தசரதன் கைகேயி சொன்னதைக் கேட்டு பிரக்ஞை இழந்தான்.சிறிது நேரம் கழித்து நினைவு அடைந்து, 'ராமன் உனக்கு என்ன செய்தான்? பெற்ற தாயாய் உன்னைப் பார்த்தானே! ராமனை இழந்தால் ,என்னுயிர் நிற்காது.தண்ணீர், சூரிய ஒளி இல்லாவிடினும் சமாளிப்பேன்..ஆனால் ராமன் இல்லையேல் உடன் என் உயிர் பிரியும்.உன்னை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.இந்த எண்ணத்தை விடு.எனக்கு இரு குழந்தைகள்.ராமன் தான் மூத்தவன்..என பல முறை சொல்லியிருக்கிறாயே..உன் புத்தியை யார் கெடுத்தது? ராமன் உன்னிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளான்? அவனை காட்டுக்கு அனுப்பச் சொல்ல உனக்கு மனம் எப்படி வந்தது?ராமனின், சத்திய சீலம், சிநேகம்,அறிவு, படிப்பு,வீரம்,அடக்கம் என எல்லாவற்றையும் அனைவரும் பாராட்டுகின்றனரே! அவனை காட்டுக்கு போகட்டும் என்கிறாயே.என் இறுதி காலத்தில் என் மேல் இரக்கம் காட்டு.இந்த ராஜ்ஜியத்தில் எதை வேணுமானாயினும் கேள்.தருகிறேன்.அதர்மத்தை செய்யச் சொல்லாதே' என்று கைகேயிடம் வேண்டினான்.
கைகேயியோ, சற்றும் இரக்கம் இன்றி,'கொடுத்த வரத்தை புறக்கணிக்காதீர்.கொடுத்த வாக்கை பொய்யாக்கினான் என்ற சொல்லுக்கு ஆளாகாதீர்கள்.நான் கேட்டதை நிறைவேற்றாவிடின் உம் எதிரிலேயே விஷம் குடித்து இறப்பேன்.என் மகன் பரதன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்' என்றாள்.
இரக்கமற்ற மனைவியைப் பார்த்த தசரதன் மீண்டும் மயங்கி எழுந்தான், பின்,' உனக்கு யார் இப்படி உபதேசித்தது?என் மகன் பரதன் ஒருநாளும் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டான். நாளை உலகு, மனைவியின் நிர்ப்பந்ததால் தசரதன் தன் மகனை காட்டுக்கு அனுப்பினான் என்று சொல்லுமே! கௌசல்யை நீ சொன்னதைக் கேட்டிருந்தால் உயிரை விட்டு விடுவாளே1உன் அழகைக் கண்டு மோசம் போனேனே! நீ பெண்ணா? நீ வனம் செல்ல வேண்டும் என்று கேட்டால் ராமன் உடன் அதற்கு பணிவான்.ஆனால் இங்கு, நான், கௌசல்யை, சுபத்திரை அனைவரும் மரிப்போம்' என்றான்.
பரதன் நீ சொன்னதற்கு சம்மதிப்பானாகில், அவன் எனக்கு உத்தரகிரியை செய்ய வேண்டியதில்லை.வெட்கமற்ற பெண்ணே! புருஷனை இழந்து விதவையாகி உன் மகனுடன் சந்தோஷமாக ராஜ்ஜியத்தை அனுபவி' என்றெல்லாம் அரற்றினான் மன்னன்.
ஆனால் கைகேயியோ, "நீ சத்திய சந்தன்.சொன்ன சொல் தவறாதவர்..தவறவும் கூடாது' என்றாள்.
அப்படியாயின் ராமன் வனம் போவான்..நான் சாவேன் என்றான் மன்னன்.
பின் தசரதன், 'பொழுது விடிந்தால் என் செய்வேன்? நிசியே நீ விடியாதே.! கைகேயி மீண்டும் கேட்கிறேன் என் மீது இரக்கம் காட்டு..இந்த ராஜ்ஜியத்தையே தருகிறேன்.நாளை பட்டாபிஷேகம் நடத்த உதவு''என்றவாறு கைகேயியின் கால்களைப் பிடித்து மன்றாடினான்.
அவளோ பிடிவாதமாக இருந்தாள்.
"மந்தரத்துடன் கையைப் பிடித்து தீயின் முன் உன்னைக் கொண்டேன்.இப்போது உன்னை நீக்கினேன். பொழுது விடியப் போகிறது.பட்டாபிஷேகம் இல்லை.ராமன் எனக்கு உத்தரகிரியை செய்வான்' என்றான் மன்னன்.
:வீணாக பிதற்றாமல் ராமனை உடனே வரவழைக்கவும்.பரதனுக்கு ராஜ்ஜியம் என்று சொல்லி அவனை வனத்துக்கு அனுப்பவும்.உமது சத்தியத்தைக் காப்பாற்றவும்.தாமதம் வேண்டாம்" என்றாள்.கைகேயி.
'சரி...இதுதான் உன் முடிவென்றால்..ராமனை அழை.அவன் முகத்தையாவது நான் பார்க்கிறேன்.நான் இறப்பது நிச்சயம்.சத்தியம் என்ற கயிற்றில் கட்டப்பட்ட என்னல் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லியபடியே மீண்டும் மன்னன் நினைவிழந்தான்.
4 comments:
என்னவொரு பிடிவாதம்...
அருமையான பதிவு.
நன்றி.
எளிய நடையில் ராமாயணத்துக்கு நன்றி!
அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் ....!
Post a Comment