ராமன் கௌசல்யாதேவியைப் பார்க்கச் சென்றான்.ராமனைக் கண்ட அன்னை மனம் மகிழ்ந்து, அவனை ஆசனத்தில் அமரச் சொன்னாள்.
'அன்னையே! நான் இப்போது ஆசனத்தில் அமரக்கூடாது.நான் இப்போது ஒருதபஸ்வி.தங்களுக்கு வருத்தம் தரும் சமாச்சாரம் ஒன்றை இப்போது சொல்லப் போகிறேன்.தாங்கள் அதைப் பொறுத்து, என்னை ஆசிர்வதிக்க வேண்டும்' என்றவாறே, ராமன் நடந்த விஷயங்களைக் கூறினான்.
கௌசல்யை மகனை கட்டி அழுதாள்.
அதைக் கண்ட லட்சுமணனுக்கு தந்தையின் மீதான கோபம் அதிகரித்தது."மன்னன் ஏன் அப்படிச் செய்தார்?ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்டு அதர்மம் செய்யலாமா? அண்ணா. நீயும், நானும் நம் தந்தையை தகர்த்து விடுவோம்.நம்மை எதிர்ப்பவரை அழிப்போம்' என்றான் லட்சுமணன்.
'ராமா..நீ வனத்திற்குச் செல்ல வேண்டாம்.அப்படிச் செல்வதானால், நானும் உன்னுடனேயே வருவேன்' என்றால் கௌசல்யை.
அதற்கு ராமன், 'தாயே! என்னுடன் யாரும் வரவேண்டாம்.நீங்கள் தந்தைக்கு உறுதுணையாய் இருங்கள்.அது உங்களது கடமை.நான் வனவாசம் முடிந்து திரும்பியதும், நாம் சந்தோஷமாக வாழலாம்' என்றான் அன்னையிடம்.பின் லட்சுமணனிடம், 'லட்சுமணா! நீ பேசியது மிகவும் தவறு. உனக்கு என்னிடம் உள்ள அன்பை அறிவேன்.ஆனாலும், நீ பேசியது நம் வம்சத்திற்கு ஆகாது.
தம்பி, நீ எனது வெளியில் நடமாடும் உயிரல்லவா? நீ தைரியசாலி.துக்கத்தை அடக்கி ஆள வேண்டும்.இப்போதய துக்கத்தை சந்தோஷமாக மாற்றிக் கொள்.தந்தை கொடுத்த வரத்தை மீறினால் அது அவருக்கு இழுக்கு அல்லவா? இதுவரை நடத்திய சகல தருமமும்,தானமும், புன்ணிய காரியங்களும்,பயனன்றிப் போகும்.நமக்கு உயிர் அளித்த தந்தை நிம்மதியாய் இருக்க வேண்டாமா? இப்போது என் மனம் வனம் செல்வதில் ஈடுபட்டு விட்டது.பரதன் பட்டாபிஷேகமே இப்போது நடைபெற வேண்டும்.நாம் அதை தாமதப் படுத்தக் கூடாது.தாமதப் படுத்தினால், கைகேயி அன்னைக்கு சந்தேகம் ஏற்படும்.அவருக்கு இப்படி எண்ணம் ஏற்பட்டது அவரது தவறல்ல.விதியின் செயல்.அதனால் அவரை நிந்திக்கலாகாது.
வனம் செல்வதற்கான சங்கற்பம் முறைப்படி செய்து, பெரியவர்கள் ஆசி பெற்று..நான் உடனே புறப்பட வேண்டும்'
ராமனின் அறிவுரையும் , சமாதானமும் லட்சுமணனின் கோபத்தை சற்றே தணித்தது.ஆனாலும் லட்சுமணன் கூறினான்.....
'கைகேயியின் சூழ்ச்சிக்கு விதியைக் காரணமாக்கினாலும், நாம் சும்மா இருக்கக்கூடாது.வீர புருஷர்கள் விதிக்கு அடங்குவதா?ராமனுக்கு பட்டாபிஷேகம் என அறிவித்துவிட்டு..எப்போதோ கொடுத்த வரங்களை இப்போது புதுப்பித்து உங்களை காட்டுக்குப் போ என்று சொல்வது அரச லட்சணமா? புருஷ லட்சணமா? விதி என்று அதற்கு தலை வணங்கக் கூடாது.நாம் வீரர்கள்.விதியை எதிர்த்து போரிடுவோம்.உங்களை வனம் செல்லச் சொன்னவரை வனத்திற்கு அனுப்புவேன் இப்போது உங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களை தொலைத்துவிட நான் இருக்கிறேன்.என் வேலையைத் தொடர எனக்கு உத்தரவு அளிக்க வேண்டும்?'
லட்சுமணன் பேசியதைக் கேட்ட ராமன்,' நம் பெற்றோர் உயிருடன் உள்ளவரை அவர்கள் சொற்படி நடக்க் வேண்டியது நம் கடமை.பிதாவின் கட்டளையை மீறக்கூடாது.நான் சொல்வதைக் கேள்' என்றபடியே லட்சுமணனின் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்து சமாதானப் படுத்தினான்.
லட்சுமணனும் ஓரளவு சமாதானம் ஆனான்.
2 comments:
ராமரின் கடமை இன்றைக்கு ஒவ்வொரும் உணர வேண்டியது...
அருமையான பதிவு.
மிக்க நன்றி.
Post a Comment