Friday, 21 March 2014

10- சித்தாசிரமம்


அடுத்த நாள் காலை. விசுவாமித்திரர் ராமனைப் பார்த்து, 'தாடகையை அழித்ததற்கு நான் என்ன கைமாறு செய்வேன்' என்றார்,பின், தான் தவத்தினால் பெற்ற அனைத்து திவ்யாஸ்திரங்களையும் போதித்தார்.அஸ்திரங்களுக்கான தேவதையும் தோன்றி, 'உமது உத்தரவுக்கு அடி பணிவோம்' என்று சொல்லி மறைந்தன.ராமனும், தம்பி லட்சுமணனுக்கு அவற்றை போதித்தான்.

'இந்த அஸ்திரங்களைக் கொண்டு, தேவாசுரர்கள்,கந்தர்வர்கள்,அரக்கர்கள் ஆகியவர்களை யுத்தத்தில் நீ வெல்வாய் என விசுவாமித்திரர் ஆசிர்வதித்தார்.

பின் அவர்களை சித்தாசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.'ராமா! இது ஆதி நாராயணன் மக்களுக்கு தவ வழியை உபதேசிக்க உதாரணமாக தவம்புரிந்த இடம்.மகாவிஷ்ணு வாமனனாக அவதாரம் எடுத்த இடமும் இது' என்றார்.

பிரகலாதனுடைய மகன் வீரசேனனின் புத்திரன் மகாபலி என்ற அரசன் புகழுடன் அரசு புரிந்தான்.இந்திரனின் ஆதிக்கத்தையெல்லாம் மகாபலி ஆக்கிரமித்துக் கொண்டான்.

இந்திரனைப் பெற்ற காசியப முனிவரும், அவரது மனைவி அதிதியும் மகாவிஷ்ணுவைக் குறித்து பெருந்தவம் செய்து' நாராயணா! நீர் எங்களுக்கு புத்திரனாகவும், இந்திரனுக்குத் தம்பியாகவும் அவதரித்து...இந்திரனையும், தேவர்களையும் மகாபலியிடம் இருந்து காக்க வேண்டும்' என பிரார்த்தித்தனர்.அதனால் மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அதிதிக்கு மகனானார்.

மகாபலியின் யாகத்திற்கு குள்ள வடிவில் வாமனன் சென்றார்.மகாபலியின் குரு சுக்கிரர் விஷயத்தைத் தெரிந்து கொண்டு,'இவர் யாசிப்பதைத் தர வேண்டாம்" என்றார்.

ஆனால், மகாபலியோ, 'ஆண்டவனே என் யாகத்திற்கு வந்து யாசகம் பெறுவது என் பாக்கியம்' என்றான்.

என் பாதத்தில் அளந்த மூன்றடி பிரதேசம் வேண்டும்' என்று வாமனன் கேட்க, 'தந்தேன்' என்றான் மகாபலி.

வாமனன் , தன் முதலடியில் பூவுலகையும்,வானுலகை இரண்டாம் அடியாலும் அளந்தார்.மூன்றாவது அடியாக தன் பாதத்தை மகாபலியின் தலைமீது வைத்தார்..உலகப் பரப்புக்கு சமமானது பக்தனின் தலை என்பதே இதன் பொருள்.

புண்ணீய சித்தாசிரமத்தின் கதையைக் கூறிய விசுவாமித்திரர், 'நானும் இங்கு ஆசிரமம் மைத்துள்ளேன்.என் வேள்விக்குத் தடையாக அரக்கர்கள் வேதனைத் தருகின்றனர்.அவர்களை நீ அழிக்க வேண்டும்' என்றார்.

மறு நாள் ராம, லட்சுமணர்கள் விசுவாமித்திரரை வணங்கி, 'ராக்ஷசர்கள் எப்போது வருவார்கள்?' என்றனர்.

ஆசிரமத்திலிருந்த மற்ற ரிஷிகள் பதிலுரைத்தனர்.' மகரிஷி மௌனவிரதம்.இனிப் பேச மாட்டார்.ஆறு நாட்கள் நீங்கள் தூங்காமல் யாகத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்றனர்.

ஐந்து நாட்கள் ஓடின..ஆறாவது நாள் காலை, ராமன் ,லட்சுமணனிடம்' தம்பி, இதுதான் அரக்கர்கள் வரும் சமயம்' என்றான்.

அதே சமயம், வேள்வி அக்னிகுண்டத்திலிருந்து நெருப்பு எழுந்தது.ராக்ஷசர்கள் ஆகாயத்தில் வந்ததை அக்னி சொன்னது. மாரீசன், அரக்கர்கள் கூட்டத்துடன் நின்றான்.

உடன் ராமன் அஸ்திரத்தை எடுத்துத் தாக்க, மாரீசனை அது தாக்கி வீழ்த்தியது.பின் ராமன் ஆக்னேயாஸ்திரத்தை விட்டான்.அது சுபாஹூவைத் தாக்க ..அவன் மாண்டு வீழ்ந்தான்.பின் அரக்கர்கள் கூட்டம் முழுதும் அழிக்கப்பட்டன.

விசுவாமித்திரர் மகிழ்ந்தார்.

அடுத்த நாள் முனிவரை நோக்கி,'அடுத்து என்ன?" என்றான் ராமன்.

அவதார ரகசியத்தை முனிவர் அறிவார். அடுத்து ராமனுக்கு தான் செய்ய வேண்டிய பணியை எண்ணினார்.

ஆம்...சீதா கல்யாணம் தான் அது..

ஆகவே..விசுவாமித்திரர், 'நானும் மற்ற ரிஷிகளும் மிதிலைக்குப் போவதாக இருக்கிறோம்.அங்கு மன்னர் ஜனகர் ஒரு யாகம் செய்ய உள்ளார்.ஜனகரின் அற்புத வில்லை , ராமா..நீ தரிசிக்க வேண்டும்" என்றார்.

ராமனும் , லட்சுமணனும் வுசுவாமித்திரருடன் மிதிலைக்குப் புறப்பட்டனர்.

4 comments:

SURYAJEEVA said...

முதல் தொடக்கத்தில் வால்மீகி, ராமனை அவதாரமாய் எண்ணவில்லை என்று எழுதி இருந்தீர்கள், ஆனால் இங்கோ அவதார இரகசியத்தை முனிவர் அறிவார் என்று கோடிட்டு உள்ளீர்கள்... சற்று குழப்பமாக உள்ளது.... மேலும் படிப்பேன் என் சந்தேகத்தை ஆங்காங்கே உள்ளிடுவேன் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

அவதார ரகசியத்தை விசுவாமித்திரர் அறிவார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வால்மீகி ராமாயணத்தில் ஆங்காங்கே சுலோகங்களில் தெய்வ அவதாரத்தை சொல்லி வந்தாலும், ராமாயணத்தில் அவர் ராமனை ஒரு சிறந்த ராஜகுமாரனாகவும், வீரனாகவுமே சொல்கிறார்,அபூர்வ தெய்வீக நற்குணங்கள் பெற்றவன்.அவ்வளவே1 கடவுளாக அவர் வேலை செய்யவில்லை

SURYAJEEVA said...

விளக்கமளித்தமைக்கு நன்றி