Friday, 15 August 2014

72- லங்கா தகனம்



பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட ஹனுமான் தன்னை தெருவில் இழுத்துச் சென்று கொண்டிருப்பதை பொறுத்துக் கொண்டான் .தான் பெற்ற வரத்தால், அதிலிருந்து விடுபடும் வரை ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும் எனவும் தீர்மானித்தான்.

ராவணனின் முன் ஹனுமானைக் கொண்டு நிறுத்தினர்.ராவணனைக் கண்டதும் ஹனுமானுக்கு பெரும் கோபம் ஏற்பட்டது.ராஜ லட்சணங்களுடன் அவன் மேனி மலைபோல காணப்பட்டது.

"ஆஹா! தருமத்திலிருந்து இவன் பிறழாமல் இருந்திருந்தால் இந்திரன் முதலானவர்கள் இவனுக்கு ஈடாக மாட்டார்கள்.தான் பெற்ற வரங்களை நம்பி, தப்பான காரியங்களில் இறங்கியதால் இவன் மேன்மை இழந்தான்' என எண்ணினான் ஹனுமான்.

"இவன் யார்? இவனை யார் அனுப்பியது?' என ஹனுமானை வினவச் சொன்னான் மந்திரிகளிடம்.

அரசனின் ஆணைப்படி, மந்திரி பிரகஸ்தன்,"குரங்கே! நீ யார்? உண்மையைச் சொன்னால் தப்பிக்கலாம்.யார் உன்னை ஏவியது?" என்றான்.

ஹனுமான் இதற்கு மறுமொழியாக ராவணனைப் பார்த்துச் சொன்னான்.

"இந்திரனோ..குபேரனோ. என்னை அனுப்பவில்லை.நான் வானரன்.மன்னனைப் பார்க்க விரும்பினேண்.அதனால் வனத்தை அழித்தேன்.என்னை கொல்ல அரக்கர்கள் முயன்றதால் அவர்களை வதம் செய்தேன்.வானர அரசன் சுக்ரீவன் தூதனாக வந்துள்ளேன்.அவனுடன் ராமனும் நட்பு கொண்டுள்ளார்.சுக்ரீவனின் பகையான வாலியை ராமன் வதம் செய்து ராஜ்ஜிய பதவியை சுக்ரீவனிடம் ஒப்படைத்தார்.

ராமன் வனவாசம் செய்கையில், தனியாக இருந்த அவரது மனைவியை நீ அபகரித்து கொண்டு வந்து விட்டாய்.மனைவியை காணாத ராம லட்சுமணர்கள் அவளைத் தேடி வந்தார்கள்.சுக்ரீவன் தன் ஆட்களை அனுப்பி பூவுலகு முழுதும் தேடிப் பார்க்க அனுப்பினான்.
லங்கையில் தேட நான் வந்தேன்.இங்கு சீதையைக் கண்டேன்'

சீதையை அபகரித்துத் தூக்கி வந்தது , தருமத்திற்கு விரோதம்.ராமனையும், வானரங்களையும் பகைத்து அழிய வேண்டாம்.சீதையை ராமரிடம் ஒப்படைக்கவும்.பிறர் மனைவியை விரும்பும் பாவம் ஒருவரை வேரோடு அழித்து விடும்.உனக்குள்ள ஒரே வழி..சீதையை ஒப்படைத்துவிட்டு சரணடைவதுதான்.நான் சொன்னதை மதித்து நல்வழியில் நடப்பாயாக'

ஹனுமானின் சொற்களைக் கேட்ட ராவணன் கோபம் மேலிட, "இவனை கொன்று விடுங்கள்' என்றான்.

"தூதுவனைக் கொல்வது தவறாகும்.வேண்டுமானால் அங்கஹீனம் செய்யலாம், கசையடி கொடுக்கலாம், சூடு போடலாம்.மரணதண்டனை கொடுப்பது என்பது ராஜநீதி அல்ல' என்றான் விபீஷணன்.

பாவ காரியம் செய்தவனை கொல்வதில் தவறில்லை என்றான் ராவணன்.

"அப்படியல்ல.இவன் என்ன குற்றம் செய்தவனாயினும்..அது இவனை பிறர் ஏவிவிட்டதால் செய்யப்பட்டது.இவன் வெறும் கருவி.இவனை யார் அனுப்பினார்களோ அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.இவனைக் கொன்றுவிட்டால் நம் எதிரிகள் இங்கு வர அவசியம் இராது.இவன் திரும்பப் போய் சொன்னால் அவர்கள் நம்மைத் தேடுவார்கள். இவனைக் கொன்றால் ராஜ தர்மத்திலிருந்து தவறியது மட்டுமே நிற்கும்" என்றான் விபீஷணன்.

