத்தும் சிறகுகளைப் பெற்று..ஆகாயத்தில் இங்கும் அங்கும் பறந்து கொண்டிருந்தோம்.உலகமே எங்களைக் கண்டு பயந்தது.இந்திரன் எங்களது சிறகுகளை வெட்டித் தள்ளினான்.அப்போது வாயு பகவான் எனக்கு உதவினான்.உன் சிரமம் தீர,சிறிது நேரம் என் மேல் அமர்ந்து இளைப்பாறிச் செல்' என்றது.அதற்கு நான் நேரமில்லை என்று கூறி அதனிடம் இருந்து விடை பேற்றேன்.' என்று ஆரம்பித்து ஹனுமான்..தான் கடலைத் தாண்டும் போது நடந்த நிகழ்ச்சிகள்..அரக்கிகள் சிறை இருக்கும் சீதையைக் கண்டது..என அனைத்தையும் கூறினான்.

பின்னர் தான் லங்கையை அழித்ததையும், ராவணனைப் பார்த்ததையும், தன் வாலுக்கு தீ வைத்ததையும்..தான் நகரைக் கொளுத்தியதையும் கூறினான்.

(ஹனுமான் கடலைத் தாண்டியதையும், பின் நடந்தவற்றையும் எடுத்துச் சொல்லுவது சுந்தரகாண்டம்.இதைப் படிப்பதால், தங்களுக்கு வரும் அபாயம் நீங்கும் என்றும், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கலாம் என்றும் மக்களிடம் நம்பிக்கையுள்ளதை.இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்)

நடந்தது அனைத்தையும் சொன்ன ஹனுமான்..மேலும் கூறலானான்...

"நம் முயற்சி நன்கு முடிந்ததற்கு சீதையின் சக்தியே காரணம்.சீதையின் சக்தியைப் பார்க்கையில் ராவணன் எப்படி அவளை கவர்ந்து சென்றிருக்க முடியும்.அவன் சாம்பலாகிப் போயிருப்பானே! ஒருவேளை ராவணனின் தவ வலிமை அவனைக் காத்திருக்கும்.ஆனாலும் சீதை நினைத்திருந்தால் அவனை அழித்திருக்கலாம்.ஆனால், அவளுக்கு தன் கணவன் ராமன்தான் ராவணனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என எண்ணம்..நானோ..ஜாம்பவானோ ஒருவர் போதும் அந்த அரக்கர் கூட்டத்தை ஒழிக்க.அங்கதன்,பனஸன்,நீலன் இவர்களது பராக்கிரமம் போதும்.அசுவனி புத்திரர்கள் மயிந்தன்,த்விவிதன் போதும்.இப்படி நம்மில் பலர் உள்ளனர்.சீதை காட்டில் துன்புறுத்தப்பட்ட மானைப்போல இருக்கிறாள்."

உடன் அங்கதன் எழுந்து, "நான் ஒருவன் போதும்.லங்கைக்குச் சென்று, ராவணனையும், அரக்கர்களையும் கொன்று சீதையை மீட்டுக் கொண்டு கிஷ்கிந்தைக்கு திரும்புவேன்" என்றான்.

அதற்கு ஜாம்பவான், "நாம் ராம லட்சுமணர்களிடம் சொல்வோம்.அவர்கள் சொல்வதைப்போல செயல்படுவோம்' என்றான்.அதற்கு அனைத்து வானரங்களும் ஒப்புக் கொண்டன.ஆகாயத்தில் கிளம்பி கிஷ்கிந்தை நோக்கிச் சென்றன.

சுக்ரீவனின் நந்தவனம் அருகே வந்த வானரங்கள், அந்த வனத்தில் புகுந்து தேன் குடித்து..பழங்களை உண்டு தோட்டத்தை நாசமாக்கின.வானரங்களின் அட்டகாசத்தைப் பொறுக்கமுடியாத ததிமுகன் என்ற காவலதிகாரி, (இவன் சுக்ரீவனின் மாமனும் ஆவான்)சுக்ரீவனிடம் போய், "நந்தவனம் பாழாய்ப் போயிற்று.தெற்கே சென்ற வானரங்கள் திரும்பி வந்து வெகு அக்கிரமமாக நடக்கிறார்கள்.அவர்களை அரசன் உடனே தண்டிக்க வேண்டும் என்றான்.

இதைக் கேட்ட சுக்ரீவன், "ஹனுமானும், ஜாம்பவானும் சொன்ன் காரியத்தில் வெற்றி பெற்று விட்டனர்' என்பதை உணர்ந்து, அதை லட்சுமணனிடம் சொன்னான்.

பின் தன் மாமனைப் பார்த்து"ததிமுகனே! உடனே அவர்களை என்னை வந்துப் பார்க்கச் சொல்லுங்கள்' என்றான்.

No comments: