Friday, 21 March 2014

13 - பகீரதன்



யாகக்குதிரையைத் தேடிச் சென்ற குமாரர்கள் திரும்பாதது கண்டு சகரன், தனது பேரன் அம்சுமானை அழைத்து தேடி வரச் சொன்னான்.அவனும் பாதாளம் சென்று தேடினான்.ஓரிடத்தில் சாம்பல் குவியலையும், யாகக்குதிரையையும் கண்டான்.

சகர ராஜாவின் பத்தினி சுமதியின் சகோதரனான கருட பகவான் அங்கு வந்து அம்சுமானைப் பார்த்து, 'இந்த சாம்பல் குவியல்தான் சகர குமாரர்களின் மிச்சம். கபில தேவரால் சபிக்கப்பட்டு இப்படி ஆயினர்.குதிரையை அழைத்துச் செல்.சபிக்கப்பட்ட ராஜகுமாரர்கள் நற்கதியடைய தேவலோகக் கங்கையை இங்கே அழைத்து வந்து இந்த சாம்பல் குவியலை அதில் கரையுங்கள்' என்றார்.

அம்சுமான் குதிரையுடன் திரும்பி, மன்னனிடம் விஷயத்தைச் சொன்னான்.அன்னனும் வருந்தி, யாகக் காரியங்களை முடித்துவிட்டு, கங்கையைப் பற்றி யோசித்து , யோசித்து ..அந்த வருத்ததிலேயே உயிர் நீத்தான்.

சகரனுக்குப் பிறகு அம்சுமானும், அவனுக்குப்பிறகு திலீபனும் பின் பகீரதனும் அயோத்தியில் அரசாண்டனர்.

பகீரதனுக்கு, மக்கட் பேறு இல்லை.அதைக் கருதியும்,கங்கையை பூமியில் கொண்டு வருவதற்காகவும், கோகர்ணம் சென்று, நீண்ட தாம் செய்தான்.நான்கு பக்கமும் தீ மூட்டி, தலை மேலே வெயில்காய மாதம் ஒரு முறை மட்டும் உணவு உண்டு பல்லாண்டு தவம் செய்தான்.(அதனால்தான் இன்றும்..விடாமுயற்சியுடன் காரியத்தில் ஈடுபடுவோர்க்கு, பகீரதனை ஒப்பிட்டு..பகீரத பிரயத்தனம் என்ற வழக்கம் வந்தது.)

நான்முகன், அவன் தவம் கண்டு தரிசனம் தந்தான்.அவனிடம் பகீரதன், தனக்கு புத்திரப் பேறு வேண்டும் என்றும்,தனது மூதாதையர் சாம்பல் பாதாளத்தில் கிடப்பதாகவும்..அதைக் கரைக்க கங்கையை பூமிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டார்.

'உன் இஷ்டப்படி நடக்கும்' என்ற பிரம்மன், கங்கை கீழே இறங்கினால்..அதன் வேகம் பூமி தாங்காது.ஆகவே அதை தாங்கக் கூடிய உமாபதியை வேண்டுவாய்' என்றார்.

விடாத தவத்தால் பகீரதன் உமாபதியின் அருளையும் பெற்றான்.'மலைராஜன் மகள் பூமியில் இறங்கும் போது என் தலையில் அவளைத் தாங்குவேன்;' என்றார் உமாபதி.

கங்கை முழு வேகத்தில் ஆகாயத்திலிருந்து ஆகாயகங்கையாக மகாதேவனின் சிரசில் இறங்கினாள்.என் வேகத்தால் சங்கரனையும் பாதாளத்துக்கு அடித்து செல்வேன் என்றாள் இறுமாப்போடு.

அவளது கர்வத்தை அடக்க எண்ணிய சங்கரன் அவளை தனது பெருஞ்சடையில் நிறுத்தி வெளிவராமல் செய்தார்.

இது கண்டு பகீரதன் வருந்தினான்.இது கண்டு மகாதேவன் பகீரதனுக்கு இரங்கி கங்கையை ஏழு சிறு ஆறுகளாக கீழே விட்டா.ர். மூன்று ஆறு கிழக்காகவும், மூன்று மேற்காகவும் ஒன்று பகீரதடனும் சென்றன,

இப்படி சென்ற நதி, ஓரிடத்தில் ஜன்ஹூரிஷியின் யாகத்தைக் கலைத்தது. உடன் கோபமுற்ற அந்த ரிஷி கங்கையை கையில் எடுத்து ஆசமனம் செய்ய..நதி முற்றிலும் மறைந்தது.

தேவரிஷி கணங்கள் பகீரதனின் தவத்தை பயன் அடையச் செய்ய வேண்டும் என அவரிடம் வேண்ட, அவரும் தனது வலது காது வழியே நதியை வெளியே விட்டார்.ரிஷியின் உடலிலிருந்து வெளிப்பட்டதால் ரிஷியின் பெண்ணாகவுமான கங்கை ஜான்ஹவி என்ற பெயர் பெற்றாள்.பின் எந்த இடையூறும் இன்றி பகீரதன் தன் மூதாதையரின் சாம்பல் குவியலை கரைத்து அவர்களுக்கு நீர்க்கடன் செய்து முடித்தான்.

பகீரதனின் தளராத முயற்சியால் பூமிக்கு வந்த புண்ணிய நதி பாகீரதி என்ற பெயரும் பெற்றது.

உன் முன்னோர்களாகிய சகர குமாரர்கள் வெட்டிய சாகர சரித்திரமும், பகீரதன் பிரயத்தனமும் கங்கையை பூமிக்கு இறக்கியது.இதுவே கங்கையின் சரிதம்' என்றார் விசுவாமித்திரர்.

(கங்கைக்குப் போய் ஸ்நானம் செய்தால், பித்ரு காரியங்கள் முடித்தால் நல்லது , புண்ணியம் என இன்றும் மக்களியையே இதனால்தான் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது)  

No comments: