கோசல நாடு..
கங்கைக்கு வடக்கே சரயு நதி பாய்ந்து, செழிப்புற்ற விசாலமான நாடு.இதன் தலைநகரம் அயோத்தி.
மனு என்னும் சூரிய குல அரசனால் நிர்ணயிக்கப்பட்ட நகரம்.
தசரத சக்கரவர்த்தி இங்கிருந்து ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தார்.தசரதன் தேவர்களுக்காக யுத்தம் செய்தவன்.மூவுலகிலும் புகழ் பெற்றவன்.இந்திரன், குபேரன் ஆகியவர்களுக்கும் சமமாக போற்றப்பட்டவன்.
அதனால் கோசல நாட்டு மக்கள் மிகவும் யோக்கியமானவர்களாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தனர்.
சேனாபலம், கோட்டை, மதில் சுவர்கள்,அகழிகள், எதிரிகளைத் தாக்கும் எந்திர அமைப்பு இவைகளால் காக்கப்பட்ட நகரம். ஆகவே, எதிரிகளால் யுத்தம் செய்து பிடிக்க முடியாததாக இருந்தது.
தசரதனுக்கு யோசனை சொல்வதிலும், இட்ட பணிகளை மேற்கொள்வதிலும் எட்டு மந்திரிகள் இருந்தனர்.தர்மோபதேசம் செய்யவும், பூஜை, வேள்விச் சடங்குகள் நடத்தவும், வசிஷ்டர், வாமதேவன் முதலிய ரிஷிகளும் அரசன் பக்கத்திலேயே இருந்தனர்.
மக்களை கசக்கிப் பிழியாமல், சக்திக்கு ஏற்ற வரிகள் மட்டுமே வசூலிக்கப்பட்டன.குற்றவாளியின் சக்தி, சூழ்நிலை இவற்றிற்கேற்ப தண்டனைகள் விதிக்கப்பட்டன.
ஆண்டுகள் பல கழிந்தன.
ஆயினும், தசரத சக்கரவர்த்தியின் மனதில் மட்டும் ஒரு பெரும் குறை இருந்து வந்தது.
No comments:
Post a Comment