Friday, 21 March 2014

3- புத்திரபாக்கியம்

தசரதனுக்கு இருந்த அந்த பெருங் குறை புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்ததுதான்.

ஆகவே, அசுவமேதயாகமும், புத்திர காமேஷ்டியும் செய்ய எண்ணினான்.பின், ரிஷ்யசிங்க முனிவரை தருவித்து, அவர் தலைமையில் வேள்வியை நடத்தத் தீர்மானித்தான்.

யாகக்குதிரையும் அதனுடன் ஒரு வீரர் படையையும் பல நாடுகள் சுற்றி வரும்படி அனுப்பப்பட்டன.ஒரு வருஷம் கழித்து, எந்த இடையூறுமின்றி வீரர்கள் குதிரையுடன் நகரம் திரும்பினர்.

பின், சாஸ்திரப்படி யாகம் ஆரம்பித்தது.

அயோத்தியில், இது நடந்து கொண்டிருக்க, தேவர்கள் ஒரு நாள் பிரம்மனைக் காணச் சென்றனர். அவர்கள் நான்முகக்கடவுளைப் பார்த்து, "ஐயனே! உமது வரம் பெற்ற ராவணன் என்னும் அரக்கன் எங்களுக்கெல்லாம் தொல்லைக் கொடுத்து வருகிறான்.அவன் இந்திரனையேத் துரத்தி விட்டு தேவலோகத்தையே கைப்பற்ற எண்ணுகிறான்.அவ கொடுமையை நீங்கள் தான் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்றனர்.

இதைக் கேட்ட பிரம்மன்,' இந்த ராவணன், வரம் கேட்கும் போது, ஒரு விஷயத்தை விட்டு விட்டான்.தேவர்கள், கந்தர்வ ராக்ஷசர்களால் தனக்கு மரணம் உண்டாகக்கூடாது என வரம் பெற்றான்.மானிடர்களைப் பற்றிக் கேட்கவில்லை.அதனால் அவனை அழிக்கவழி உண்டு' என்றார்.

தேவர்கள் உடன் விஷ்ணுவைச் சந்தித்து முறையிட்டனர்.

"லோகநாதனே! ராவணன் பிரம்மாவிடம் வரம் பெற்று இம்சித்து வருகிறான்.அவன் கேட்ட வரத்தில், மனிதனால் அவனுக்கு மரணம் இல்லை என்று கேட்கவில்லை,ஆகவே..தாங்கள்..மனித ஜன்மம் எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும்" என்றனர்.

விஷ்ணுவும், அப்படியே என ஒப்புக் கொண்டு, "பூஉலகில் புத்திரன் வேண்டி தசரதன் யாகம் செய்கிறான்.அவனுக்கு நான்கு குமாரர்களாக நான் அவதரித்து, ராவணனைக் கொன்று..உங்களுக்கு விடுதலைத் தருவேன்" என்றார்.

@@@@@@         @@@@@@@@

ரிஷ்யசிங்கர் வேல்வித் தீயில் ஆகுதி விட்டார்,தீ பொங்கி எழ, அதிலிருந்து ஒரு பெரிய உருவம் ஒரு தங்கப் பாத்திரத்தை ஏந்தி வந்தது. அது, 'தசரத மகராஜா..உங்கள் பிரார்த்தனையை ஏற்று, தேவர்கள் இந்த பாயசத்தை உங்கள் மனைவியர்க்கு அனுப்பியுள்ளனர்.இதை பெற்று கொண்டு..உங்களது பத்தினிகளுக்கு  தருவீர்களாக' என்று, பாத்திரத்தை அரசனிடம் கொடுத்து மறைந்தது.

அந்தப்புரம் வந்த மன்னன் பாயசக் கிண்ணத்தை தன் மனைவியரிடம் கொடுத்து, 'இதைப் பருகி, நீங்கள் புத்திரபாக்கியம் அடைவீர்களாக!' என்றார்.

தசரதனுக்கு மூன்று மனைவியர்.

பாத்திரத்தில் இருந்த பாயசத்தில் பாதியை கௌசல்யா தேவி அருந்தினாள்.

மிச்சத்தில் பாதியை சுமித்திரை அருந்தினாள்.

மிச்சத்தில் பாதியை கைகேயி அருந்தினாள்.

மீதமிருந்ததை மீண்டும் சுமத்திரை அருந்தினாள்

எதிர்ப்பார்த்தபடி மூன்று மனைவியரும் கர்ப்பம் அடைந்தனர். 

No comments: