தேவர்களுக்கு சமமான வீரன் அக்ஷன் தவத்தால் பெற்ற தங்கமய தேரில் ஏறிச் சென்றான்.கல்தோரண வாயில் மீது அமர்ந்திருந்த ஹனுமானைக் கண்டான்.அவன் உள்ளத்தில் "இவன் நமக்கு சரியான பகைவன் தான்' என்ற எண்ணம் ஏற்பட்டது.அக்ஷன் மூன்று கூரிய பாணங்களை எய்தான்.அவை, ஹனுமானின் உடலில் பட்டு ரத்தம் பெருகியது.
போர் முற்றி கடுமையானது,மலை மீது மாரி பெய்வது போல ஹனுமானின் கல் போன்ற தேகத்தில் அம்புகள் தைத்தன.ஆகாயத்தில் கிளம்பி ஹனுமான் அற்புதமான முறையில் பாணங்களிடையே புகுந்து அக்ஷனைத் தாக்கினான்.
அக்ஷனின் வீரத்தைக் கண்ட ஹனுமான், "ஐயோ! இவனை கொல்ல வேண்டுமே" என துயரப்பட்டான்.பின், மனதை தைரியப் படுத்திக் கொண்டு அரக்கனை வதம் செய்ய தீர்மானித்தான்.
முதலில், அவனின் தேரை தவிடுபொடி ஆக்கினான்.தேரின்றி தெருவில் நின்றான் அக்ஷன்.இருந்தும் விடாமல் தாக்கினான்.பெரும் போர் நடந்தது.கடைசியில், அக்ஷனின் எலும்பெல்லாம் உடைந்து நசுக்கப்பட்டு கீழே விழுந்து மாண்டான்.
தனது குமாரன் கொல்லப்பட்டான் என்ற செய்தி கேட்ட ராவணன் இதயம் துடித்தது.இருப்பினும், ஹனுமானைத் தாக்க இந்திரனுக்கு சமமான வீரனான இந்திரஜித்தை அனுப்பினான்.
பிரமனை பூஜித்து அவனிடம் இருந்து பிரம்மாஸ்திரம் பெற்றவன் நீ.உன்னால் முடியாதது ஏதும் இல்லை.பல அரக்கர்கள், ஐந்து சேனாபதிகள்,ஜம்புமாலி, உன் தம்பி அக்ஷன் அனைவரும் மாண்டனர்.நீ சென்று அப்பகைவனை வென்று சிறைபிடித்து வா" என்றான் ராவணன்.
இந்தரஜித் தேரில் ஏறி வருவதைப் பார்த்த ஹனுமான், தன் உடலை பெருக்கிக் கொண்டு யுத்தத்திற்குத் தயாரானான்.இந்திரஜித் அம்புகளைத் தொடுத்தான்.ஹனுமான் அற்புத வேகத்துடன் தன்னை நோக்கி வந்த அம்புகளை வீணாக்கினான்.எத்தனை பாணங்கள் பட்டும் ஹனுமானின் சக்தி குறையாததைப் பார்த்த இந்திரஜித்,'இந்த வானரம் என் அம்புகளால் தோல்வி அடையப் போவதில்லை.பிரம்மாஸ்திரத்தைப் பயன் படுத்த வேண்டியதுதான்' என எண்ணியவன், பிரம்மாஸ்திரத்தை ஹனுமானை நோக்கி செலுத்த ஹனுமானும் செயலிழந்துப் போனான்.
பிதாமகனின் அஸ்திரத்திற்கு கட்டுண்டோம் என்பதை மாருதி தெரிந்து கொண்டான்.பிரம்மாவிடம் மாருதியும் வரம் பெற்றிருக்கிறான்.ஒரு முகூர்த்த நேரம் அது அவனை கட்டி நிற்கும்."இதனால் எனக்கு ஆபத்து இல்லை.தூதுவனாக வந்த என் வேலை இதனால் பூர்த்தி ஆகும்' என்று யோசித்து , பிதாமகன் தனக்கு சிரஞ்சீவி வரம் தந்தபோது இட்ட கட்டளைப்படி பிரம்மாஸ்திரத்திற்கு அடங்கித் தரையில் வீழ்ந்தான் ஹனுமான்.
ஹனுமான் செயலிழந்து விழுந்ததைக் கண்ட மற்ற வானரங்கள், 'இவனை துண்டுத் துண்டாய் வெட்ட வேண்டும்.ராவணனிடம் இழுத்துச் செல்ல வேண்டும்' என்றெல்லாம் பேசியபடியே, சணல் கயிறாலும், தென்னங்கயிறாலும் அவனை கட்டிப் போட்டன.இதைப் பார்த்த இந்திரஜித் வருத்தம் அடைந்தான்.
"ஐயோ! இம்மூடர்கள் கயிற்றைப் போட்டு கட்டி விட்டனரே!பிரம்மாஸ்திரத்தின் சக்தி ஒழிந்து போயிற்றே!ஸ்தூல பொருள்களால் கட்டியபின் மந்திரக் கட்டு தானாக அழிந்து போயிற்றே!மறுமுறையும் பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க முடியாதே!" என்றெல்லாம் எண்ணினான் இந்திரஜித்.
மாருதியும் நிலைமையை அறிந்து கொண்டான்.இனி, தன் தேகபலத்தால் வானரங்கள் போட்ட கயிற்றை அகற்ற முடியும் என உணர்ந்தான்.ஆனாலும், ராவணனைக் கண்டு பேச வேண்டும் என எண்ணியதால், செயலற்றது போலவே இருந்தான்.
ஹனுமானை, வானரங்கள் தெருவில் இழுத்துச் சென்றன ராவணனிடம்.
No comments:
Post a Comment