Friday, 21 March 2014

7- வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி


தன் கோபத்தாலும், சாபமிட்டதாலும் தனது தவ வலிமையை இழந்து போனதால், விசுவாமித்திரர் மேற்கு நோக்கி புஷ்கர தீர்த்தத்திற்கு மேலும் தவம் செய்யச் சென்றார்.

அந்த தவம் பயன் தரும் நிலையில், ஒர் சமயம் கோபம் மேலிட தன் குமாரர்களை சபித்தார்.அதனால் தவப்பயனை இழந்தார்.இனி கோபமே கொள்ளக் கூடாது என எண்ணி பல்லாண்டுகள் தவம் செய்தார்.

பிரம்மனும், தேவர்களும் அவருக்கு உன் தோன்றி, 'விசுவாமித்திரா..இனி நீ பூரண ரிஷி ஆகிவிட்டாய்' என்றனர்.

சிவனிடம் பெற்ற அஸ்திரங்கள்,இப்போது கிடைத்த ரிஷி பதவி ஆகியவற்றுடன் திருப்தி அடையவில்லை அவர்.அவருக்கு வேண்டியதோ, வசிஷ்டருக்கு சமமான சக்தி.அதனால் மீண்டும் தவம் செய்யலானார்.

இதை எப்ப்டியாவது தடுக்க நினைத்த தேவர்கள், மேனகையை அவரிடம் அனுப்பினர்.மேனகையின் அழகில் மயங்கியவர், தனது தவத்தை நிறுத்தினார்.பத்து ஆண்டுகள் ஆனதும்..பெண்ணாசையிலிருந்து விழித்து கொண்டார்.எங்கே தன்னை சபித்து விடுவாரோ என மேனகை நடுங்கினாள்,ஆனால், 'இது என் மடத்தனம்..உன் மீது குற்றமில்லை' என அவளை அனுப்பி விட்டு, இமாலயம் சென்று தவத்தை ஆரம்பித்தார்.

திரும்ப, தேவர்களும், நான்முகனும் தோன்றி, 'விசுவாமித்திரா..நீர் மேனகையை சபிக்காமல், மீண்டும் கடுந்தவம் செய்தீர்.நீர் மகரிஷி பதவி அடைந்தீர்' என்றனர்.

அத்துடனும், திருப்தியடையா விசுவாமித்திரர் மீண்டும் தவத்தில் ஈடுபட்டார்.இச்சமயம், தேவர்கள் ரம்பையை அனுப்பினர்.

ரம்பை, விசுவாமித்திரரின் தவத்தைக் கலைத்தாள்.இதனால் கோபமுற்றவர் அவளை, கல்லாய் போக சபித்தார்.

ரிஷிகளின் கோபமே சாபமாகிறது,அதனாலேயே அவர்கள் தவப் பயனையும் இழக்கிறார்கள்,.அவர்கள் தவம் வலுவிழக்கிறது.

விசுவாமித்திரர் மீண்டும் தனது ஐம்புலன்களையும் அடக்கி தவம் செய்யலானார்.அவரது உடல் மரக்கட்டையைப் போல இருந்தது.

தேவர்கள், பிரம்மனிடம் சென்று, 'நான் முகனே..நாம் அவரது தவத்தைக் கலைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின.அவர் விரும்பிய வரத்தை தந்து விடுங்கள்' என்றனர்.

நான் முகனும், ;'விசுவாமித்திரா,,,இனி நீ பிரம்ம ரிஷி ஆனாய்' என்றார்.

ஆனாலும்..பிரம்ம ரிஷி என்பது வசிஷ்டர் வாயால் அல்லவா வர வேண்டும் என்றார் விசுவாமித்திரர்.

விசிஷ்டரும், பழைய சண்டைகளை எண்ணி புன்னகைத்து, விசுவாமித்திரரை நோக்கி, 'நீர் செய்த கடுந்தவத்தால் பயன் பெற்றீர். நீர் பிரம்ம ரிஷி என்பதில் சந்தேகமில்லை' என்றார்.

அனைவரும் மகிழ்ந்தனர்.

இப்படிப்பட்ட விசுவாமித்திரர், தசரதன் சபைக்கு திடீர் என விஜயம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

தசரதன் முனிவரின் பாதம் பணிந்து, 'பிரம்ம ரிஷியான நீங்கள் என்னைத் தேடி வந்துள்ளீர்கள்.என்னால் என்ன ஆக வேண்டும் சொல்லுங்கள்.அதைச் செய்வேன்' என்றார்.

'அரசே..நீர் பிறந்த குலம் இக்ஷுவாகு குலம்.உமது குருவோ வசிஷ்டர்.அதனால் நான் ஏதும் கேட்காமல் இருக்கையிலேயே வாக்கு கொடுத்துள்ளீர்கள்' என்றவாறே, தான் வந்ததற்கான காரணத்தை விசுவாமித்திரர் கூறலானார்.

No comments: