விசுவாமித்திரர் இப்படி தவம் செய்து கொண்டிருந்த சமயம், சூர்ய குல அரசன் திரிசங்கு என்பவன் பெரும் புகழுடன் ஆட்சி புரிந்து வந்தான்.அவன் தன் தேகத்துடன் சுவர்க்கம் செல்ல விரும்பினான்.
அதனால் ,தனது குல குரு வசிஷ்டரிடம் சென்று தனது ஆவலைத் தெரிவித்தான்.ஆனால் வசிஷ்டரோ, 'அது இயலாது.இந்த எண்ணத்தை இத்துடன் விட்டுவிடு' என்றார்.ஆனால் திரிசங்கோ, வேறு யாரையேனும் நாடியாவது என் எண்ணத்தை பூர்த்தி செய்வேன் என்றான்.
தனது குருவை அவமதித்ததால், வசிஷ்டரின் குமாரர்களும், சீடர்களும் அவனுக்கு எல்லாவற்றையும் இழந்துவிட சாபம் இட்டனர்.
அன்று தூங்கி எழுந்த திரிசங்கு, தனது அழகிய நிறம், உருவம் இழந்து அவலட்சண உருவோடு, அழுக்குத் துணி அணிந்தபடி தான் இருப்பதை அறிந்தான்.அரசனின் சாப உரு கண்டு அமைச்சர்கள், பொது மக்கள் என அனைவரும் வெறுத்தனர்.
மனம் வருந்திய திரிசங்கு, விசுவாமித்திரரைப் போய்ப் பார்த்தான்.அவரோ அவனைக் கண்டு, 'நீ திரிசங்கு அல்லவா? உனக்கு ஏன் இப்படி நேர்ந்தது? 'என்றார்.திரிசங்கு நடந்ததைக் கூறினான்.
அவன் மீது இரக்கம் கொண்ட விசுவாமித்திரர், 'உன் இதே உருவத்துடன் சுவர்க்கம் செல்வாய்' என்றார்.அதற்கான யாகத்தையும் செய்யலானார்.
அனைத்து ரிஷிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.அவரது கோபத்துக்கு பயந்த ரிஷிகள் யாகத்திற்கு வந்தனர்.ஆனால் வசிஷ்டரின் குமாரர்களோ, 'விசுவாமித்திரர் எவ்வளவு பெரிய ரிஷியானாலும், க்ஷத்திரியர் ஒருவருக்காக எப்படி யாகத்தை நடத்தலாம்' என வர மறுத்தனர்.வேள்வியின் முடிவில் விசுவாமித்திரர் தேவர்களை மந்திரம் சொல்லி அழைத்தார்.ஆனால் தேவர்கள் யாரும் வரவில்லை.இது கண்டு யாகத்திற்கு வந்திருந்த ரிஷிகள் பரிகசித்தனர்.
இதனால் கடுங்கோபம் கொண்ட விசுவாமித்திரர், தன் கையில் வைத்திருந்த வேள்விக்கான நெய் கரண்டியை உயரத் தூக்கி திரிசங்குவைப் பார்த்து,'என் முயற்சியும்,தவமும்,சக்தி அவ்வளவையும் உனக்கு தருகிறேன்,நீ உன் சரீரத்துடன் மேலே செல்..சுவர்க்கத்தை அடைவாய்' என்றார்.
அப்போது ஒரு அற்புதம் நடந்தது.
அங்கிருந்தோர் ஆவலுடன் பார்க்க திரிசங்கு அப்படியே ஆகாயத்தில் கிளம்பினான்.விசுவாமித்திரரின் தவ வலிமையை உலகமே கண்டது.
திரிசங்கு சுவர்க்கம் அடைந்தான்.
இந்திரன், ;சண்டாள சரீரத்துடன் இவன் எங்கே வருகிறான்?' என திரிசங்கை கீழே தள்ளி விட்டான்.கதறிக் கொண்டே கீழே வீழ்ந்த திரிசங்கு..'ஐயோ..என்னைக் காப்பாற்றுங்கள்' எனக் கதறினான்.
இதைக் கண்ட விசுவாமித்திரர் கோபத்துடன், 'நில்..நில்..' என வந்திருந்த ரிஷிகளிடையே ஒரு புது பிரம்மாவைப் போல ஜொலித்தார்.தலைகீழாக விழுந்து கொண்டிருந்த திரிசங்கு, விசுவாமித்திரர் 'நில்' என்றதும் நடு வானில் ஒரு நட்சத்திரமாக பிரகாசித்துக் கொண்டு அப்படியே நின்றான்,அக்கணமே திரிசங்கு நின்ற தென் திசையில் புதிய துருவம், புதிய சப்தரிஷிகள்,பல நட்சத்திரங்கள் என சிருஷ்டித்து விட்டார் விசுவாமித்திரர்.
'புது இந்திரனையும் உண்டாக்குவேன்.புது தேவர்களையும் படைப்பேன்' என அதற்கு ஆயத்தமானார்.
உடன், தேவர்களும்,ரிஷிகளும் அங்குவந்தனர்.அவரிட நயமாகப் பேசி,'திரிசங்கு முதலிய அனைத்து நட்சத்திரங்களும் தென் திசையிலேயே சாசுவதமாக இருக்கட்டும்.கோபத்தை தனித்துக் கொள்ள வேண்டும்'என்று கேட்டுக் கொண்டனர்.
விசுவாமித்திரரின் தவம் இப்படியாக செயலிழந்து விட்டது.
No comments:
Post a Comment