"அதுவும் சரிதான்" என்ற ராவணன், "வானரத்திற்கு முக்கிய அழகு வால் இவனது வாலைக் கொளுத்தி துரத்தி விடுங்கள்' என்றான்.

உடன், வேலையாட்கள், பழந்துணிகளைக் கொணர்ந்து, ஹனுமானின் வாலில் சுற்றி எண்ணெய் விட்டு நெருப்பு வைத்தனர்.பற்றி எரியும் வாலுடன் வீதியில் ஹனுமானை இழுத்துச் சென்றனர்.

நடந்தவற்றை அசோகவனத்தில் சீதையிடம் அரக்கிகள் சொன்னார்கள்."உன்னுடன் பேசிய திருட்டு குரங்கின் வாலுக்கு நெருப்பிட்டு, தெருத் தெருவாய் இழுத்து செல்கின்றனர்' என சீதையை கேலி செய்தனர்.

சீதை அக்கினி மூட்டி, அக்கினியிடம், "நான் செய்த புண்ணியம் ஏதும் இருந்தால்...நான் பத்தினி என்பது உண்மையானால்..ஹனுமானுக்குக் குளிர்ந்து போவாயாக' என வேண்டினாள்.

ஹனுமான் தெருத்தெருவாக எல்லா இடங்களையும், குறிப்பாக கோட்டை முதலிய ரகசியங்களை பார்த்து கொண்டே போனான்.பின்னால் அது ராமனுக்கு உதவக்கூடும் என்ற எண்ணத்தில்.

திடீரென எரியும் வால் தீ குளிர்ச்சியாய் தெரிந்தது."ராம காரியத்தில் பஞ்ச பூதங்களும் உதவுகின்றனவா? அல்லது என் தந்தை வாயுபுத்திரனுக்கு, அக்கினித்தேவன் உதவுகிறானா' என்று எண்ணிய ஹனுமான்..பெரிய உருவம் எடுத்து எரியும் வாலுடன் பெரியதொரு மாளிகை மீது குதித்து ஏறினான். பிறகு அங்கிருந்து குதித்து, மாளிகை மாளிகையாகக் குதித்து,ஒவ்வொரு வீடும் பற்றி எரிய நெருப்பு வைத்துச் சென்றான்.சிறிது நேரத்தில் காற்றும் வீச எங்கும் தீ பற்றி எரிந்தது.

எரியும் லங்கையை, திரிகூடமலையில் ஓரிடத்திலிருந்து பார்த்து திருப்தியுற்றவனாக கடலில் போய் மூழ்கி வாலில் இருந்த தீயை அணைத்து நின்றான்.

அப்போதுதான் திடீரென ஞாபகம் வந்தவனாக,"ஐயோ! கோபத்தில் மதி இழந்து விட்டேனே! சீதையும் இப்பெருந்தீயில் மடிந்திருக்கக் கூடுமே.இனி நான் உயிருடன் இருந்து என்ன பயன்?' என நினைத்தான்.அப்போது ஆகாயத்தில் யக்ஷர்கள்"என்ன அற்புதம்! சீதையிருக்குமிடம் தவிர லங்கை முழுதும் தீப்பற்றி எரிகிறதே! ஹனுமானின் பராக்கிரமம் வாழ்க' என்று பேசுவது கேட்டது.

உடனே ஹனுமான், :"அப்போது சீதைதான் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள்.அதனால்தான் நெருப்பு என்னை தீண்டாமல் குளிர்ச்சியைத் தந்தது.சீதை கற்பில் அக்கினிப் போன்றவள்.அந்த அக்கினியை அக்கினி என்ன செய்யும்? " என்றபடியே அசோகவனம் சென்றான்.

சிம்சுபா மரத்தடியில் சீதையைக் கண்டவன், "தாயே! இது தங்கள் சக்தி..நான் போய் வருகிறேன்.விடை கொடுங்கள்" என்றான்.

சீதையும், "உன்னால் இயலாத காரியம் ஏதுமில்லை.சீக்கிரம், ராமனுடன் வந்து அரக்கர்களை அழித்து என்னை அடையச் செய்வாயாக"என்றாள்.

ஹனுமான் சீதையிடம் விடை பெற்று ஆகாயத்தில் கிளம்பினான்.வழியில் மைனாக மலையை அன்புடன் தடவிக் கொடுத்தபடியே சென்றான்.மகேந்திர மலையின் சிகரம் தெரிந்ததும் அக்கரை வந்தது அறிந்து கர்ஜனை செய்தான்.

வானில் ஹனுமானைப் பார்த்த வானரங்கள் மகிழ்ச்சியில் கூத்தாடின.

ஜாம்பவானும், ஹனுமான் வெற்றியுடன் திரும்புகிறான்..அந்த வெற்றிக்கான கர்ஜனையே இது என்றான்.

பெரும் ஆரவாரத்துடன் மகேந்திரமலையில் ஹனுமான் இறங்கினான்.

No comments: